மதுரை ரயில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் செல்லும் இந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, ரயிலில் இருந்த பயணிகள் சிலர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக ரயில் பெட்டி முழுவதும் பரவியது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் விதிகளுக்கு புறம்பாக மூன்று சிலிண்டர்களை எடுத்து வந்துள்ளனர். விறகு எடுத்து வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.