கேள்விப்பட்டீங்களா... முதியோரை வரவேற்கும் கோவை மாநகரம்!

India's senior living capital - Coimbatore
வயதானோரை வரவேற்கும் கோவை மாநகரம்!
Published on

வந்தாரை வாழவைக்கும் நகரம் சென்னை என்று சொல்வது ஒரு பக்கம் என்றால், வயதானோரை வரவேற்கும் நகரமாக உருவெடுத்துள்ளது கோவை மாநகரம்.

ஒரு பக்கம் தொழில் நகரமாக வளர்ந்துவந்தாலும், மறுபக்கம் குளிர்காற்றுடன் கூடிய மனதிற்கு இதமான வானிலையுடன், ஓய்வெடுக்க விரும்புவர்களை வரவேற்கிறது கோவை.

இந்தியாவின் மூத்த குடிமக்கள் வாழும் தலைநகராக மாறியுள்ளது தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை.

தனது வாழ்நாளில், வேலை செய்யும் நாள்களை இந்தியாவின் பெரும் நகரங்களில் வாழும் மக்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரும்பாலானோர் அதே நகரங்களில் வாழ விரும்புவதில்லை. அவர்கள் தங்களது ஓய்வு காலத்தை ஒரு நல்ல வானிலையுடன் கூடிய சுகாதார வசதிகள், உட்கட்டமைப்புகள் இருக்கும் இடங்களில், அமைதியாக வாழ விரும்புகின்றனர்.

அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்து தரும் ஒரு நகரமாக தற்போது தமிழகத்தின் கோவை மாநகரம் உருவெடுத்துள்ளது.

கோவையில் மட்டும் 5,500 நவீன, மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட மூத்தோர் குடியிருப்பு இல்லங்கள் உள்ளதாகக் கூறுகிறார், நோயிசிஸ் கேபிடல் அட்வைசர்ஸ் நிறுவனர் நந்திவர்தன் ஜெயின்.

இந்தியாவிற்கு 3,00,000 ஒழுங்கமைக்கப்பட்ட மூத்தோர் குடியிருப்பு இல்லங்கள் தேவை என்கிறார், மூத்த குடிமக்களுக்கான ஆலோசனைக் கூட்டமைப்பை நடத்தும் பி.எஸ். சிவகுமார்.

கடந்த காலங்களில் ரூ. 70 இலட்சத்திற்கு விற்பனையான மூத்தோர் குடியிருப்புகள், தற்போது ரூ. 3.5 கோடிவரை செல்கிறது. இதைவைத்துப் பார்க்கும்போது, மூத்த குடிமக்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய நாகரிக வாழ்வை வாழ விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதைக் காட்டுகிறது.

மூத்த குடிமக்கள் என்றாலே யாரோ ஒருவரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையில் பாதுகாப்பான, வசதியான, அமைதியான சமூகத்தில் வாழ்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக, ஓய்வுபெறுவதற்கு முன்னரே இதுபோன்ற இடங்களைத் தேடிவைத்து விடுகிறார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 25,050 மூத்தோர் குடியிருப்புகள் தேவைப்பட்டதாகவும், அவற்றில் 80 – 85% தேவைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் மூத்தோர் குடியிருப்புக்கான கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டைவிட 14.2% அதிகம்.

இந்தியாவின் மொத்த மூத்த குடிமக்கள் எண்ணிக்கையில் 22%-க்கும் மேற்பட்டோர் தங்களது ஓய்வுகாலத்தைக் கடக்க, கோவையைத் தேர்ந்தெடுக்கின்றனர். கூட்டுக்குடும்பங்கள் உடைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்து வருவதும் இதற்கான முக்கிய காரணம். நல்ல வானிலை, கோவையின் சுகாதார வசதிகள் போன்றவை பல்வேறு தரப்பினரையும் கோவையின் பக்கம் ஈர்க்கிறது.

சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல வசதியாக உள்ளதாலும், பெற்றோர்களை எளிதில் அணுகக்கூடிய கோவையில் குடியமர்த்த இளைய தலைமுறையினரும் விரும்புவதாலும், கோவையில் மூத்த குடிமக்களுக்கான வீடு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

"மூத்தோருக்கான குடியிருப்பு விற்பனைகள் பார்க்க ரியல் எஸ்டேட் போலத் தோன்றினாலும், அவை ஹோட்டல்கள் போலவே செயல்படுகின்றன.

அதாவது, வீட்டை வாங்கும் மூத்தோருக்கு அந்தக் குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம் 20 ஆண்டுகள்வரை மாதாந்திரக் கட்டணத்துடன் சேவைகளைப் புரிவதையும் கடப்பாடாக ஏற்றுக்கொள்கின்றன.

இதில் ஏதேனும் குறைபாடுகள் நிகழ்ந்தாலோ, வழங்கப்படும் சேவையின் தரம் குறைந்தாலோ, அந்த நகரத்தில் மறுவிற்பனைகள் குறைவதுடன், இந்த பிராண்ட்டும் அழிந்து விடும்." என்கிறார் நோயிசிஸ் கேபிடல் அட்வைசர்ஸ் நிறுவனர் நந்திவர்தன் ஜெயின்.

ஏனுங்க... நீங்க எப்போ கிளம்பறீங்க நம்ம கோயம்புத்தூருக்கு?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com