ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சிங்கக் கணக்கெடுப்பில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் அதிக அளவில் காணப்படுவது பாரசீக அல்லது ஆசிய அல்லது இந்திய சிங்கம் எனப்படும் சிங்கங்களே! குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் கிர் வனப் பகுதி, அதன் சுற்று வட்டாரத்தில் இவை அடர்த்தியாகக் காணப்படுகின்றன.
கடந்த 2000ஆவது ஆண்டில் எடுக்கப்பட்ட முந்தைய சர்வேவை ஒப்பிட, சிங்கங்களின் எண்ணிக்கை 32% அளவுக்கு கூடியுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் 11 மாவட்டங்கள், 58 வட்டங்களைக் கொண்ட கிட்டத்தட்ட 35 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவில் எடுக்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை இது மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 735 மாதிரி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அலகுக்கும் ஒரு கணக்கெடுப்பாளர், 2 உதவியாளர்களைக் கொண்டு 3,254 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிங்க சர்வே எப்படி எடுக்கப்பட்டது?
ஒவ்வொரு மாதிரி அலகிலும் அந்தந்தக் குழுவினர் நேரடியாகப் பார்க்கும் சிங்கங்களின் விவரங்களை, தனித் தனிப் படிவத்தில் குறித்துக்கொள்வார்கள். அத்துடன் டிஜிட்டல் கேமராவில் அந்த சிங்கங்களின் படங்களையும் பிடித்துக்கொள்வார்கள். ஒருவேளை பக்கத்தில் உள்ள குழுவினர் ஒரே சிங்கத்தை இரண்டாகக் கணக்கெடுத்திருந்தால், படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அதை உறுதிப்படுத்துகிறார்கள். இப்போதைக்கு இந்த முறை சிங்கங்களின் கணக்கெடுப்பில் துல்லியமானது எனக் கருதப்படுகிறது.
இந்த பதினாறாவது சிங்கக் கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் மொத்தம் 891 சிங்கங்கள் உள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டு சர்வேயில் 674 சிங்கங்கள் என பதிவாகியிருந்தது. அதாவது, 5 ஆண்டுகளில் குஜராத்தில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சிங்கங்கள் அதிகரித்துள்ளன.
இதைப் போலவே, வயதுக்கு வந்த பெண் சிங்கங்களின் எண்ணிக்கையும் 20%அதாவது 330 ஆக அதிகரித்துள்ளது.
முன்னரெல்லாம், கிர் வனப்பகுதியை மையமாக வைத்தே சிங்கங்கள் அடர்த்தியாக வசித்தநிலையில், இப்போதைய சர்வேயில், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கணிசமான சிங்கங்கள் பரவி வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இப்படியான ஒன்பது சுற்று வட்டாரங்களில் மட்டும் 497 சிங்கங்கள் காணப்படுவது தெரியவந்துள்ளது.
மிரட்டும் சிங்கப் பரப்பிடம்
கடந்த பத்தாண்டுகளில் 70.36% அளவுக்கு சிங்கங்கள் அதிகரித்துள்ளன. (523 - 2015ஆம் ஆண்டு)
இதைப்போலவே, சிங்கங்களின் வசிப்பிடப் பரப்பும் அதிகரித்தபடியே இருக்கிறது.1995ஆம் ஆண்டில் 10ஆயிரம் ச.கி.மீ. ஆக இருந்தது 2001ஆம் ஆண்டில் 12ஆயிரம் ச.கி.மீ.ஆக அதிகரித்தது.
அதுவே, 2005இல் 13 ஆயிரம் ச.கி.மீ., 2010இல் 20 ஆயிரம் ச.கி.மீ., 2015இல் 22 ஆயிரம் ச.கி.மீ., 2020இல் 30 ஆயிரம் ச.கி.மீ. எனப் படிப்படியாக விரிந்துவந்த சிங்கவாழ் பரப்பு, இப்போது 2025இல் 35 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்துள்ளது.
சிங்கங்கள் உலாவும் பரப்பு பெருகியுள்ளதை வன உயிரின ஆர்வலர்கள் சாதகமானதாகவே பார்க்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட மையப் பகுதியைத் தாண்டி அவை புழங்குவதால் சிக்கலும் இருக்கிறது என்கிறார்கள். ஒன்று, சிங்கங்களைப் பாதுகாப்பது சவாலாக மாறுகிறது; இன்னொன்று, மற்ற விலங்குகள், மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புகள்.
