‘எம்.பி. க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா...?’ - ஆதங்கப்படும் எம்.பி.!

விசிக ரவிக்குமார்
விசிக ரவிக்குமார்
Published on

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் இல்லை என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

இது தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது சமூக ஊடக பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை.

நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் முன்னணியில் நிற்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள்தாம். அவர்களை இப்படி நடத்துவது சரிதானா? வெளியூர் எம்.பிக்கள் சென்னைக்கு வந்தால் அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் இல்லை. சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் வாடகைக்கு ஒரு அறை வாங்குவதற்குள் திரும்பவும் ஊருக்கே போய்விடலாம் என்றே எண்ணத் தோன்றும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா முதலான மாநிலங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளனவோ அவற்றைச் செய்து தர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com