
‘வேற லெவல் ப்ரோ நீங்க …’ என வாயடைக்க வைத்திருக்கிறார் அந்த 15 வயது சிறுவன்.
விஞ்ஞான உலகயே மிரள வைத்ததோடு, அவரின் உயர்ந்த நோக்கமும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
‘கும்பலாக சுத்துவோம்...’ என அடவாடி பண்ணாமல், குவாண்டம் அறியலில் ஆய்வு செய்து 15 வயதில் பிஎச்டி பட்டம் வாங்கியிருக்கிறார் பெல்ஜியத்தைச் சேர்ந்த லாரண்ட் சைமன்ஸ் என்ற சிறுவன்.
2009இல் பெல்ஜியத்தில் பிறந்த லாரண்ட் சைமன்ஸின் கல்வி பயணம் வியப்பூட்டுவது. சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். அதாவது 6 வயதுக்குள் ஆரம்ப கல்வியையும் 8 வயதில் உயர்நிலைக் கல்வியையும் அசால்டாக முடித்துள்ளார். 11ஆவது வயதில் இயற்பியலில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார். 3 ஆண்டுகளில் நிறைவடையும் இளங்கலை பட்டத்தை வெறும் 18 மாதங்களில் நிறைவு செய்துள்ளார், அதுவும் குவாண்டம் இயற்பியலில்.
இந்த ஆண்டு, அதாவது தன்னுடைய 15ஆவது வயதில் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் (University of Antwerp) குவாண்டம் இயற்பியலில் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாக சமர்ப்பித்து அதிகாரப்பூர்வமாக முனைவர் பட்டம்(PhD) பெற்றுள்ளார் லாரண்ட் சைமன்ஸ்.
“Bose polarons in superfluids and super solids” என்ற தலைப்பில் அவரின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை குவாண்டம் அறிவியலின் சிக்கலான கூறுகளை ஆராய்வதாக கூறப்படுகிறது.
சின்ன ஐன்ஸ்டீன்
'சின்ன ஐன்ஸ்டீன்' என அழைக்கப்படும் லாரண்ட் சைமன்ஸின் IQ அளவு எவ்வளவு தெரியுமா?
145 என்கிறார்கள்...
சிறு வயதிலேயே அறிவியல் தொடர்பான கேள்விகளை கேட்டு ஆசியர்களை டார்ச்சர் செய்வாராம். இவரின் சிறப்புத் திறனை அவரின் பெற்றோர்களும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
தனது தாத்தா பாட்டியின் இறப்பே தனது லட்சியத்தை நிர்ணயித்ததாகக் கூறும் லாரண்ட் சைமன்ஸ், மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதற்கான மருத்துவ அறிவியலைப் படிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
லாரண்ட் சைமன்ஸ் 15 வயதில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவருக்கு முன்னரே, அதாவது 1814 ஆம் ஆண்டு தன்னுடைய 13ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்ல் விட்டே என்பவர்!
வாழ்த்துகள் லாரண்ட் ப்ரோ...!