கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவிவிலகியதை அடுத்து, புதிய பிரதமராக மார்க் கேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் ஒட்டவா நகரில் நேற்று ஞாயிறன்று, புதிய பிரதமரைத் தேர்வுசெய்ய ஆளும் தாராளவாத லிபரல் கட்சியின் 1.52 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் 86 சதவீதம் வாக்குகளைப் பெற்று முன்னாள் வங்கியாளரான 59 வயது மார்க் கேனி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா பிரீலாண்டுக்கு சொற்ப வாக்குகளே கிடைத்தன.
நீண்டகாலக் கூட்டாளி நாடான அமெரிக்காவுடன் வர்த்தகப் பிரச்னை தொடங்கியுள்ள நிலையில், கேனி பதவியேற்கிறார்.
தேர்வுக்குப் பின்னர் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய கேனி, “ நம்முடைய தேசப் பொருளாதாரத்தைப் பலவீனமாக சிலர் முயற்சி செய்கின்றனர்.” என அவர் பேசத் தொடங்கியதுமே, அரங்கத்திலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரைக் கூறினர்.
அதை ஆமோதித்த கேனி, ” டிரம்ப் கனடாவின் பணியாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நம்முடைய வர்த்தகத்தையும் தாக்கியுள்ளார். இதில் அவர் வெற்றிபெற விட்டுவிட முடியாது. வழக்கம்போல இதுவும் ஒன்று என்கிறபடியான விசயம் இது இல்லை.” என்று குறிப்பிட்டார்.
“இதற்கு முன்னர் நாம் கற்பனை செய்து பார்த்திடாத செயல்களை நாம் செய்தாக வேண்டும். சாத்தியமில்லாதது என நினைத்துவரும் வேகத்திலும் நாம் அதைச் செய்யவேண்டியுள்ளது.” என்றும் கேனி வலியுறுத்தினார்.
பல்வேறு உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு இடையே, முன்னாள் பிரதமர் ட்ரூடோ கடந்த ஜனவரியில் தன்னுடைய பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.
கனடா மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பை அவர் எதிர்த்துவந்துள்ள நிலையில், புதிய பிரதமர் கேனியும் அதே நிலையைத் தொடருவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா நமக்கு மரியாதை தரும்வரை நம்முடைய பதில் வரிவிதிப்பு தொடரும் என்று கேனி கூறினார்.
ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள கனடா நாட்டின் புதிய பிரதமர், முன்னதாக கனடா, இங்கிலாந்து இரண்டு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு ஆளுநராக இருந்தவர். அந்த அனுபவம் டிரம்பின் முடிவை எதிர்கொள்வதில் கைகொடுக்கும் என ஆளும் கட்சியின் முடிவு உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.