கிர் தேசிய வன உயிரினப் பூங்கா, அதன் சுற்றுப்பகுதி வன விலங்கு காப்பகங்கள் அடங்கிய சுமார் 1400 ச.கி.மீ. பரப்பில், நூறு சதுர கி.மீ.க்கு 4-5 சிங்கங்கள் வசிப்பது இயல்பு. எண்ணிக்கை பெருகியதால் வளர்ந்த சிங்கங்கள் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி நகர்ந்துசெல்கின்றன.
மேலும், 100 கி.மீ.வரை விரிந்த புதிய வாழிடச் சூழல் அவற்றுக்கு பாதகமாக மாறுகின்றன. சிறு மரபணு மாற்றம்கூட பாதகமாக அமைகின்றன என்கிறது இந்திய வன உயிரின நிறுவனம்.
2018இல் சிடிவி எனும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி 23 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டன. 2020இல் பேபிசியோயிஸ் தொற்றுக்கு கணிசமான சிங்கங்கள் பலியாகின என்கின்றன அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்.
இதைத் தவிர, இருப்புப்பாதைகள், சாலைகள், மக்கள் குடியிருப்புகளையும் தங்களின் உலாப் பகுதிகளாக இவை மாற்றிக்கொள்வதாலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
டையூவுக்கு கிலி தந்த கிர் சிங்கங்கள்
குஜராத்துக்கு மட்டுமின்றி, அதை ஒட்டியுள்ள யூனியன் பிரதேசப் பகுதியான (டாமன்) டையூவுக்கும் கிர் சிங்கங்களால் கிலி ஏற்பட்டிருக்கிறது. அண்மையில், கடந்த பிப்ரவரியில் டையூ தீவுக்குள் இரண்டு ஆண் சிங்கங்கள் புகுந்து தம்பாட்டில் உலாவிக்கொண்டிருந்தன. அதிர்ச்சியான உள்ளூர் மக்களின் தகவலைத் தொடர்ந்து, டையூ நிர்வாகம் வேண்டுகோள் விடுக்க, அவை இரண்டையும் பிடித்து மீண்டும் கிர் வனப் பூங்காவுக்குக் கொண்டுசென்றது, குஜராத் வனத்துறை.
அழகிய கடற்கரைக்குப் பேர்போன டையூவில், நல்ல வேளை, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் இதுவரை இவை வந்ததில்லை என அச்சத்துடனேயே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள், டையூ மக்கள்.
வடக்கில் குஜராத்தின் கிர்- சோம்நாத், அம்ரேலி மாவட்டங்களையும் மீத மூன்று பக்கங்களில் அரபிக் கடலையும் எல்லையாகக் கொண்ட டையூ தீவுக்குள் சிங்கங்கள் செல்வது சாதாரணமாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 10 முறைகளாவது இப்படி டையூவில் கிர் சிங்கங்களின் நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார், கிர் வனப் பகுதியின் கிழக்குப் பிரிவு அதிகாரி இராஜ்தீப் சிங் சாலா.
நீச்சல்தானாம்!
இந்த சோகத்தில் ஒரு சுவாரசியமும் உண்டு. குஜராத்தின் எல்லை கிராமத்தை டையூ பிரதேசத்துடன் ஒரு பாலம் இணைக்கிறது. இதன்வழியாகவெல்லாம் இந்த சிங்கங்கள் போவதில்லையாம்!
இரண்டு நிலப் பகுதிகளையும் ஒட்டியுள்ள உப்பங்கழியில் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது, நீந்தியே டையூவைச் சென்று அடைந்துவிடுகின்றனவாம், பெரும்பாலான சிங்கங்கள்!
நீந்துவது சிங்கங்களுக்கு விருப்பமானது என்கிறார்கள், இந்திய வன உயிரின நிறுவன வல்லுநர்கள்.
இது ஒரு புறம் இருக்க...
கடந்த 2020இல் மட்டும் சிங்களால் கால்நடைகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 1,200ஆகப் பதிவாகியுள்ளது.
ஆனால், மற்ற வன விலங்குகளை ஒப்பிட மனிதர்கள் மீது கடுமையான பகைமை கொள்ளாதவை சிங்கங்கள் என்று உயிரின வல்லுநர்கள் கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டில் சிங்கங்களுடனான மோதலில் மூன்று மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இருந்தாலும், மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென சிங்கம் வந்தால், எல்லாரையும் கலக்கிவிடும்தானே?