ஏ.ஐ. வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று” என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் 2ஆவது நாளான இன்று பங்கேற்று உரையாற்றினார்.

“ஏஐ வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் இந்த தொழில்நுட்பத்துக்கான மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது. ஆனால், வரலாற்றுச் சான்றுகளின்படி எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வேலைகளை பறித்ததில்லை.

மாறாக, ஒரு வேலையின் தன்மையை மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றியிருக்கிறது. அதனால், நாம் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மக்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், அவற்றை மாற்றியமைப்பதிலும் கவனம் செலுத்தினால் ஏ.ஐ. சார்ந்த எதிர்காலத்தை எளிதில் எதிர்கொள்ளலாம். இதற்கு, நாம் வெளிப்படத்தன்மை நிறைந்த திறந்த மூல மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்ப பயன்பாட்டில் ஜனநாயகத்தை புகுத்த வேண்டும். மக்கள் நலனை மையமாகக் கொண்ட செயலிகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, சைபர் பாதுகாப்பு, டீப் ஃபேக் கட்டுப்பாடு, திரிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஐ எதிர்காலம் நன்மைக்கானதாக, அனைவருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது. ஏஐ தற்போது மிக வேகமாக, எதிர்பாராத வீரியத்துடன் வளர்ந்து வருகிறது. அதே வேகத்தில் அது நம்மால் பழகி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

உலக நாடுகளின் ஏஐ மீதான சார்பு எல்லைகள் கடந்து ஒன்றோடு ஒன்று இணைந்ததாக உள்ளது. அதனால் ஏஐ தொழில்நுட்பத்தை நிர்வகிக்க சர்வதேச கூட்டு முயற்சி தேவை. நாம் பகிர்ந்து கொண்டுள்ள மதிப்பீடுகள், நாம் சந்திக்கும் அபாயங்கள், நாம் கட்டமைக்கும் நம்பிக்கைகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக ஏஐ தொழில்நுட்ப மேலாண்மை விதிகள் இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com