49 வயது தாயும் மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்.!

சம்யுக்தா கிருபாயிணி - அமுதா
சம்யுக்தா கிருபாயிணி - அமுதா
Published on

படிப்பு என்றாலே பலருக்கும் எட்டிக்காயாக கசக்கும். ஆனால் படிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் வயது தடையில்லை என்பதற்கு சமீபத்திய சிறந்த உதாரணமாக இருக்கிறார் தென்காசியை சேர்ந்த 49 வயதாகும் அமுதவல்லி.

யார் இந்த சிங்க பெண்?

தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதவல்லி. மாற்றுத்திறனாளியான இவருக்கு சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவரது குடும்ப சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிசியோதெரபி படிக்கவே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி பிசியோதெரபிஸ்ட்டானார் அமுதவல்லி.

இதற்கிடையே, அவருடைய மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு தயாராக, அமுதவல்லிக்கு தன்னுடைய மருத்துவர் ஆசை எட்டிப்பார்த்திருக்கிறது.

கிருபாயிணி தான் படிப்பதை அம்மா அமுதவல்லியிடம் சொல்லிக் கொண்டே படிப்பாராம். இதனால் அமுதவல்லிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இருவரும் சேர்ந்து படித்து நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை என்பதால் அமுதவல்லிக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு முடிவில் அமுதவல்லி 147 மதிப்பெண்கள் பெற்றார். அவரது மகள் 460 மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்திருக்கார் என்றே சொல்லாம்.

தற்போது, தமிழகத்தில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளிக்கான நேர்முக கலந்தாய்வு சென்னையில் நேரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தென்காசியிலிருந்து தனது மகளுடன் வந்த அமுதவல்லி நேர்முக கலந்தாய்வில் நேற்று கலந்து கொண்ட நிலையில், அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

தாய், மகள் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று சாதித்துள்ள நிலையில், படிப்பிற்கு, 'வயது தடை இல்லை' என்பதை மாணவியின் தாய் அமுதவல்லி நிரூபித்துள்ளார்.

தாயும் மகளும் ஒன்றாக சேர்ந்து படித்து எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருந்தாலும் மகள் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா...? மகள் சேரும் கல்லூரியில் அம்மாவும் சேர்ந்துவிடக் கூடாதாம் என்பதுதான்..!

முதல் முயற்சியிலேயே கனவை எட்டிப்பிடித்த சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துகள்!

logo
Andhimazhai
www.andhimazhai.com