பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அக்கட்சியின் விதி இருந்தாலும் அதில் விதிவிலக்குகள் தருவது உண்டென பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதனால், நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என பேசப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணிகளை கட்சித் தலைமை மேற்கொண்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.
அதில், பாஜக தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக தலைவராவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்றிரவு ஏ.என்.ஐ.க்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன், பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது கட்சியின் விதி. இருந்தாலும் அதில் விதிவிலக்குள் தருவது உண்டு. இது ஒன்றும் பிரச்னை இல்லை” என்றார்.
மேலும், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமி தமிழக பாஜக தலைவராக ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.