உலகக்கோப்பை கிரிக்கெட்: அட்டவணை வெளியீடு- முழு விவரம்!
பிசிசிஐ

உலகக்கோப்பை கிரிக்கெட்: அட்டவணை வெளியீடு- முழு விவரம்!

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கெனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. அந்த எட்டு அணிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும். மீதி இரண்டு அணிகள் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் தகுதி சுற்றுப் போட்டியின் மூலம் உறுதியாகும்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அதே போல், தொடரை நடத்தும் இந்தியா, தன்னுடைய முதல் போட்டியில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணைபிசிசிஐ

மொத்தம் 46 நாட்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 10 மைதானங்களில் நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து, அரையிறுதி போட்டிகளில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் தனது முதல் போட்டியை ஆடுகிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும், அக்டோபர் 22ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com