சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வடிவேலு பாடியுள்ள ‘என்னடா பொழப்பு இது’ பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரும் ஜூன் 6 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காளி வெங்கட் பேசியதாவது:
இயக்குநர் கார்த்திகேயன் மணி வீட்டுக்கு அழைத்து கதை சொன்னார். அதுவே எனக்கு புதிதாக இருந்தது. இந்தக்கதை கேட்டவுடனே, எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள். பிள்ளைகள் வயதுக்கு வரும் வரை அப்பாவிடம் பாசமாக இருப்பார்கள். வயதுக்கு வந்ததும் அப்பாவிடமிருந்து விலகத் தொடங்குவார்கள். இதைத்தான் படம் பேசுகிறது” என்றார்.
நடிகர் கலையரசன் பேசியதாவது…
காளி வெங்கட் கலைத்துறை தந்தை. அவருக்குள் நிறையக் கதைகள் இருக்கு. படப்பிடிப்பில் இருக்கும் போது, ஆறு மணிக்கு மேல் பாடுவாரு, ஆடுவாரு, மிமிக்ரி பண்ணுவாரு, ஜெபம் பண்ணுவார், அதே மாதிரி நிறையக் கதைகள் சொல்லுவார். அவர் ஊரில் இருக்கும் வளையல் தாத்தான்னு ஒருவருடைய கதையை சொல்லியிருக்கார். எனக்கு அதை படமாக பண்ண ஆசை. அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு 60 வயதுக்கான ஞானம் இருக்கிறது.”என கலகலப்பாக பேசினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரமேஷ் திலக்:
“டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு என்னால் வரமுடியவில்லை. அதற்குக் காரணம் காளி வெங்கட் தான். ஒன்றரை மாதமாக அவருடன் ட்ராவல் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுத்திக் கொண்டிருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதால் அப்படி இருக்கிறார். இவர் வாழும் இந்த நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்ற நெகிழ்ச்சி உள்ளது எனக்கு. காளி வெங்கட் கொண்டாடப்பட வேண்டியவர். இந்த வருடம் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.
இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலில், எஸ். ஆர். பிரபு இந்தப்படத்தை வாங்கியுள்ளார். இரண்டாவது டிரெய்லரும் பாடலும் நன்றாக உள்ளது. மூன்றாவது, ஒரு படம் டப்பிங்க் எல்லாம் முடித்து நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும்.” என்றார்.