அதுக்கு ஒரு லட்சம் செலவாகும்; எல்லோராலும் முடியுமா? வாங்கிக் கட்டிக்கொள்ளும் நடிகரின் மனைவி!

ராம்சரண் மனைவி உபாசனா
ராம்சரண் மனைவி உபாசனா
Published on

கடந்த சில நாட்களாக தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா பேசுபொருளாகி இருக்கிறார். அதற்கு காரணம், ”பெண்கள் தங்கள் கருமுட்டைகளை மருத்துவ ரீதியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்ற பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்த கருத்து விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

அவரது பேச்சின் சாராம்சத்தை சற்றே விரிவாகப் பார்க்கலாம். ஹைதராபாத் ஐஐடியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உபாசனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு மாணவர்கள் மத்தியில் அவர் உரையாடியபோது, ‛‛பெண்களுக்கான இன்ஸூரன்ஸ் என்பது தங்கள் கருமுட்டையை உறைய வைப்பது. எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்பது உங்களின் விருப்பமாக தான் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது குழந்தையை பெற்றெடுக்கலாம். நான் இன்று என் சொந்த காலில் சுதந்திரமாக நிற்கிறேன். என் பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளேன். இது என் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதுபோன்ற தைரியம் உங்களுக்கும் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் 30 வயதிற்குள் உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு உங்களைத் தடுக்க யாராலும் முடியாது'' என்று கூறினார்.

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட சொல்கிறார் உபாசனா என்ற விவாதம் இணையவெளியில் கிளம்பியது. உண்மையில் கருமுட்டை உறைய வைப்பதன் பின்னணியில் நடப்பது என்ன, அதன் சாதக- பாதகங்கள் என்னென்ன என்பது பற்றி ஆகாஷ் ஃபெர்டிலிட்டில் சென்டர் & ஹாஸ்பிடல் மருத்துவர் ஜெயராணி காமராஜிடம் பேசினோம், “முதலில் இந்த கருமுட்டை உறைய வைத்தல் முறை ஆரம்பிக்கப்பட்டது இளவயதிலேயே இரத்த லுக்கீமியா, சார்கோமோ, மின்கோமோ போன்ற புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்காகதான். புற்றுநோய் பாதிப்பில் ரேடியேஷன், கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் கொடுப்பதால் ஆண்- பெண் இருவரின் கருமுட்டை, விந்தணுக்கள் அழிந்துவிடும். அதன்பிறகு, அவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதில்லை. பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் முறையான சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு விடுவார்கள். இருந்தாலும், சிசிக்சை முறையால் குழந்தையின்மை பிரச்சினை இவர்களுக்கு இருக்கும்.

மருத்துவர் ஜெயராணி காமராஜ்
மருத்துவர் ஜெயராணி காமராஜ்

அதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஃபெர்டிலிட்டி ஃபிரசர்வேஷன்’ முறை. இவர்களது கருமுட்டைகளை உறைய வைப்பதால் மரபுரீதியிலான தங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், தற்காலத்தில் ஆண்- பெண் இருவரும் கல்வி, தனிப்பட்ட விருப்பம், வாழ்க்கை முறை போன்ற காரனங்களால் குழந்தை பிறப்பை தள்ளி வைக்க விரும்புகிறார்கள். இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு 30 வயதில்தான் திருமணம் நடக்கிறது. அதிலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள இன்னும் காலம் தாழ்த்துகிறார்கள். இதனால் வயது ஆக கருமுட்டை தரம் குறைகிறது. இது பெரும் சவாலானாதாகவும் மாறுகிறது. உடல் ரீதியான காரணங்கள் இல்லாமல் நான் – மெடிக்கல் காரணங்களான வேலை, வாழ்க்கை முறை, நல்ல துணை கிடைக்கவில்லை போன்ற சமூக காரணங்களால் கருமுட்டை தரம் குறைகிறது என்றால் இந்த கருமுட்டை உறைய வைத்தல் பரிந்துரைக்கப்படும்.

இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் இது அதிகமாக இருக்கிறது. சிலருக்கு 35 வயதில் திருமணம் நடந்தாலும் இயற்கையாகவே கர்ப்பமாகிறார்கள். அவர்கள் முன்பே கருமுட்டையை உறைய வைத்திருப்பார்கள். சிலர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அந்த முட்டையை எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள். பலர் வேண்டாம் என விட்டுவிடுவார்கள். அந்த வகையில், கிட்டத்தட்ட 42% மக்கள் உறைய வைத்த தங்கள் கருமுட்டையை இன்னும் கிளைய்ம் செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய தரவு. 28 வயதில் இருப்பவர்களிடம் சுமார்10 கருமுட்டைகள் எடுத்தாலே போதுமானது. அவர்களுக்கு 80% குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. அதற்கு மேல் வயது தாண்டிப் போகிறது என்றால் கருமுட்டை எடுக்க பல சைக்கிள்கள் ஆகும். 32- 35 வயதிற்குள் கருமுட்டை உறைய வைப்பது நல்லது” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “கருமுட்டை உறைய வைத்தாலும் 40 வயதிற்கு மேல் பெண்களுக்கு குழந்தை உண்டானால் சர்க்கரை வியாதி, கிட்னி, இதயப்பிரச்சினை, பிபி போன்ற கர்ப்பகால சிக்கல்கள் வர அதிக வாய்ப்புண்டு. நல்ல முட்டை, நல்ல கரு உண்டாகும். ஆனால், உடல்ரீதியான பிரச்சினைகள் அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கருமுட்டை உறைய வைத்தல் எத்தனை காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். இதற்கான செலவு கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் வரை ஆகும். இதனை வருடா வருடம் பணம் செலவழித்து நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்பதையும் மறக்காதீர்கள்” என்றார்.

பணக்காரங்க சொல்றதக் கேட்காதீங்க... உபாசனா 23 வயதிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டவர். கருமுட்டை உறைய வைக்க செலவாகும், எல்லோராலும் அது முடியுமா? என்ற குரல்களும் இணையத்தில் பலமாகக் கேட்கிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com