மோசடிகளுக்குப் பஞ்சமில்லாத நம் நாட்டில் இது புதுவித மோசடி என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆம், பெண்களுக்கான அரசு நலத்திட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 12 ஆயிரத்து 431 ஆண்கள் பலன் பெற்றிருக்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது.
தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகையைப் போலவே அங்கும் ஒரு திட்டம்... அதன் பெயர், முக்ய மந்திரி மஜி லடுக்கி பகின் யோஜனா. இதன்படி 21- 65 வயது பெண்களுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. ஆனால் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும் என்பது நிபந்தனை.
மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், அண்மையில் 77ஆயிரத்து 980 பெண்களை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. அவர்களுடன் 12,431 ஆண்களையும் நீக்கியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
முழுக்க முழுக்க பெண்களுக்கான இந்த நலத்திட்டத்தில் ஆண்களுக்கும் நிதி வழங்கப்பட்டிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ஆண்களுக்கு 13 மாதங்களும் பெண்களுக்கு 12 மாதங்களும் நிதியுதவி தரப்பட்டுள்ளது. அதாவது, ஆண்களுக்கு 24.24 கோடி ரூபாயும், பெண்களுக்கு 140.28 கோடி ரூபாய் என மொத்தம் 164.52 கோடி ரூபாய் முறைகேடாக அரசு கஜானாவிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, பெண்களுக்கு மாத நிதி உதவி தரும் இந்தத் திட்டம் சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்தத் திட்டத்துக்கான விளம்பரத்துக்காக 199.81 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அப்போது, இப்போதைய துணைமுதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தது. தேர்தல் காலத்து கவர்ச்சி நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின.
இப்போதைய நிலையில், 2.41 கோடி பெண்கள் இத்திட்டத்தின்படி மாதம்தோறும் நிதியுதவி பெற்றுவருகின்றனர். மாதத்துக்கு ரூ.3,700 கோடி ரூபாய் மகளிர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
பொதுவாக ஆண்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, திட்டப் பயனாளிகளில் அரசு ஊழியர்கள் 2,400 பேரும் கூசாமல் இந்தத் தொகையைப் பெற்றுள்ளனர். அந்த மோசடி ஆண்கள் இந்தப் பட்டியலிலும் இருக்கிறார்கள். அதாவது, அரசு ஊழியராகவும் ஆண்களாகவும் இருந்துகொண்டு மகளிர்க்கான நிதியையும் பெற்றிருக்கிறார்கள், கில்லாடிகள். அந்த ’யோக்கியர்கள்’ மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?
ஆனால், இதுவரை முறைகேடாகப் பெற்ற பணத்தை திரும்பப்பெறவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அரசு எந்திரம் நகர மறுக்கிறது எனக் கொதிக்கிறார்கள், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அதிதி தட்கரே வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “ நிதியுதவி பெற்றுவரும் 26 இலட்சம் பேர் இந்தத் திட்டத்தின்படி தகுதி இல்லாதவர்கள் என தகவல்தொடர்பு, தொழில்நுட்பத் துறை கண்டுபிடித்துள்ளது.” என்று தெரிவித்திருந்தார். அதுதான் அதிகாரபூர்வமாக இந்த விவகாரத்தை உண்மையென ஒத்துக்கொண்ட முதல் சம்பவம்.
மோசடி வெளியானதையடுத்து சந்தேகத்துக்குரிய 26.34 பேருக்கு ஜூன் - ஜூலையில் தொகை வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டப்படி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தினர் இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மோசடியாக பணத்தைப் பெற்ற ஆண்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலைவரை மாதம்தோறும் 1,500 ரூபாயைப் பெற்றுள்ளனர் என்றும் அத்துடன் அவர்களுக்கு பணம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது என்றும் மகாராஷ்டிர அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதில் இன்னொரு பெரிய மோசடியும் நடந்திருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் பணப்பயன்களையும் கணிசமானவர்கள் முறைகேடாக அனுபவித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் எந்த உறுத்தலும் பயமும் இல்லாமல் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் அதிகமாக ஜில்லா பரிசத் எனப்படும் மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றுபவர்கள் 1,183 பேர் முன்னிலை வகிக்கிறார்கள், ஆம், மோசடியில்!
அதற்கடுத்து, ஆயுர்வேத மருத்துவத் துறையில் பணியாற்றும் 817 பேர்.
மூன்றாவதாக, சமூகநலத் துறையின் 219 பேர்.
அடுத்து, விவசாயத் துறையில் பணியாற்றும் 128 பேர்.
மோசடியாகப் பெற்ற பணத்தை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்கப்படுவது ஒரு புறம் இருக்க, இனி இதைப்போல நடந்துவிடக்கூடாது என்பதற்கான பணிகளில் அந்த மாநில அரசு புது முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
பயனாளிகளின் விவரக்குறிப்பைச் சரிபார்க்கும் பணியை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டு, ஒருவர் விடாமல் அனைவரின் விவரங்களையும் உண்மைதானா என உறுதிப்படுத்த உள்ளனர்.
காலம்கடந்த ஞானோதயம்தான்... என்றாலும் செய்துதானே ஆகவேண்டும்!