சர்ச்சைகளுக்குரிய முன்னாள் நீதிபதி கர்ணன் காலமானார்!

முன்னாள் நீதிபதி கர்ணன்
முன்னாள் நீதிபதி கர்ணன்
Published on: 

சர்ச்சைகளுக்காக அறியப்பட்டிருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 71.

இந்தியாவிலேயே பணியில் இருக்கும்போதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே நீதிபதி இவர்தான். 2017-இல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத தண்டனை விதித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கருநத்தம் என்ற கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் கர்ணன். அவருடைய இயற்பெயர் கருணாநிதி. 1991 –இல் தன் மனைவியின் வேண்டுகோளின் படி கர்ணன் என மாற்றிக்கொண்டார் என்பது ஒரு தகவல்.

1983-இல் சென்னை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த அவர் வழக்கறிஞராகப் பணியாற்றி 2009-இல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011-இல் நிரந்தர நீதிபதி ஆனார்.

தன்னை தலித் என்பதால் பிற நீதிபதிகள் மதிப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியது அக்காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் மீதும் இக்குற்றச்சாட்டை அவர் வைத்தார்.

2014-இல் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பட்டியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.

2016-இல் இவரை கொல்கத்தா உயநீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்தனர். ஆனால் இந்த பணிமாற்றத்துக்கு இவரே தடையாணை விதித்ததாகவும் சொல்லப்பட்டது. அதனால் இதிலும் சர்ச்சை எழுந்தது.

இந்த பஞ்சாயத்து இவர் உச்சரீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பல நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியபோது உச்சத்தை எட்டியது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாகவே முன்வந்து தொடங்கியது. அவரை மனநல ஆய்வுக்கும் உட்படுத்த ஆணை பிறப்பித்தது. அதற்கு உடன்பட அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே ஏழாண்டு சிறைத்தண்டனை வழங்கும் தீர்ப்பையும் அவர் 2017 மே மாதம் 8 ஆம் தேதி வெளியிட்டு, டெல்லி காவல் ஆணையருக்கு இந்த தீர்ப்பை நிறைவேற்ற ஆணையும் இட்டார். இதற்கு மறுநாளே, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி அடங்கிய ஏழு பேர் பெஞ்ச் உடனடியாகக் கூடி இவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.

இந்நிலையில் அவர் தலைமறைவானார். ஜூன் மாத இறுதியில் கோவையில் கைதான அவர் அந்த ஆண்டு டிசம்பரில் விடுதலையானார்.

இடையில் அவர் ஊழலுக்கு எதிராக கட்சியும் தொடங்கினார்.  அத்துடன் பல வீடியோக்களை பல நீதிபதிகளுக்கு, அவர்கள் உறவினர்களுக்கு எதிராக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சுமார் பத்து புகார்கள் வந்தநிலையில்  சென்னை காவல்துறை அவரை 2020-இல் கைது செய்தது.

அவர் இந்த புகார்களில் தொடர்புடைய அனைவரிடமும் மன்னிப்புக்கோரி மனுத்தாக்கல் செய்ததை அடுத்து 2021 இல் நீதிமன்றம் அவருக்கு  இனி இப்படிப்பட்ட புகார்கள் எழுந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.