‘காவிரிய வச்சுக்கோ... அம்மாவக் கொடு’னு போஸ்டர் ஒட்டிய அடிமைகள்தானே நீங்கள்... மூன்று வேளாண்மை சட்டங்களை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி; உழவர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல் வேஷம் போடுகிறார் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
” ‘நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல’ என்று எம்.ஜி.ஆர் பாடிய பாடல் வரிகள் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாகப் பொருந்தும். நாளொரு நாளும் பொழுதொரு நேரமும் ’அறிக்கை அரசியல்’ நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
’நான் ஒரு விவசாயி’ என பழனிசாமி நாவில் ஒன்று சொல்லுவார். ஆனால், நினைவில் அதற்கு மாறாக இருப்பார். அதன் பேர் உள்ளமல்ல. ’நான் ஒரு விவசாயி’ என்ற பழனிசாமியின் பழைய பம்மாத்துகள் கலைந்து நிற்பதால், அதை நிலைநிறுத்த அவர் போடும் கோமாளி வேடங்கள் எடுபடவே இல்லை.
ஈரோடு மாவட்டத்தில் அரசு விவசாயக் கண்காட்சி விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருவதை பட்டியல் போட்டுச் சொன்னார். அதனைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.
’’நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்’’ என்ற காமெடியைப் போல ’’நான்தான் உண்மையான விவசாயி’’ எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி பழனிசாமியின் முகத்திரையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஈரோட்டில் வைத்துக் கிழித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவைத் துவக்கி வைத்தது பற்றி பழனிசாமி பெருமை அடிக்கிறார். 2017-ல் முதலமைச்சராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஊர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் அவர்தான் முதல்வராக இருந்தார். நான்கு ஆண்டுகள் வாரிச் சுருட்டுவதற்கும் ஒன்றிய பாஜக அரசுக்குப் பாதம் தாங்கியாகவும் சேவை செய்யவே அவருக்கு நேரம் போதவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஓட்டுக்காக அவசர அவசரமாகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தர் பழனிசாமி. முதலமைச்சரின் உதவி மையம், காவிரி – வைகை – குண்டாறு இடையே நதிகள் இணைப்புத் திட்டம் அடிக்கல், மினி கிளினிக், வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிப்பு, ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதம் முன்பு பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் தேர்தல் காலப் புஸ்வாணங்கள்.
அந்த வரிசையில்தான் தலைவாசலில் கால்நடைப் பூங்காவை உருவாக்கினார். அது நிறைவடையும் முன்பே அதில் ஒரு பகுதியை 22.2.2021 அன்று திறந்து வைத்தார் பழனிசாமி. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான (பிப்ரவரி 26) நாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பு அந்தத் திட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தார். தான் கொண்டு வந்த திட்டம் எனத் தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, அந்தத் திட்டத்தை திமுக தடுத்துவிட்டது எனவும் சொல்கிறார். இந்த முரண்பாடுதான் பச்சைப்பொய் பழனிசாமியை அம்பலப்படுத்துகிறது. திட்டத்தை பழனிசாமி அரசு நிறைவேறியிருந்தால் ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்த போகிறது?
நீர் ஆதாரமே இல்லாத ஓர் இடத்தில் கால்நடைப்பூங்காவை அமைக்கும் முடிவைக் கடந்த 2019-ல் அறிவித்து, 2 ஆண்டுகள் ஆகியும் 50 சதவீதப் பணிகளைக்கூட முடிக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றார் பழனிசாமி. .ஆனால், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் நீர் ஆதாரச் சவால்களையெல்லாம் சமாளித்து, உயர்மின் அழுத்த வேலிகள் அமைப்பது உள்ளிட்ட மீதமுள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடித்து தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைத்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
விவசாயிகள் நலனுக்காகத் தனி விவசாய பட்ஜெட்டையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட அரசு, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை.
’நான் ஒரு விவசாயி’ எனச் சொல்லி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் பழனிசாமி பாணி. விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி. உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். உழவுத் தொழிலையும், உழவர்களையும் அழித்துப் பெரு முதலாளிகள் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்த பச்சை துரோகிதான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை எதிர்த்து உழவர்களுக்கு ஆதரவாகக் கடுமையாகப் போராடியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
3 வேளாண் சட்டங்களைப் பலமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை கடுமையாக எதிர்த்த திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார் பழனிசாமி. அதில் உள்ள சரத்துகளை ஆதரித்து வாதங்களை எடுத்து வைத்தார். அதற்குத் தண்டனையாகத்தான் அவரை ஆட்சியிலிருந்து விவசாயிகள் வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த பழனிசாமிதான் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போல ’விவசாயிகளின் காப்பாளன்’ போலக் கபட வேடம் போடுகிறார். உழவர்களுக்குப் பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார்.
