அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா?- அன்பில் மகேஸ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

அரசுப் பள்ளிகளைத் தத்துக்கொடுப்பதாக தான் பேசவே இல்லையென பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதைக் கூறினார்.

முன்னதாக, கடந்த 30ஆம் தேதி தனியார் பள்ளி சங்கத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மகேஸ், அவர்கள் சார்பில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து உதவிசெய்வதாகத் தீர்மானம் இயற்றப்பட்டதை வரவேற்றார் என்று செய்திகள் வெளியாகின. அதைக் கண்டித்து பல கட்சிகளும் கருத்து வெளியிட்டன. இந்திய மாணவர் சங்கமோ அமைச்சர் தன் கருத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியது.

இதனால் பலத்த விமர்சனங்கள் பரவலானநிலையில், அமைச்சர் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

”தத்தெடுக்கிறார்கள், தாரை வார்க்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தவுடன். அதுசார்ந்து கண்டன அறிக்கைகள் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதையும் சரிபார்க்காமல், வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறுகின்றனர். இதனால், எங்கள் துறை சார்ந்தவர்கள் வருத்தப்படுகின்றனர். எனவே, முழுமையாக ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்களை, வன்மையாகக் கண்டிக்கிறேன். அறிக்கை விடுபவர்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் என்ன பேசினோம், என்ன பதிவு செய்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் கொடுத்து ஆரம்பித்து வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை ரூ.504 கோடி வந்துள்ளது. அதில் ரூ.350 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது பங்களிப்பினை தருவதாக கூறினார்கள். நான் நன்றிதான் தெரிவித்தேன். அத்துடன் அது முடிந்துவிட்டது. ஆனால், அதை தாரைவார்த்துவிட்டோம், தத்துகொடுத்துவிட்டோம் என்று பேசுகின்றனர்.

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதோ, தாரைவார்க்க வேண்டிய அவசியமோ அரசுக்கு இல்லை. பள்ளிக் கல்வித் துறை என்பது எங்களுடைய பிள்ளை. எங்கள் பிள்ளையை நாங்கள்தான் வளர்த்தெடுப்போமே தவிர, மற்றொருவருக்கு தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று அமைச்சர் மகேஸ் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com