மக்கள் கல்வி கூட்டியக்கம் பொது பாடத் திட்டம்
மக்கள் கல்வி கூட்டியக்கம் பொது பாடத் திட்டம்

பொது பாடத்திட்டம் – பின்வாங்கிய உயர்கல்வித் துறை

மாநிலம் முழுவதுமான பொது பாடத் திட்டம் குறித்து தன்னாட்சிக் கல்லூரிகளில் அவற்றின் நிர்வாகங்களே முடிவுசெய்துகொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவர உள்ள நிலையில், அதில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் படிப்படியாக முன்னரே நடைமுறைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார். 

அதற்கான காரணமாக, “ மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும்.” என்று கூறப்பட்டது. அதன்படி பொது பாடத் திட்டங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கணிசமான எதிர்ப்பு கிளம்பியது. சென்னை, மதுரை உட்பட்ட பல ஊர்களில் பொதுப் பாடத்திட்டம் கூடாது என கல்வியாளர்கள் கருத்தரங்குகளையும் நடத்தினார்கள். குறிப்பாக, கல்வித் துறையின் தனித்தன்மை இதனால் பாதிக்கப்படும் என்றும் கல்வியின் தரமும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலையில், உயர்கல்வித் துறையின் செயலர் கார்த்திகேயன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

அதில், “ மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கடந்த 2ஆம் தேதியன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  அக்கூட்டத்தில்,  இந்த புதிய மாதிரி பாடத்திட்டம்  70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.” என்றும்,  

”சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது  கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி  பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப (Optional) முடிவு செய்து கொள்ளலாம்.” என்று உயர்கல்வித் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com