தமிழகத்தின் 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ன ஆகும்?

MBBS seats
எம்.பி.பி.எஸ் இடங்கள்
Published on: 

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை கல்லூரிகளாக மாறியதால், மாநிலத்துக்கான 700 எம்.பி.பி.எஸ் இடங்கள் பறிபோய்விடும் என பிரச்னை எழுந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும், மேலும் 2 கல்லூரிகள் அதைப் பெற முயன்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழக மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ் இடங்கள் குறையும் என்று பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

பா.ம.க. தலைவர் அன்புமணி, “ தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவது இயல்பானது தான் என்பதால், அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்குவது போன்றவை தமிழக அரசின் கடமை ஆகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

”புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும்.

இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, “ இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கோ, பொறியியல் கல்லூரிகளுக்கோ நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும்போது, மாநில அரசுகளுக்கான இட ஒதுக்கீட்டைக் குறைக்கக்கூடாது என்ற நிபந்தனையை மத்திய அரசும், யு.ஜி.சி-யும் விதிக்க வேண்டும். இதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றால், புதிய சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஊடகத்தினரிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரிகளான தலைட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதால் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை.யின் தடையின்மைச் சான்று இல்லாமல் நேரடியாக நிகர்நிலைக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.” என்றும்,

”செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியும் தடையின்மைச் சான்றுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலையை அணுகியது. தடையின்மைச் சான்றுக்கு கோரிக்கை விடுத்து 60 நாள்களுக்குள் பதில் ஏதும் இல்லாததால், விதிப்படி தமிழக அரசு தடையின்மைச் சான்றுக்கு ஒப்புக்கொண்டதாக அர்த்தம். இதுகுறித்து வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, அரசிடம் இருந்து 60 நாள்களுக்குள் பதில் இல்லாததால், விதிகளுக்கு உட்பட்டு கல்லூரிக்குத் தடையின்மைச் சான்றுக்கு ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கற்பக விநாயகா கல்லூரிக்கு 60 நாள் வரை அரசு சார்பில் பதில் ஏதும் அளிக்காமல் 60ஆவது நாள் தடையின்மைச் சான்றுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, யுஜிசி விதிப்படி அந்த கல்லூரிக்கு தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேபோல, இன்னும் இரண்டு கல்லூரிகள் நிகர்நிலைக் கல்லூரி அந்தஸ்து பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சனை குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேசி வருகிறோம். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றப்படுவதால், தமிழக இடஒதுக்கீட்டில் இருந்து சீட்டுகள் பறிபோகும்; 7.5% இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படும். மேலும், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கும் வாய்ப்பு உருவாகும்.” என்று ஆதங்கப்பட்டார்.

"தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை.” என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

”தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாள்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தெளிவான பதிலை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

எப்படியோ, தமிழகம் இழக்கப்போகும் மருத்துவப் படிப்பு இடங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்பதே மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com