“பலர் கட்சியில் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது.” என ராமதாஸ் கூறியுள்ளார்
வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பெருவிழா மாநாடு நேற்று மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:
“10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் அறிவிக்கப்படும். இதுவரை காணாத போராட்டமாக அது இருக்கும். எனக்கு ஆளும் ஆசை இருந்திருந்தால், பிரதமராக, அமைச்சராக இருந்திருப்பேன். தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். அந்த ஆசை எனக்கு இல்லை. உங்களுக்காக வாழ்கிறேன்.
50 தொகுதிகளில் நாம் சாதாரணமாக நாம் வெற்றி பெற முடியும். ஆனால், பலர் கட்சியில் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்.எல்.ஏ. என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் உழைப்பு பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது. காக்கா பிடித்தாலும் எடுபடாது. இனி உழைக்க வேண்டும்.
கடசி காலத்தில் காந்தியை போன்று கோல் ஊன்றியாவது இந்த ஊமை மக்களுக்கு பாடுபட்டு உயிர்விடுவேன் என கூறியிருந்தேன். வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என எதுவும் நடக்காது தம்பி... கண்ணு. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி.
உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாரிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. எனக்கு 87 வயது. என் வயதை நினைத்து ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள். இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல. என்னுடைய உழைப்பால் உருவானது. அதனால்தான் இப்போது நீங்கள் சொகுசு காரில் வருகிறீர்கள். கட்சியை உயிர் என்று நினையுங்கள். அப்போதுதான் நாம் கோட்டைக்கு போக முடியும். என்னுடைய ஆசை. நாம் ஆள வேண்டும் என்பதுதான்” என்றார்.
சமீபத்தில் அன்புமணியுடன் வெளிப்படையாகவே மோதலை வெளிப்படுத்தி இருந்தார் ராமதாஸ். இந்நிலையில் இப்படி சில வார்த்தைகளை கூட்டத்தில் அவர் வெளிப்படுத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.