நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க. மாணவர்களைக் குழப்பி தற்கொலைக்குத் தூண்டுகிறது என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தன் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்தார். இதையொட்டி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் காலை 10.30 மணியளவில் வந்தார். திரளாக வந்திருந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பார்த்து, அவர் கையசைத்தார். அதைப் பார்த்து கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேலும், அவரின் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜயகாந்த் வெளியிட்டார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ”கட்சி எந்த தொய்வும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நான் சென்றுகொண்டு இருக்கிறேன்.” என்றார்.
“நீட் தேர்வை அரசியலாக ஆக்கிவிட்டார்கள். நீட் தேர்வு இந்தியா முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு ஒழிக்கப்பட்டால் அதை முதலில் வரவேற்பது தேமுதிகவாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா?” என்று அவர் கேட்டார்.
மேலும், “யாரெல்லாம் நீட்டை எதிர்க்கிறார்களோ அவர்கள் இதற்கு பதில்சொல்ல வேண்டும். மாணவர்களைக் குழப்பி தற்கொலைக்குத் தூண்டுவது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான்.” என்றும் பிரேமலதா குற்றம்சாட்டினார்.