கூகுள், மைக்ரோசாப்டை அடுத்து அமேசான்... இந்தியாவில் 3500 கோடி முதலீடு!

அமேசான்
அமேசான்
Published on

அமேசான் நிறுவனம் இந்தியாவில் அடுத்த கட்டமாக பெரும் முதலீட்டைச் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 3500 கோடி டாலர் அளவுக்கு அதன் முதலீடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய முதலீடானது இந்த நிறுவனத்தின் பன்னாட்டுச் சந்தை முதலீட்டில் பெரியதாக இருக்கப்போகிறது.

இதன் மூலம் அமேசானின் இந்திய முதலீடு இரண்டு மடங்காக அதிகரிக்கும். முன்னதாக, கடந்த 2010ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 4000 கோடி டாலர் முதலீடு செய்தது.

அந்த வர்த்தகத்தை விரிவுபடுத்தி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல்மயமாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் முதலீட்டு அறிவிப்பை அடுத்து அமேசானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் செய்யறிவுத் தொழில்நுட்பம், மேகக்கணிமைக் கட்டமைப்பு ஆகியவற்றில் 1750 கோடி டாலரை முதலீடு செய்யப்போவதாக மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்திருந்தார்.

அமேசானின் புதிய முதலீட்டின் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படும் என்றும் 8000 கோடி டாலர் அளவுக்கு ஏற்றூமதி அதிகரிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமேசானின் செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் 1.5 கோடி சிறு வணிகஙளுக்கும் பத்து கோடிக்கணக்கான கடைக்காரர்களுக்கும் பயன் கிடைக்கச் செய்யப்படும் என்றும் 40 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு செய்யறிவுத் தொழில்நுட்பக் கல்வியையும் வேலைவாய்ப்புக்கான விழிப்பூட்டலையும் வழங்கவுள்ளதாகவும் அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியாவின் முதுநிலைத் துணைத்தலைவர் அமித் அகர்வால் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த நிறுவனம் இந்தியாவில் 200 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் இதை 8000 கோடி டாலர் ஏற்றுமதி என அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் உலகளாவிய அளவில் வெற்றிகரமான விற்பனையாளர்களாக மாறுவதற்கு உதவவும், டிஜிட்டல் தொழில்முனைவோரை உற்பத்தியாளர்களுடன் இணைக்கவும் ஏற்றுமதியை முடுக்கிவிடுவோம் என்கிற ஒரு முயற்சியை இந்த நிறுவனம் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, நாடளவில் பத்து உற்பத்தித் தொழில் மையங்களில் ஆன்போர்டிங் முனைப்புகளையும் மேற்கொள்ளவுள்ளது. இதில், திருப்பூர், கான்பூர், சூரத் ஆகிய ஊர்களும் அடக்கம். அண்மையில் நடைபெற்ற தொழில் மாநாடு ஒன்றில், ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சிலுடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், விரைவு வணிகத்திலும் அமேசானின் முனைப்பு அதிகரித்துள்ளது. பத்து நிமிடங்களில் டெலிவரி செய்வதை இலக்காக வைத்து திட்டங்களைத் தீட்டிவருகிறது. பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிக்பேஸ்கட், பிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இந்தச் சந்தையில் அமேசான் கடும் போட்டி போடவுள்ளது. பெரிய நகரங்களில் இதற்காக நாளுக்கு இரண்டு சேமிப்புக் கிடங்குகள் என அமைத்து வருகிறது. ஆண்டுக் கடைசிக்குள் 300 இடங்களில் அமேசானின் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு விடும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமேசான் இந்தியாவின் பல பிரிவுகளும் செலவுகளைக் குறைத்து வருகின்றன. அதன் முக்கிய நிறுவனங்களில் அமேசான் செல்லர் சர்வீசஸ், அமேசான் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ்,அமேசான் ஹோல்சேல், அமேசான் பே ஆகியவைவரை விளம்பர, பணியாளர் செலவுகளைக் குறைப்பின் மூலம் 2025ஆம் நிதியாண்டில் இழப்பைக் குறைத்துள்ளது.

அமேசான் செல்லர் சர்வீசஸின் வருமானம் 19 சதவீதம் அதிகரித்து ரூ.30,139 கோடியாக உயர்ந்துள்ளது, இது கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அது அடைந்த உச்சத்திலிருந்து தொடர்ச்சியான மீட்சியைக் காட்டுகிறது.

அமேசான், மைக்ரோசாப்டுக்கு முன்னதாக கூகுள் நிறுவனமானது தெலங்கானாவின் விசாகப்பட்டினத்தில் பெரும் செய்யறிவுத் தரவு மையம் அமைக்க 1500 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்திய தகவல்நுட்பத் துறையில் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில் அதிகரித்து வருவது பன்னாட்டு அளவில் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com