
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜியை, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை தி.மு.க. உருவாக்குகிறது எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, கடந்த 12ஆம் தேதியன்று உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலேவையும் கனிமொழி மும்பையில் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து மமதாவுடன் கனிமொழி நேரில் பேசியிருப்பது, தி.மு.க.வின் மூன்றாவது அணி முனைப்பைக் காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வெளிப்படையான விளக்கங்கள் அந்தந்தத் தரப்புகளிலிருந்து வெளியிடப்படவில்லை.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி, டைம்சாப் இண்டியா வெளியிட்டிருக்கும் செய்தியில், இருவரும் தனியாகக் கலந்துரையாடினார்கள்; அதனால் நடந்தது என்ன என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என திரிணமூல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சரத்பவார் கட்சியின் தரப்பிலோ தி.மு.க.வின் முயற்சிக்கு ஆம் என்றும் சொல்லாமல் இல்லையென்றும் சொல்லாமல் மையமாகப் பேசியிருக்கிறார்கள்.
ஆனாலும், தி.மு.க. மூன்றாவது அணி எண்ணத்தை முன்வைத்திருக்கிறது என்றும் அக்கட்சியுடன் இணைந்து செயல்படக்கூடிய கட்சிகளுடன் அது கலந்துபேசி வருகிறது என்றும் அதற்கான முன்னோட்டமான கூட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கனிமொழி தன் பெயரை, கனிமொழி கருணாநிதி எனக் குறிப்பிட்டுவந்த நிலையில், இப்போது கனிமொழி இராஜாத்தி கருணாநிதி என மாற்றிக் கொண்டுள்ளார்.