சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று மாலையில் தொடங்கியுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அவர், ஏழு மாவட்டங்களில் 33 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். வரும் 23ஆம் தேதி பட்டுக்கோட்டை தொகுதியில் இது நிறைவுபெறுகிறது.
ஜெயலலிதா காலத்திலும் பின்னர் இதே எடப்பாடி காலத்திலும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போது, கூட்டணிக் கட்சிகள் உடன் இருந்ததில்லை. அந்த வழக்கத்துக்கு மாறாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மைய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பழனிசாமியின் இந்தப் பிரச்சார வாகனத்திலேயே ஏறி, கூட்டணியின் பிரச்சாரமாக மாறியிருந்தது.
முதல் கூட்டத்திலேயே எக்கியடிப்பது என்கிற பாணியைக் கையில் எடுத்த பழனிசாமி, ஆளும் கட்சி மீதான குற்றச்சாட்டுகளை வைத்ததுடன், குறிப்பாக மத்திய அரசிடமிருந்து பணப்பயன்களைப் பெற்றுத் தருவதில் தோல்வியடைந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் தங்கள் ஆட்சியில் செயல்பட்ட நல்ல நல்ல திட்டங்களை எல்லாம் ஸ்டாலின் வந்து தடுத்துநிறுத்திவிட்டார் என்றும் சாடினார்.
இடையிடையே மக்களிடமும் கேள்விகேட்டு உற்சாகமாக ஓங்கிப் பேசினார், எடப்பாடி பழனிசாமி.
எதிர்த்தரப்பில் தி.மு.க. சார்பில் அடிமைகள் என்கிறபடி வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலடி தரும்வகையில், பா.ஜ.க.வுடன் தி.மு.க. 1990-களில் கூட்டணி வைத்ததைச் சுட்டிக்காட்டி, ”நீங்கள் கூட்டு வைத்தால் மட்டும் சரி, நாங்கள் கூட்டணி வைத்தால் தவறா” என்றும் பாயிண்டாகப் பேசினார், எடப்பாடி.
வழக்கமான, பிரச்சாரமாக இது இல்லை. ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் செய்யப்பட்ட பிரச்சாரத்துக்கும் இதற்கும் தெளிவான வித்தியாசம் காணப்படுகிறது.
காரணம், தி.மு.க.வின் தேர்தல் உத்தி, பிரச்சாரத்தை வகுப்பதற்காக தனியார் நிறுவனம் இருப்பதைப் போலவே, அ.தி.மு.க.வுக்காகவும் பக்காவான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க.வுக்கோ அந்தந்தக் கட்சிகளின் தேர்தல் பணியில் அனுபவம் பெற்ற பழுத்த நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், பிரச்சாரம் முழுவதும் செய்யப்படும் என்கிற காலம் மலையேறிவிட்டது.
தி.மு.க.வுக்காக வேலைசெய்த தேர்தல் உத்தி வகுப்பாளரான சுனில் கோக்லு போன தேர்தலில் அ.தி.மு.க.வுக்காகப் பணியாற்றினார். ஆனால், மீண்டும் தி.மு.க. பக்கம் போய் உதயநிதியை மையப்படுத்தி அவரை முன்னணிக்குக் கொண்டுவருவதற்கான உத்திகளில் ஈடுபட்டுவருகிறார் என்று தகவல்கள் வந்தன. தி.மு.க. தரப்பில் அதை இதுவரை அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை.
இதனிடையே, தி.மு.க.வுக்காக சுனிலுக்கு முன்னரும் பின்னரும் வேலை செய்துகொடுத்த அவரின் முன்னோடி பீகார் பிரசாந்த் கிசோர், விஜய்யின் த.வெ.க.வுக்காக வேலைசெய்தார். பீகார் தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிடுவதை முன்னிட்டு, தற்காலிகமாக த.வெ.க. வேலையை அவர் விட்டுவிட்டார்.
இந்த நிலையில், பல மாதங்களாகவே, அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சாரப் பணிகளை கவனிப்பதற்காக, பல்வேறு அணிகளைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு வேலைகளைச் செய்துவருகிறது.
தி.மு.க. சார்பு பென் நிறுவனத்தைப் போலவே, இந்தக் குழுவினரும் சமூக ஊடகங்களை முக்கியமாகக் குறிவைத்து வேலைசெய்கின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என பல்வேறு திட்டங்கள், பணிகளைப் பற்றி பெருமிதமாகக் கூறும், ஒலிஒளித் தொகுப்புகள் அன்றாடம் தயாரிக்கப்பட்டு, அ.தி.மு.க.வின் சமூக ஊடக அணியினருக்குப் பகிரப்படுகிறது. மாவட்ட அளவில் உள்ள ஐடி விங் எனப்படும் சமூக ஊடக அணியினர் இதை சிறிய கிராமம்வரை எளிதாகக் கொண்டுசெல்கிறார்கள். இதற்காக சென்னை முதல் சிற்றூர்வரை நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, தயார்ப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் அன்றாடம் ஆளும் கட்சிக்கு எதிரான நிகழ்வுகளில் எதிர்ப்பு, கண்டனம், விமர்சனம் அடங்கிய எதிர்வினைக் காணொலிகளையும் உருவாக்கிப் பரப்பிவருகின்றனர்.
இந்த நிலையில்தான், தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் மையம்; அவரைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் இல்லை என்பதில் தீர்மானமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது, அ.தி.மு.க.வில்! எனவே, அவருடைய பேச்சை எதிர்த்தரப்புக்கு எதிராக, வலுவாக இருக்கும்படி அமைப்பதிலும் அ.தி.மு.க.வின் தேர்தல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எழுதிவைத்த குறிப்புகளைப் பார்த்துப் படிப்பதை பழனிசாமி பொதுவாக தவிர்க்கிறார். அவருடைய இந்த பாணி மக்களிடம் எடுபடுகிறது என நம்புகிறார்கள், அ.தி.மு.க.வில். ஆனாலும் அவருடைய பேச்சுக்கான குறிப்புகள் திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை மையமிட்டும் எல்லையை மீறாமலும் அவருடைய பேச்சு அமைக்கப்படுகிறது.
” பெரிய இரகசியம் எல்லாம் இதில் இல்லை. நான்கே நான்கு விசயங்கள்தான், மொத்தப் பிரச்சாரத்தின் அடிப்படை. தி.மு.க. தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொள்வது என்னென்ன, அ.தி.மு.க.வைப் பற்றி செய்யும் எதிர்ப்பிரச்சாரம், அ.தி.மு.க. செய்யவேண்டிய சாதனைப் பிரச்சாரம், தி.மு.க.வுக்குத் தரவேண்டிய பதிலடிகள் என்னென்ன... இவற்றை உள்ளடக்கி அந்தந்த ஊருக்கு ஏற்றாற்போல விசயங்களைக் கூட்டியோ குறைத்தோ வைத்துக்கொள்வது என்கிறபடிதான் இந்தப் பிரச்சாரம் இருக்கும்.” என்கிறது, அ.தி.மு.க.வின் உள்வட்டத் தகவல்.
ஜனரஞ்சமாக இந்த பாணியில் பிரச்சாரத்தை எடுத்துக்கொண்டு போனாலே கணிசமான வாக்குகளைத் திரட்ட முடியும் என நம்புகிறார்கள், அ.தி.மு.க. தரப்பில்!
ஏனோ, ’போகப் போகத் தெரியும்... அந்தப் பூவின் வாசம் புரியும்’ என்கிற ’சர்வர் சுந்தரம்’ படப் பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது!
பார்ப்போம்!