நாக்பூர் வன்முறை: அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு… 47 பேர் கைது!

நாக்பூர் வன்முறை
நாக்பூர் வன்முறை
Published on

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற இந்து மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. அதனால், போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில், சாலையிலிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் தெரிவித்துள்ளார். வன்முறை தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com