தூய்மைப் பணியாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
Published on

அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழுவுடன் இன்று 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10ஆவது நாளாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு ஆறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட கட்சியினர் நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com