தமிழ்நாட்டில் ஒரே நாளில் இந்திய ஆட்சிப் பணி- ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மீண்டும் மாநிலப் பணிக்கே திரும்பும் முதன்மைச் செயலாளர் இராஜேந்திர ரத்னூ, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, நிறுவனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் கடைசித் தேதியில் ஓய்வுபெறும் த.ந.ஹரிஹரன், தென்காசி ஜவகர், டி.ஜகநாதன் ஆகியோருக்குப் பதிலாக, நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். (இதில் தென்காசி ஜவகர் இரண்டு பதவிகளைக் கவனித்துவந்தார்.)
சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் பதவியிலிருந்து சில்பா பிரபாகர் சதீஷ், வணிகவரி, பத்திரப்பதிவு ஆகிய துறைகளுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டுமே அரசுக்கான அதிக வருவாயை ஈட்டித்தரும் துறைகளாக இருக்கும்நிலையில், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் சில்பா பிரபாகருக்கு தொடர்ச்சியாக நல்லபடியான வாய்ப்புகள் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள முனைவர் ச.விஜயகுமார், ஏற்கெனவே ஒரு பைனான்ஸ் கம்பெனியைப் போன்ற தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இதைப் போலவே பரபரப்பான வேலைகள் குறைவாக உள்ள நிலச்சீர்திருத்த ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நிதித்துறையில்...
இந்த ஆட்சியின் முக்கிய அதிகாரியாகக் கருதப்படும் உதயச்சந்திரன் செயலாளராக உள்ள நிதித்துறையில், இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு செலவினப் பிரிவின் செயலாளராக இருக்கும் நாகராஜன், வணிகவரி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்பும் நா.வெங்கடேஷ், நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆச்சரியப்படுத்தும் மாற்றம்
மனிதவள மேலாண்மைத் துறையின் செயலாளர் கோ.பிரகாஷ், சிஎம்டிஏவின் தலைமைப்பொறுப்பில் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளது, பல தரப்பினரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. ஏனென்றால், கடந்த ஆட்சியில் இவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது பல சர்ச்சைகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு அணுக்கமானவர் என்பதால், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் உட்பட சில தரப்பினர் பிரகாஷ் மீது குற்றஞ்சாட்டிவந்தன.
தி.மு.க. ஆட்சி வந்தபின் பரபரப்பில்லாத பதவிகளில் அமர்த்தப்பட்டார். இப்போது முக்கியமாக கவனிக்கப்படும் சிஎம்டிஏ பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிருப்தி, போராட்டங்கள்... உயர்கல்வி!
உயர்கல்வித் துறையில் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், மூன்று பல்கலைக்கழகங்களில் இப்போதைய செயலாளர் சமயமூர்த்தி தலைமையிலும், மற்றவற்றில் கல்லூரிக் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி தலைமையிலும் பொறுப்புக்குழுக்கள் உள்ளன. இந்நிலையில் பல பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் மோசமாக உள்ளதாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். மதுரையில் அண்மையில் போராட்டமும் நடைபெற்றுள்ளது. பல பல்கலைக்கழகங்களில் அன்றாட கல்வி, ஆராய்ச்சிப் பணிகள் பாதிக்கும் அளவுக்கு எல்லாவற்றுக்கும் மேலிடத்தின் ஒப்புதல் பெறவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளதாக போராடும் சங்கத்தினர் பகிரங்கமாகப் புகார் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில் துறையின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
இவருடன், துறையின் இணைச்செயலாளர் துரை இரவிச்சந்திரனும் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நகராட்சி நிருவாகத் துறையிலிருந்து க. கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதியின் துறை
துணை முதலமைச்சர் உதயநிதியின் பொறுப்பில் வரும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கூடுதல் செயலாளர் சஜீவனா, அவரின் பொறுப்பில் வரும் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் உள்ள ஸ்ரேயா சிங், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சென்னைக்கு உள்ளேயே மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, சஜீவனாவிடன் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சுற்றுலாத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டாசு விபத்து
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து ஜெயசீலன், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் சுகாதாரத் துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தலைநகரில் ஏற்கெனவே பணியாற்றிய இவர், மாவட்டப் பணியாக விருதுநகருக்கு அனுப்பப்பட்டார். சில களப் பணிகளில் பரவலாகப் பெயர் வாங்கினார். ஆனாலும் இவர் பதவிக்காலத்தில் விருதுநகர் மாவட்டத்துக்கே உரிய பட்டாசு விபத்துகள் தொடரும் துயரமாகவே நீடித்துவருகிறது. ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் இதைப் பற்றி உயிரிழப்புகளைத் தவிர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்திவந்தபோதும், சிக்கல் தொடர்ந்தது. இந்நிலையில் இன்றைய மாற்றத்தோடு ஜெயசீலனும் தலைநகருக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
வி.சி.க. அதிருப்தி
இவரைப் போலவே மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள வி.சி.க.வினர் போராட்டங்களே நடத்தினர். அவரும் மாற்றப்பட்டுள்ளார்.
பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் தலைமையிடத்துக்கும் பிற மாவட்டங்களுக்குமாக மாற்றப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர்கள்
நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, ஆவடி, ஒசூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், மாவட்ட அளவிலும் மாநகர அளவிலும் இந்த ஒரேயடியான மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தலைமைச்செயலாளர் முருகானந்தம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.