தமிழ்நாட்டில் தொழில்மயமும் நகர்மயமும் அதிகரித்துவரும் நிலையில், அவற்றுக்கேற்ற போக்குவரத்து வசதிகளும் கட்டமைப்பும் அவசியமாகிவிட்டது. இதையொட்டி விமானப் போக்குவரத்து இல்லாத வளர்ந்துவரும் தொழில் நகரங்களுக்கு விமான சேவையைக் கொண்டுவருவதில் அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் முயன்றுவருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்றவற்றை அடுத்து ஒசூர், வேலூர், நெய்வேலி ஆகிய இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு பெருமையாக அறிவித்தது. மத்திய அரசின் உடான் திட்டத்தின்படி இதற்கு நிதியுதவி பெறவும் வாய்ப்பு உண்டு என்பதால், சிறு நகரங்களுக்கான விமான சேவைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதில் குறிப்பாக, ஒசூரில் விமான சேவையைக் கொண்டுவருவது பயணியர் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் உற்பத்தித் தொழிற்சாலகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தொழில்துறையினர் கூறிவருகின்றனர். சென்னையை அடுத்த மோட்டார் வாகன உற்பத்தியானது மின்சார வாகனத்துக்கு மாறிவரும் நிலையில், ஒசூர் சுற்றுவட்டாரத்துக்கு மின்வாகனத் தொழில் மையம் மாறத் தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் இதன் தேவை அதிகரிக்கும் என்பதால், தயாரிக்கப்படும் வாகனங்களைக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து முக்கிய இடம் பிடிக்கிறது.
அத்துடன் சேர்த்து, வடதமிழக எல்லையில் ஒரு பன்னாட்டு விமானநிலையமாகவும் அதை உருவாக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்தது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், உடான் திட்டத்தின்படி ஒசூர் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மொகல், இத்தகவலைத் தெளிவுபடுத்தியுள்ளார். உடான் திட்டப்படி பெங்களூர் பன்னாட்டு விமான நிலைய நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், அதைச் சுற்றி 150 கி.மீ. தொலைவுக்கு விமான நிலையம் அமைக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மீண்டும் காரணமாக அவர் சுட்டிக்காட்டினார். அந்த உடன்பாட்டின்படி பெங்களூர் கெம்பேகவுடா பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் இப்போது இருக்கும் விமானநிலையத்தை மேம்படுத்தவோ புதியதாக விமான நிலையம் அமைப்பதோ கூடாது. இது 2033ஆம் ஆண்டுவரை செல்லும்.
பெங்களூர் விமானநிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஒசூரில், பெரிய விமான நிலையத்தை அமைத்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு அரசு முனைப்பாக இருக்கிறது. இத்திட்டத்துக்கான நிறைவேற்று முகமையான மாநில அரசின் டிட்கோ நிறுவனம், விரிவான தொழில்நுட்ப- பொருளாதார அறிக்கையைத் தயாரித்து வழங்க ஆலோசனை நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒசூரின் கிழக்கில் சூளகிரியில் உத்தேச பன்னாட்டு விமான நிலையம் அமையவுள்ளது. மாநில அரசு இதற்கான நிலத்தை வழங்குகிறது. இடத்துக்கான மைய அரசின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இத்திட்டத்துக்கு 150 கி.மீ. வரம்பு தடையாக அமையாதா என்பதில் தெளிவில்லை. டிட்கோ தரப்பில் பேசிய ஓர் அதிகாரி, இட அனுமதிக்காக தாங்கள் காத்திருக்கவில்லை எனக் கூறியுள்ளதாக டைம்சாப் இண்டியா கூறியிருக்கிறது.
குறிப்பிட்ட தொலைவு வரம்பு என்பது சட்டமோ விதியோ அல்ல, ஆனாலும் ஒரு வர்த்தக உடன்பாட்டில் ஒரு நிபந்தனை; அதனால் தனியார் தரப்பு தன்னுடைய நலன்களைப் பாதுகாக்க விரும்பும் என்கிற நோக்கில் மாநில அரசுத் தரப்பில் இதை அணுகுகிறார்கள்.
வர்த்தகம், போக்குவரத்து காரணங்களுக்காக ஒசூரில் பன்னாட்டு விமானநிலையத்தைக் கட்டியே தீருவது என தமிழகத் தரப்பில் முழுமூச்சாக இருக்கிறார்கள். இதற்காக, பெங்களூர் விமானநிலைய நிறுவனத் தரப்புடன் பேசவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒருவேளை இது தோல்வியடைந்தால் அடுத்த எட்டு ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரேயொரு சாதகம், கடந்த பிப்ரவரியில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு இராம்மோகன் நாயுடு, தமிழக அரசின் முயற்சிக்கு மைய அரசு ஆதரவு தரும் என்றும் மைய, மாநில அரசுகள், பெங்களூர் விமானநிலைய நிறுவனம் மூன்று தரப்பும் அமர்ந்து பேசினால் ஒரு முடிவுக்கு வரலாம்” என்று கூறியது, சாதகமாக உள்ளது.