மாநிலம் முழுக்க தேர்தல் ஜரூர் எப்போதோ தொடங்கிவிட்டிருக்க, ஆளும் தி.மு.க. தலைமையிலான அணியிலோ தங்கள் மாடலில் வேலைகளைச் செய்துவருகிறார்கள். சரியாகச் சொன்னால், தி.மு.க.வில்தான் திட்டமிட்டபடி தேர்தல் பணிகளில் இறங்கி மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளில் தோராயமாக சில தொகுதிகளில் கவனம் செலுத்திவருகிறார்கள்.
தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேராக உள்ளூர் மட்ட நிர்வாகிகளைச் சந்திக்கும் புதிய பாணியைக் கையாண்டு வருகிறார். இது ஒன்றும் புத்தம் புதியது அல்ல; கருணாநிதி காலத்து நேரடிச் சந்திப்பில் ஒரு பகுதியைப் போன்ற ஒன்றுதான்.
அவர் மேல்மட்ட நிர்வாகிகளை முன்னால் வைத்துக்கொண்டே முறைப்பாடு செய்தவர்களைப் பேசவைத்து பிரச்னைகளைத் தீர்த்து வேலைகளைச் செயல்படுத்துவார். ஸ்டாலினின் பாணியோ, பிரச்னை இருக்கும் நபர்களை அவர்களைத் தாண்டி உற்றறிந்து நேரில் சந்தித்து பிரச்னைகளுக்குத் தீர்வைத் தருகிறார்.
கருணாநிதி காலம் என்றால் சகலரும் கருத்து சொல்லலாம்; பலரின் கருத்துகளும் ஏற்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம். இவரின் காலமோ தலைமையின் திட்டமும் கருத்தும் செயல்படுத்தப்பட வேண்டும். சர்வ அதிகாரமும் தலைமையிடம்தான் என்பது தற்போதைய அணுகுமுறை.
காலத்துக்கு ஏற்ற மாற்றம் இல்லையென்றால், கட்சியைக் கரைத்துக் குடித்த்து ஏப்பம் விட்டுவிடுவார்கள் என்கிற குரலின் ஞாயத்தையும் மறுப்பதற்கில்லை.
இந்தப் பின்னணியில்தான், ஸ்டாலினுக்கு அவ்வப்போது சங்கடங்களைத் தருவதில் நீயா நானா போட்டி நடந்துவருகிறது. இதில் முக்கியமானவராக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சில பேச்சுகள் சர்ச்சையாகியது கடந்த கால நடப்பு.
பழைய தி.க.காரரான இவர், ஒரு பகுத்தறிவாளர் அமைப்பின் நிகழ்ச்சியில் உள்ளரங்கில், அண்ணாவின் கம்பரச பாணியில் சமயக் கதையைப் பற்றிப் பேச, அது சக கட்சிக்காரர்களுக்கே பக்பக் என்று ஆனது.
திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரை, பல தி.க.களில் இருப்போருக்கும், தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளில் இருப்போருக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. குறிப்பாக, கடவுள் மறுப்பு என்பது முதல் பிரிவினர் என்றால், எல்லா கடவுளும் சமம் என்பது இரண்டாம் பிரிவினர். இதில், அரிதாக சிலர் இரண்டுமாக இருக்க முயற்சி செய்வார்கள். அப்படி வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள் கருணாநிதி காலத்திலிருந்து உண்டு.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலர் மந்திரத்தை தி.மு.க.வின் மதக்கொள்கையாக அறிவித்த அண்ணா, அவரைத் தொடர்ந்து கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடம், யாரும் மத அடையாளங்களுடன் முன்னால் போய் நிற்கத் தயங்குவார்கள். அதையும் மீறிப் போய் மாட்டிக்கொண்ட இதே பொன்முடியின் சிஷ்யராக இருந்த ஒருவரை, நேரில் அழைத்து கருணாநிதி பேசி அனுப்பினார்.
