சமீபத்தில் சமூக ஊடகத்தில் கண்ட காணொளி ஒன்று உலுக்கிவிட்டது. பரபரப்பான சாலையில் பசுமாடொன்றை ஓடிவந்து நாய் கடிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்த நாயை கம்பு ஒன்றால் தாக்குகிறார். நாய் அடி தாங்காமல் கீழே விழுகிறது. இளைஞர் ஒருவர் அடிப்பவரைத் தடுத்து அவரிடம் அடிக்கக்கூடாது என வாக்குவாதம் செய்கிறார். இந்நிலையில் கீழே கிடக்கும் நாய் மெல்ல எழுந்து, தனக்காக வாக்குவாதம் செய்துகொண்டிருக்கும் இளைஞரை ஒரே கடி... அவர் கதறி ஓடுகிறார்!
இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு.. என்று பல கருத்துகளையும் அந்த ஊடகத்தில் பார்க்க முடிந்தது. தெருநாய்கள் என்பவை நாட்டில் பெரும் தொல்லைகளாக மாறி விட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. அவற்றை மனிதாபிமானமாக.. நடத்த விலங்காபிமான மனிதர்கள் போராடினாலும் நிலைமை கைமீறிக்கொண்டு உள்ளது.
இதைத் தொடர்ந்துதான் ஒரே நாளில் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கடுமையாக எடுத்துக்கொண்டு உத்தரவிட்ட அரிதான ஒரு பிரச்னையாக, நாய்க்கடி விவகாரம் பொது சுகாதார வரலாற்றில் சமீபத்தில் பதிவாகியுள்ளது.
தெருநாய்க் கடி, வெறிநோய்- ரேபிஸ் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றமே கடந்த மாதம் சுயவழக்காக எடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கியது. அதில்தான் நீதிபதிகள் பர்திவாலா- மகாதேவன் அமர்வு அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.
எட்டு வாரங்களுக்குள் நாட்டுத் தலைநகர் தில்லி வட்டாரத்தில் உள்ள அனைத்து நாய்களைப் பிடித்து காப்பகத்தில் வைப்பது, வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தல், கருத்தடை ஆகியவற்றைச் செய்தாக வேண்டும் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 70 சதவீதம் அளவுக்கு நாய்க்கடி அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமான அளவில் மூன்று இலட்சம், நான்கு இலட்சம் என்கிறபடி மக்கள் நாய்க்கடிக்கு ஆளாகிவருகின்றனர். பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நாய்க்கடி பாதிப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாக இருந்தாலும் ஓராண்டுக்கு முந்தைய நிலையைவிடக் குறைந்திருக்கிறது.
அதிகரிப்புவீதம் எனப் பார்த்தால், அசாமில் நான்கு மடங்காகவும் மேற்குவங்கத்திலும் தலைநகர் தில்லியிலும் மூன்று மடங்குக்கும் கூடுதலாக நாய்க்கடி பாதிப்பு பதிவாகியுள்ளது.
பீகார் முதலிய பல மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இந்த நாய்க்கடியை அலட்சியமாக விட்டுவிட்டால் வெறிநோய் வந்து உயிரையே பலிகொள்ளும் அளவுக்கு மாறுவதுதான், சிக்கல். வெறிநோய்க்கான 96% காரணம், தெருநாய்க்கடிதான் என்கின்றன, புள்ளிவிவரங்கள்.
வெறிநோயால் 2022ஆம் ஆண்டில் 21 பேரும், அடுத்த ஆண்டில் 50 பேரும், கடந்த ஆண்டில் 54 பேரும் இறந்துபோயுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா 14 பேரும், 2022இல் 7 பேரும் வெறிநோய்க்கு பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2022-லும் கடந்த ஆண்டும் தலா இரண்டு பேர் வெறிநோயால் இறந்துபோனார்கள். 2023ஆம் ஆண்டில் மட்டும் 5 பேர் இதற்குப் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் நாய்க்கடியால் 2022இல் 3,64,435 பேரும் அடுத்த ஆண்டில் 4,41,796 பேரும் 2024இல் 4,80,427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு
சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபல விலங்குநல ஆர்வலர் பாஸ்கரிடம் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேட்டோம்.
" நாட்டில் எத்தனை இலட்சம் நாய்கள் உண்டு என கணக்கு இருக்கிறதா... எல்லா நாய்களையும் பிடித்து பட்டியில் அடைக்கச் சொல்லியிருக்கிறது. எத்தனை பட்டிகள் இருக்கின்றன? எட்டு வாரங்களில் பட்டிகள் அமைக்கமுடியுமா? அத்தனை நாய்களுக்கு உணவு, அவற்றின் கழிவகற்றல், எங்கே கொட்டுவது... அதற்கு உரிய கட்டமைப்பே இல்லாதபோது வாய்ப்பு இல்லை.” என்கிறார் அவர்.
மேலும், “ நாய்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்கின்றன. முன்னரெல்லாம் கருத்தடை மையங்கள் இல்லை. புளூகிராஸ் போன்ற அமைப்புகளிடம் அனுப்பி கருத்தடை செய்வார்கள். இப்போது அரசாங்கமே கருத்தடை மையங்களை கொண்டுவருகிறது. அதில் ஊழல் என்றுகூட பிரச்னை. அது வேறு. எல்லா இடங்களிலும் கருத்தடை மையங்கள் என அரசு எடுத்துள்ள முடிவால் படிப்படியாக இது கட்டுப்பட்டுவிடும்.” என்றும் பாஸ்கர் கூறுகிறார்.
”திட்டப்படி, எல்லா தெருநாய்களையும் பிடித்து கருத்தடை செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தெருவில் நாய்களே இல்லாமல் போய்விடும். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வாழக்கூடிய நாய்கள் என்றாலும் இதுதான் நிலைமை. பிறகு வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமே இருக்கும். ஒரு காலத்தில் கட்டுப்படுத்த முடியாத விலங்குகளைத்தான் கூண்டில் அடைப்பார்கள். இப்போது மனிதர்களே கூண்டுகளாக கேட்டட் கம்யூனிட்டியாக மாறிவருகிறார்கள்.” என உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறார், பாஸ்கர்.
என்ன செய்வது?
அரசின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, நம்மை நாமே காத்துக்கொள்வது முதல் நிலைப் பாதுகாப்பாக இருக்கிறது. நான்கு செயல்களை கட்டாயமாகச் செய்யவேண்டும் என்கிறார்கள், கால்நடை- பொதுநல மருத்துவர்கள்.
காயம்பட்ட இடத்தை நன்றாக சோப், தண்ணீரால் கழுவவேண்டும்.
உடனடியாக அருகில் உள்ள வெறிநோய்த் தடுப்பு சிகிச்சை மையத்தை நாடவேண்டும்.
மருத்துவ அறிவுரைப்படியான முழுமையான தடுப்பூசி விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தெருநாய்க் கடி என்றால் உரிய அதிகாரியிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவேண்டும்.