தலைமைச்செயலாளர் சாய்குமாரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் செல்லசுவாமி பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
’தென்னைமரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்திற்கு ஏன் நெறிகட்டுது?’ எனும் தலைப்பில், அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தன் முகநூல் பக்கத்தில் கருத்திட்டுள்ளார்.
"மாணவர்களை அச்சுறுத்தும்படி சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்."என்று மார்க்சிஸ்ட் கட்சியின் செல்லச்சாமி சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைத்தால் அதை ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்? அமைச்சர் செங்கோட்டையன் அந்த சுற்றறிக்கையை நியாயப்படுத்துகிறாரா? அல்லது இப்படி ஒரு கோரிக்கை வைப்பது எந்த வகையில் மரபுக்கு அல்லது சட்டத்திற்கு எதிரானது?” என்று கனகராஜ் கேட்டுள்ளார்.
முன்னதாக, பேரவையில் பேசிய செல்லசுவாமி, “உரிமைகளுக்காகப் போராடிய இடதுசாரி மாணவர்களை பயங்கரவாதிகளைப் போலச் சித்திரித்து, மிரட்டும் தொனியில் அரசின் தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியது, அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப் பிடியில் இருக்கும் தலைமைச்செயலாளர் பணி ஓய்வு பெற்றும் இனியும் அந்தப் பதவியில் நீடிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. எனவே, அவரை உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், ”தலைமைச்செயலாளரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என சட்டமன்றத்தில் பேசுவது சரியாக இருக்காது. எனவே இதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டும்.” என்று கூறினார்.
அப்போது, தலைவர் இருக்கையில் இருந்த சட்டப்பேரவைத் துணைத்தலைவர் அந்த வாசகத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.