வி.கே குருசாமி - மு.க.அழகிரி
வி.கே குருசாமி - மு.க.அழகிரி

மு.க.அழகிரி உதவியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…பெங்களூரில் சம்பவம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் உதவியாளர் வி.கே குருசாமி பெங்களூரில் கூலிப்படையினால் சரமாரியாக தாக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் உதவியாளரான வி.கே.குருசாமி (55) மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தி.மு.க.வின் மதுரை மண்டலத் தலைவராக இருந்தவர். இதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பகை இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல், இரு தரப்பிலும் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குருசாமியும் அவரது மகன் மணியும் உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்துவந்ததாகவும், நீதிமன்ற விசாரணைக்காக மட்டுமே அவர்கள் மதுரைக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பெங்களூரில் சென்றுள்ளார் குருசாமி. நேற்று முன்தினம் மாலை, கம்மனஹள்ளியில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இருந்த டீக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடனும், மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பெங்களூர் காவல் துறையினர் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை காமராஜபுரம், கீரைத்துறை, வில்லாபுரம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் மாநகர காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com