மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர்., மூர்த்தி, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், 9 பேரின் உடல்கள் மதுரையிலிருந்து மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. காலை 10:15 மணிக்கு சென்னையிலிருந்து லக்னோ புறப்பட்ட விமானத்தில் 5 பேர் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், 11:15 மணிக்கு மற்றொரு விமானத்தில் நான்கு பேரின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 9 பேரின் உடல்களுடன் அவர்களது உறவினர்கள் 14 பேரும் சென்றுள்ளனர்.
எஞ்சியுள்ள 41 பேர் மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக லக்னோ அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.