தி.மு.க. தேர்தல் அறிக்கைக் குழு- வந்தவர் யார், போனவர் யார்?

தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
Published on

தி.மு.க.வில் பிரச்சாரத்தில் எப்போதுமே தேர்தல் வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையுமே நாயகர்கள் என அக்கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி அடிக்கடி கூறுவார். அந்த அளவுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் கொண்டது.

கருணாநிதியின் காலத்தில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் முரசொலி மாறன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், திராவிடர் இயக்கக் கருத்தாளர்கள் தவறாமல் இடம்பெறுவார்கள்.

அவர்களுக்கே தி.மு.க.வின் வாக்குறுதிகள் தொடர்பாக தனிப்பட்ட, திடமான கருத்துகள் இருக்கும். ஆட்சிக்கு வந்தபின்னர் இன்னார்தான் இந்தக் கருத்தாக்கத்தைச் சொன்னவர் என்பதும் வெளியில் வரும்.

கருணாநிதியின் இறப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமை வந்ததை அடுத்து, அக்கட்சியில் காட்சிகள் மாறின. அவருடைய பாணிக்கும் இவருடைய பாணிக்கும் மாறுபாடுகள் உள்ளன.

கருணாநிதி காலத்தில் சொன்னதைச் செய்வோம் என்பதை அடிக்கடி சொல்வார்கள். அதில் இதுவரை பெரிய முறைப்பாடுகள் எழுந்ததில்லை. சொன்னதில் சிறிதளவாவது செய்துவிடுவார் என்பதுதான் அவருக்குக் கிடைத்த பெயர்.

சொன்னாததையும் செய்வார் எனக் கூறப்படும் ஸ்டாலின் ஆட்சியில், சொன்னதையே செய்யவில்லையே எனப் பல தரப்பினரிடமும் குரல்கள் ஒலிக்கின்றன. குறிப்பாக, கருணாநிதி சொல்லிச் சென்ற வாக்குறுதிகள் ஸ்டாலின் ஆட்சி முடிவடையவுள்ள நிலையிலும் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் குழுவை அமைத்திருக்கிறது, தி.மு.க. தலைமை. இதில், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி இராஜா, அயலக அணிச் செயலாளர் எம்.எம். அப்துல்லா, செய்தித்தொடர்புச் செயலாளர் கான்ஸ்டண்டைன் இரவீந்திரன், மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முன்னாள் அமைச்சர் தமிழரசி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம், டிரீம் தமிழ்நாடு செயல்திட்ட நிறுவனத்தின் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் கனிமொழியும் இளங்கோவனும் மட்டுமே முன்னைய இரு தேர்தல் குழுக்களிலும் இடம்பெற்று இருந்தனர்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்,

1. டி.ஆர்.பாலு, எம்.பி. குழுத்தலைவர்

2. சுப்புலட்சுமி ஜெகதீசன்

3. ஆ.ராசா, எம்.பி.

4. அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.

5. கனிமொழி, எம்.பி.

6. திருச்சி சிவா, எம்.பி.,

7. டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி.

8. பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதலில், கனிமொழி கருணாநிதி, எம்.பி., குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

2. டி.கே.எஸ். இளங்கோவன்,

3. ஏ.கே.எஸ் விஜயன், விவசாய அணிச் செயலாளர்,

4. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,

5. டி.ஆர்.பி. ராஜா,

6. கோவி. செழியன்,

7. கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எம்.பி.

8. சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., மாணவரணிச் செயலாளர்

9. எம்.எம்.அப்துல்லா,

10. எழிலன் நாகநாதன்,

11. பிரியா, சென்னை மேயர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த முறை பிரியா, எழிலரசன், இராஜேஸ்குமார், விஜயன் ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெறவில்லை.

கூடுதலாக, தலித் சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும்வகையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, நாகநாதனின் மாநில சுயாட்சி மரபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவர் எழிலன் நாகநாதன், சமூக ஊடகப் புகழ் காலகட்டத்தில் செய்தித்தொடர்புக் குழுவின் மையமான கான்ஸ்டண்டைன், மேற்குப் பகுதிக்காரரான சிவசேனாபதி, அதிகாரிகள் ஆட்சியா என விமர்சிக்கப்படும் நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஜி. சந்தானம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் நியமனங்கள் குறித்து தி.மு.க.வினரே பல்வேறு வகைகளில் ஆதங்கங்களையும் விமர்சனங்களையும் குறைகளையும் பகிரங்கமாக சமூக ஊடகங்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சூடான அவர்களின் கருத்துகள் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com