முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகையான சாஸ், மயோனைஸ் என்று அழைக்கப்படுகிறது.
இது ஷவர்மா, தந்தூரி, சாண்ட்விச், பார்பிக்யூ சாலட் எனத் துரித உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மயோனைஸ் சாப்பிடுவதற்காகவே அது சார்ந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் உணவு பிரியர்களும் உண்டு.
பச்சை முட்டையில் மயோனைஸ் தயார் செய்யப்படுவதால் விரைவில் கெட்டுப் போய்விடும். அதைப் பதப்படுத்திப் பயன்படுத்த முடியாது.
இதில் உள்ள சால்மோனெல்லா, டைபிமுரியம், லிஸ்ட்டீரியா மோனோ சைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அந்த மாநிலத்தில் மயோனைஸ் பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்தது.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓராண்டுக்கு முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயோனைசை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டையில் செய்யக்கூடிய மயோனைசை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுத்தக் கடிய ஆபத்து மிக அதிகம் என உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு முதன்மைச் செயலாளரும் ஆணையருமான ஆர். லால்வேனா இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் பிரிவு 30 (2) (a)ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவில் மயோனைஸ் ஹை ரிஸ்க் உணவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.