மதுரையில் விவசாயத்தையும், பல்லுயிர்ச் சூழலையும் அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்குக் காரணமான கனிமவளச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது தானாக வழியச் சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையையும், விவசாயிகள் நலனையும் ஒன்றிய அரசின் காலடியில் அடகுவைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் செய்தது பழனிசாமியின் அதிமுக, அதைத் தடுத்து நிறுத்தியது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் எனச் சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதலமைச்சராக உள்ளவரை ஒன்றிய அரசு டங்ஸ்டன்சுரங்கத்தை அமைக்க முடியாது என நெஞ்சுரத்தோடு சூளுரைத்து,டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதிலிருந்து பின்வாங்கச் செய்தவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு .மு.க.ஸ்டாலின் அவர்கள்.
டெல்டா விவசாயிகளின் போராட்டத்தாலும் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடியாலும் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு மறுபுறம் ஒன்றிய பாஜக அரசுக்குப் பயந்து அந்தப் பரிந்துரையைக் கூட ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் இருந்தது இதே கோழை பழனிச்சாமிதான். பழனிசாமியின் இந்தத் துரோகத்தை எல்லாம் காலம் உள்ளவரை உழவர்களும் மக்களும் மறக்கமாட்டார்கள்.
இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தது, முதன்முதலில் 7000 கோடி ரூபாய் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்தது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசுதான், அதன் வழியில் பயணித்து வரும் திராவிட மாடல் அரசும் உழவர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ததோடு, வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது திராவிட மாடல் அரசுதான்.
இதுவரை ஐந்து வேளாண் பட்ஜெட் மூலம் 1.94 லட்சம் கோடி ரூபாய் (1,94,074) விவசாயிகள் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த 2012- 2021 வரை இருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 1.36 சதவிகிதமாக இருந்த வேளாண் வளர்ச்சி தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதோடு இதுவரை 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளிலும் சேர்த்தே வெறும் 1,38,592 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.
’அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. காவிரி மேலாண்மை விவகாரத்தில் பாஜகவுக்கு விசுவாசியாகச் செயல்பட்ட பழனிசாமி காவிரியைப் பற்றி எல்லாம் பேசலாமா? சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போது, ‘காவிரிய வச்சுக்கோ... அம்மா குடு’னு போஸ்டர் ஒட்டிய அடிமைகள் காவிரி விஷயத்தை பற்றி எல்லாம் பேசக் கொஞ்சமும் அருகதை அற்றவர்கள்.
காவிரி விவகாரத்தில் பழனிசாமி காட்டிய லட்சணத்தைப் பார்த்து, தமிழ்நாடு சந்தி சிரித்தது எல்லாம் மறந்துவிடுமா? 'ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்' என்று 2018 பிப்ரவரியில் தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம். ஸ்கீம் என்றால் என்ன? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு செய்து, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக நாடகம் நடத்தியது. அதற்கு பழனிசாமி அரசும் பக்க வாத்தியம் வாசித்தது. அன்றைக்கு எஜமான விசுவாசத்தைக் காட்டிய கோழை பழனிசாமியா காவிரியைப் பற்றிப் பேசுவது?
''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மோடி அரசின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம்'' எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி, பாஜகவின் ராஜ விசுவாசத்தைக் காட்டிய கொத்தடிமைதானே பழனிசாமி!
பழனிசாமி அரசு விவசாயிகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதோடு மட்டுமல்லாமல் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய விவசாயிகள் மீதும் கருணையின்றி வன்முறையை ஏவியது. சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய விவசாயிகள், பெண்களின் குறைகளையும் குமுறல்களையும் கூட காது கொடுத்துக் கேட்க மனமில்லாமல் அவர்கள் மீது கொடூர அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் துன்புறுத்திய பழனிசாமி நானும் விவசாயி என வேடம் போடுகிறார்.
நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். மனதில் அழுக்கை வைத்துள்ள பழனிசாமி, என்றென்றைக்கும் உலகிற்கே உயிரூட்டும் உழவர் ஆகிவிட முடியாது. போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டின் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.” என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.