இப்போது நடந்தது, அதற்கு நேர்மாறானது என்றாலும், இதுவும் கட்சிக்கு குறிப்பாக வாக்காளர்களிடம் பாதகத்தையே உண்டாக்கும் என்பதால், பொன்முடி மீது பதவிநீக்க நடவடிக்கையை எடுத்தார், அதிரடி பாணி ஸ்டாலின்.
இதே அணுகுமுறையைக் கருணாநிதியிடம் எதிர்பார்த்திருக்க முடியுமா என்பது பெருங்கேள்விதான்!
இருவரிடமுள்ள மாறுபாடுகளைத் தாண்டி, சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வதில் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதும் நிஜமோ நிஜம்!
இப்படித்தான் மீண்டும் பழைய பதவியிலேயே அமர்த்தப்பட்டிருக்கிறார், பொன்முடி.
காரணம், ஒன்றும் பெரிய இராஜ இரகசியம் இல்லை. நட்சத்திர வலுதான். இருப்பதில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரத்தில் தி.மு.க. என்றால் பொன்முடிதான் என ஆகி, சில மாமாங்கங்கள் ஆகிவிட்டன. ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தை நிர்மாணித்து அழகுபார்த்த பொன்முடிக்கு, அமைச்சர் பதவி போனபிறகு, அங்கு வரவேற்று உபசரிக்கவே ஆள் அருகிப் போய்விட்டார்கள் என்கிறார்கள், மாவட்ட அரசியல் நோக்கர்கள்.
அதுவும், அ.தி.மு.க.விலிருந்து வந்த இலட்சுமணனுக்குக் கிடைக்கும் மரியாதை பொன்முடிக்குக் கிடைக்கவில்லை என்பது அவர் தரப்பின் மனக்குறை.
காரணம், கட்சிப் பதவி பறிக்கப்பட்டதுதான்; வழக்கு விவகாரத்தால் அமைச்சர் பதவி போனது; அதை ஒன்றும் சொல்வதற்கில்லை... ஆனால், கட்சியிலும் பதவி இல்லை என்றதும், நெடுங்கால மதிப்பு மரியாதையெல்லாம் போயேபோச்சு என பொன்முடி தரப்பிலிருந்து ஒரே அழுகாச்சி காவியம் அரங்கேறியிருக்கிறது.
துரைமுருகன் முதலிய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பு ஆகியவற்றை இடைவிடாமல் பொன்முடி தரப்பு உரிமையோடு முட்ட, தலைமையின் இறுக்கமான பாறையிலிருந்து சுனை நீர் வருவதைப் போல, பழைய பதவியும் அதே சீனியாரிட்டியும் அளிக்கப்பட்டது, பொன்முடிக்கு என விவரிக்கிறார்கள், விழுப்புரம், சென்னை அறிவாலய வட்டாரங்களில்.
இதைத்தாண்டி, தலைமைக்கும் பொன்முடியை முன்னிறுத்தாமல் தேர்தலைச் சந்திப்பது அவ்வளவு உசிதமானது அல்ல என்பது தெரியும். ஆட்களை இழுத்துப்போட்டு, வேலைகளைச் செய்வதில் அவரும் இரண்டாவது தலைமுறையை உருவாக்கிவிட்டார்; மகன் ஒருவர் மக்களவை உறுப்பினராகவே ஆகிவிட்டார். ஏற்கெனவே ஸ்டாலின் கோஷ்டிய என ஒற்றையாக இருக்கும் கட்சிக்குள், புதிதாக கோஷ்டி கானம் பிறந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலினும் கவனமாக இருக்கிறார்.
சர்ச்சையாகிவிட்டது; அந்தப் பேச்சின் வீச்சும் குறைந்துவிட்டது; சவாலான பொதுத் தேர்தலா கட்சிக்கு ஆகாத நடவடிக்கையா என்றால், தேர்தல் நோக்கம் தலைமையை கீழிறங்க வைத்துவிட்டது என்பதே உண்மை!
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, மீண்டும் ஒரு வலம் வருவார்.
சர்ச்சை இல்லாமல் பேசுவார் என எதிர்பார்ப்போமாக!