
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்ற போலீஸ்காரர்கள் இருவரை பாகிஸ்தானில் தாலிபான் கும்பல் சுட்டுக்கொன்றுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.
அல்ஜசீரா ஊடகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் போலியோ பாதிப்பு இன்னும் இருந்துவருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் மட்டும் 31 பேருக்கு போலியோ பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதையொட்டி, பாகிஸ்தானில் நாடளவிய 2.4 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் இயக்கம் கடந்த ஞாயிறன்று தொடங்கியது. நாடளவில் 97 மாவட்டங்களில் அதிகமான பாதிப்புக்கு வாய்ப்பு இருப்பதால், அந்நாட்டு அரசாங்கம் இதில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.
இந்நிலையில், கைபர் பக்துங்குவா மாகாணத்தின் கைபர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவப் பணியாளர்கள் குழுவுக்குப் பாதுகாப்பாகச் சென்ற போலீஸ்காரர்கள் மீது பாகிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகள் திடீரெனத் துப்பாக்கியால் சுட்டனர். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த ஆண்டில் பாகிஸ்தானில் எட்டாவது நபராக 13 வயதுச் சிறுமி போலீயோவால் பாதிக்கப்பட்ட நாளில், இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானிலேயே போலியோ பாதிப்பில் கைபர் மாவட்டத்தில் ஆறு பேருக்கும் சிந்து மாவட்டத்தில் அதற்கடுத்தும் எனப் பதிவாகியுள்ளது.
“இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்தார். இருப்பினும், காவல்துறையின் வாகனத்தில் போலியோ பணியாளர்கள் யாரும் இல்லை,” என்று காவல்துறை அதிகாரி அலி ரகுமான் கான் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இதே மாகாணத்தில் கடந்த திங்களன்று நான்கு போலீஸ் அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுக்கு இன்னார்தான் பொறுப்பு என இதுவரை யாரும் அறிவிக்கவில்லை என்றாலும், டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான் இயக்கமும் மற்ற இயக்கங்களும்தான் இப்படியான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
அவர்களைப் பொறுத்தவரை, போலியோ சொட்டு மருந்து என்பது மலட்டுத்தன்மையை உருவாக்குவதற்காக மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி எனத் தீவிரமாக நம்புகிறார்கள். எனவே, அரசாங்கம் என்னதான் முயற்சி எடுத்தாலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இடப்படுவதை அவர்கள் கண்மூடித்தனமாக எதிர்த்துவருகிறார்கள்.
அதன் உச்சகட்டமாக, மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு போலீஸ்காரர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக உள்ளது.
உலக அளவில் பெரும்பாலும் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும் அந்தப் பாதிப்பு மிச்சமிருக்கும் சில நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் நீடித்துவருகிறது.
போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, நிகழ்ந்த சம்பவம் மிகவும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் தமது தேசியக் கடமையை ஆற்றியுள்ளனர்; அவர்களின் உயிர்த் தியாகம் என்றும் மறக்கப்படக்கூடாதது என்றும் சர்தாரி குறிப்பிட்டிருக்கிறார்.