
அமெரிக்காவைப் போல சீனாவிலும் ஓட்டுநர் இல்லாத ரோபோ டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மத்திய சீனாவில் உள்ள ஜுஜோவ் நகரில் செயல்பட்டுவரும் ஹல்லோ ரோபோடாக்சி ஒன்று சாலையில் நடந்துசென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. நேற்றுமுன்தினம் காலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவிவருகிறது.
ரோபோ கார் மோதியதில் ஒருவர் தூக்கிவீசப்பட்டார். இன்னொருவர் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இருவரையும் அந்த வழியே சென்றவர்கள் காரிலிருந்து விடுவித்து காப்பாற்றினர். பின்னர் அவர்களை மருத்துவ உதவிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ரோபோ கார் ஹல்லோ தானாக ஓடும் கார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; அதிலும், 3009 என்கிற எண்ணும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். பாதசாரிகள் கடப்பதற்குள் அவர்களை மோதி வீசியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவசர உதவி சேவைகள் துறைக்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட பெண், ஆண் இருவரையும் ஹூணான் மாநில சீன மரபு மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டாபங் செய்தி ஊடகத்தினர் பேசியபோது, ஹல்லோ வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி விபத்து குறித்து தங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் விசாரணையில் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். உள்ளூர் காவல்துறையினருக்கு விபத்து தொடர்பாக புகார்கள் அனுப்பப்பட்டதை அடுத்து, அவர்கள் சட்டத்துறைக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டுசென்றுள்ளனர்.
சாதாரணமாக, மனிதர்கள் ஓட்டும் பேருந்து, கார் போன்ற வண்டிகள் விபத்து ஏற்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மனிதரே அல்லாமல் முற்றிலும் ரோபா கார் அதாவது தானாக இயங்கும் கார் விபத்தை ஏற்படுத்தும்போது என்ன மாதிரி நடவடிக்கைகளை எடுப்பது என்பது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, ஜுஜோவ் நகரில் கடந்த ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட இந்த தானாக ஓடும் ஹல்லோ கார் சேவை, நகரில் 20-30 வரை குறிப்பிட்ட சாலைகளில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஹல்லோ நிறுவனத்தின் சார்பில் சுயமாக உருவாக்கப்பட்ட எல் 4 வகை ’எச்.ஆர்.1’ என்கிற புதிய கார் சோதனையோட்டத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் விபத்தை ஏற்படுத்தியது அப்பல்லோ ஆர்டி6 மாடல் கார் ஆகும். ஹல்லோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான பைடுவிடமிருந்து இந்த கார் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த வகை காரானது, ஆறாம் தலைமுறை ’தானாக ஓடும்’ கார் மாடல் ஆகும். இதன் தயாரிப்புச் செலவு அதிகபட்சம் 30 ஆயிரம் டாலர்வரை.
அடிப்படையில் பைக் ஷேரிங் நிறுவனமான ஹல்லோ, முன்னதாக ஹல்லோ பைக் என்ற பெயரில்தான் இயங்கி வந்தது. பிறகு, வாகன சவாரி ஏற்பாட்டு நிறுவனமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக, ’தானாக ஓடும்’ வாகனங்கள் உற்பத்தியில் இறங்கியுள்ளது.
இந்த விபத்து நிகழ்வதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான், எல்4 வகை கார்களை அடுத்த ஆண்டு ஜூன்வாக்கில் பெரும் அளவில் உற்பத்தி செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு மார்ச்சில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை விற்பனைக்குக் கொண்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. கம்பெனியின் இணை நிறுவனர் யூ கியான்குன் வரும் 2027ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் ரோபோ டாக்சிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
உலக அளவில் ’தானாக ஓடும்’ கார் சேவையில் பைடுவின் ‘அப்பல்லோ கோ’ நிறுவனம் முன்னணியில் இருந்துவருகிறது. இப்போதைய நிலவரப்படி, அதன் சார்பில் 22 நகரங்களில் ரோபோடாக்சிகள் இயக்கப்படுகின்றன. இதில், சீனத்து நகரங்களான பெய்ஜிங், சாங்காய், ஊகான், சென்சென் ஆகியவையும் ஹாங்காங்கும் அடங்கும். அரபு நாடுகளின் துபாய், அபுதாபி ஆகிய நகரங்களிலும் இந்த கார்சேவை உள்ளது.
ஹல்லோவின் ரோபோடாக்சி சேவையானது சீனத்தில் ஜூஜோவ், லியாங் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், விபத்து காரணமாக ஜூஜோவ் நகரில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.