இலங்கையில் அண்மையில் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் கண நேரத்தில் பறிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மலையகப் பகுதியில் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
அமெரிக்கா, சீனா, ரசியா, ஜப்பான் உட்பட பல நாடுகள் விமானப் படைகள், அவசர உதவிப் பொருட்கள், கருவிகளை வழங்கி உதவிசெய்து வருகின்றன.
மலையகப் பகுதியில் ஏற்பட்டுள்ள சாலைகள், இருப்புப்பாதைகள் சேதத்தைச் சீரமைக்க பல மாதங்கள் பிடிக்கும் என்று இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதேபோல அடிக்கடி நிலச்சரிவால் பாதிக்கப்படும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி ஐஐடி குழுவினர் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர்.
அந்த மாநிலத்தில் அறுபது இடங்களில் இந்தக் கருவியை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமான முன்னெச்சரிக்கை அமைப்பாக இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. 90 சதவீத துல்லியத்தில் இது செயல்படும் எனக் கூறப்படுகிறது.
நிலச்சரிவு ஏற்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னால் இந்தக் கருவி எச்சரிக்கை விடுக்கும் என்று பேராசிரியர் கலா வெங்கட்ட உதய்யும் அவரின் குழுவினரும் தெரிவிக்கின்றனர்.
இயந்திரக் கற்றல், அதிஉணர் சென்சார்கள் மூலம் மண்ணின் ஈரப்பதம், மழைப்பொழிவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், நில அசைவு ஆகியவற்றை இந்த முன்னெச்சரிக்கைக் கருவி கண்டறியும். நிலச்சரிவுகளில் ஒரு மில்லிமீட்டர் அளவு நகர்வைக்கூட அது நிகழும் நேரத்திலேயே கண்டறிந்து வெளிப்படுத்தப்படுகிறது.
ஒரு கட்டத்துக்கு மேல் பிரச்னை அதிகரித்தால், கருவி எச்சரிக்கை சிமிட்டல் ஒளி மூலம் உணர்த்துகிறது; சைரன் ஒலியை எழுப்புகிறது; அந்தப் பகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் குறுஞ்செய்திகளையும் அனுப்புகிறது. அதன் மூலம் அவர்கள் ஆபத்துப் பகுதியிலிருந்து வெளியேற உதவியாக இருக்கும்.
இந்த எச்சரிக்கையானது விரைவானதாகவும் நம்பகமானவதாகவும் அந்தப் பகுதிக்கு ஏற்றதாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறுகிறார்கள், பேரா. உதய் குழுவினர். குறிப்பாக, அடிக்கடி கன மழை பெய்து மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்படும் அளவுக்கு நிலச்சரிவு ஆபத்து உள்ள இடங்களில் இந்தக் கருவி பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை 12 சதவீதம் நிலப்பகுதி இப்படியான சவால் ஆபத்து உள்ளது. இந்த அளவுக்கு நாட்டின் நிலச்சரிவு பாதிப்பு வாய்ப்பு காணப்படுகிறது. ஆனாலும் மிகச் சில பகுதிகளைத் தவிர அதுவும் முன்னோடியாக மட்டுமே முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படி பொருத்தப்பட்டுள்ள பல இடங்களில் கருவிகளைப் பராமரிப்பு மோசமான நிலையில்தான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை.
மண்டி ஐஐடி குழுவினர் இதை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு, இந்தப் பிரச்னைகளை உரிய வடிவமைப்பு, மக்களுக்கான விழிப்பூட்டல் மூலமாகத் தீர்க்க முயல்கின்றனர். அக்குழுவினர் அந்தந்தப் பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி பரஸ்பரம் புரிந்துகொள்ளலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர். அந்தக் கருவியைப் பற்றி நன்கு புரிந்துகொண்டும் சமூகரீதியாக அதற்கு ஒத்துழைப்பு தரக்கூடிய அளவுக்கும் மக்களை மாற்றியுள்ளனர்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, உதய் தலைமையில் இந்தக் கருவியை உருவாக்க முடிந்துள்ளது. உயிரி புவிதொழில்நுட்பம், நிலச்சரிவுக் கண்காணிப்பு, இயற்கைமுறைத் தணிப்பு ஆகியவற்றில் அவர் முன்னோடியாகச் செயல்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளார்.
தொழில்நுட்பம் மக்களை வாழவைக்க வேண்டும்; அவர்களை இடம்பெயர்ச் செய்யக் கூடாது என்கிறார், பேராசிரியர் உதய். ஒரு சிறு எச்சரிக்கை மூலம் ஒருவரைக் காப்பாற்றினால், அதுவே இந்தக் கருவியின் பயனும் மதிப்பும் என்றும் அவர் கூறுகிறார்.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் ஒரு நொடியும்கூட உயிர்வாழ்வதைத் தீர்மானிக்கக்கூடியது என்பதுதான் எல்லாவற்றிலும் முக்கியம் என்பது எவ்வளவு பெரும் உண்மை. அதற்காக உதவிடும் ஒரு கருவியைப் பற்றி என்ன சொல்ல!