எலான் மஸ்க் செய்யும் காரியம்- அலறும் அமெரிக்கர்கள்!

எலான் மஸ்க் செய்யும் காரியம்- அலறும் அமெரிக்கர்கள்!
Published on

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் எலான் மஸ்க், புதியவொரு முடிவால் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார். ஆனாலும் அதை அவர் சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் தன் காரியத்தில் தொடர்ந்து மூழ்கியுள்ளார்.

அது என்ன?

கொலோசஸ்.

இதுதான் மஸ்க்கால் பெயர் சூட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர். இதுதான் அவரின் க்ரோக் என்கிற ஏஐ உரையாடல் செயலிக்குப் பயிற்சியையும் ஆற்றலையும் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நல்லதுதானே... அவருடைய தொழிலில் ஏதோ ஒரு புதிய விசயத்தைச் செய்கிறார். தகவல்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்கிறார் என்றால் வரவேற்கக்கூடியதுதானே என கேள்வி எழலாம்.

சிக்கல், அதற்காக என்ன விலை கொடுக்க எலான் மஸ்க் விரும்புகிறார் என்பதுதான்!

அவர்தான் உலகத்திலேயே முதல் செல்வந்தர் ஆயிற்றே, அவர் கைக்காசைப் போட்டால் உங்களுக்கு என்ன என்றும் கேட்கத் தோன்றலாம்.

காசு யாருடையது என்பது அல்ல, இங்கு பிரச்னை. அவர் செய்யப்போகும் காரியத்துக்கு ஈடாக எதை பலியிடப்போகிறார் என்பதுதான் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் பிரச்னை. அங்கு உள்ள மெம்பிஸ் வட்டாரத்தில் கடந்த ஆண்டு எலான் மஸ்க் கொலோசஸ் அதிதிறன் கணினியை அமைத்தார்.

மஸ்க்கின் செய்யறிவுப் பிரிவான எக்ஸ்ஏஐ-க்காக தற்போதைக்கு 33 மீத்தேனால் இயக்கப்படும் டர்பைன்கள் இயக்கப்படுகின்றன. இதிலேயே அத்துமீறலைத் தொடங்கிவிட்டார், எலான் மஸ்க். இந்த மின்சார உற்பத்தி மையத்துக்கு அதிகபட்சம் 15 டர்பைன்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது, அனுமதி அளிக்கப்பட்டதைவிட ஒரு மடங்கு கூடுதலாக டர்பைன்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்த மின் உற்பத்தி மையமானது ஆப்ரோ அமெரிக்கர்கள் அடர்த்தியாக வசிக்கும் மெம்பிஸ் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களே இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனர். ஏற்கெனவே இங்கு பல்வேறு மாசுபாடுகள் தொடர்ந்துவரும் நிலையில், எக்ஸ்ஏஐ மையமும் அவற்றோடு கூடச் சேர்ந்துகொண்டுள்ளது.

ஒரு இலட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை இந்த மையம் எடுத்துக்கொள்வது ஒரு பக்கம் என்றால், இது வெளியேற்றும் உமிழ்வுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. அனுமதியை மீறிப் பயன்படுத்தப்படும் டர்பைன்களால் மெம்பிஸ் பகுதியின் புகை அளவு 30 சதவீதம் முதல் 60சதவீதம்வரை அதிகரித்துள்ளது. பகல், இரவு என இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் இந்த மையத்திலிருந்து நைட்ரஜன் ஆக்சைடு, ஆபத்தான நச்சான பார்மால்டிஹைடு ஆகியவற்றை வெளியேவிடுகிறது.

இவற்றைச் சுவாசிக்கும் மெம்பிஸ் பகுதியினருக்கு மூச்சுப் பிரச்னை, நெஞ்சக நோய்கள் உண்டாகின்றன.

கொலோசஸ் மையம் அமைக்கப்பட்டுள்ள செல்பி உள்ளாட்சிப் பகுதியில் உள்ள திராஸ்லோவ்கா வேதித் தொழிற்சாலை, வெலாரோ பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலை, அலன் மின்சார உற்பத்தி நிலையம், மெம்பிஸ் பன்னாட்டு விமானநிலையம் ஆகியவை வெளியிடும் மொத்த காற்று மாசுபாட்டைவிடக் கூடுதலாக, எலான் மஸ்க்கின் இந்த மையம் ஏற்படுத்துகிறது என்கிறது அங்குள்ள தெற்கு சுற்றுச்சூழல் சட்ட மையம்.

மெம்பிஸ் பகுதியில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கர்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுவாகவே சூழல் மாசுபாடுகள் ஏற்படும்படியாகத்தான் ஆலைகள் அமைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினரில் 75 சதவீதம் பேர் இப்படி கடுமையான சூழல் பாதிப்பு உள்ள நிலைமையில்தான் வசிக்கின்றனர் என்கிறார், டென்னசி மாநில அவையின் மெம்பிஸ் பகுதி உறுப்பினரான ஜஸ்டின் பியர்சன்.

இதில் வேதனை என்னவென்றால், அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் எலான் மஸ்க்கின் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா என்பது புதிய தகவல் அல்ல. அதை வைத்துதான் புதுக் கட்சி தொடங்கினாலும் அமெரிக்காவில் பிறக்காத அவரால் அதிபராக ஆகமுடியாது என்பதைச் சொல்கிறார்கள். இடையில் டிரம்புக்கும் மஸ்குக்கும் இடையிலான வாக்குவாதம் உச்சகட்டத்துக்குப் போய், எலான் மஸ்க் மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கே போகவேண்டியிருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு இடையிலான சண்டை எப்போதும் தீர்ந்துவிடவே வாய்ப்பிருக்கிறது என்பதுதான் டிரம்பின் செயல்கள் காட்டுவது.

அமெரிக்காவில் பொதுவாகவே அதிசெல்வந்தர்களாக இருக்கும் 10 சதவீதம் பேர் 40 சதவீதம் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக இருக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

அதன் ஓர் அங்கம்தான் எலான் மஸ்க்.

மஸ்க்கின் தனியார் ஜெட் விமானங்கள் மட்டும் ஆண்டுக்கு சுமார் 5,497 டன் கார்பன் டையாக்சைடை வெளிவிடுகின்றன. இது மெம்பிஸ் பகுதியில் உள்ள 550 குடியிருப்புகளால் ஏற்படும் மாசுபாட்டுக்குச் சமமானது. மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு முறையும் ஒரு ராக்கெட்டை (சோதனையாகவும்) விண்ணுக்குச் செலுத்தும்போதும் 3,189 டன் கார்பன் டையாக்சைடு வெளிவிடப்படுகிறது. இது மெம்பிஸ் பகுதியின் ஆண்டு மாசுபாட்டில் 319 குடியிருப்புகளின் பங்கு ஆகும்.

தொடக்கத்தில் சாலைப் போக்குவரத்து மாசுபாட்டைக் குறைக்கும் எனக் கூறப்பட்ட- மஸ்க்கின் போரிங் நிறுவனமானது சுரங்கப் பாதையை உருவாக்கவுள்ளது. அதன் மூலம் எட்டு மடங்கு கூடுதல் கார்பன் டையாக்சைடு உமிழப்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தூய்மையான காற்று, தூய்மையான நீர் சட்டங்களும், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை போன்ற கூட்டாட்சி அமைப்புகளும் பொதுவாக கறார் காட்டினாலும், மஸ்க்கின் விவகாரங்களில் மந்தமாகவே இருக்கின்றன எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

தெற்கு மெம்பிஸ் பகுதிவாசி கிரட்சர்
தெற்கு மெம்பிஸ் பகுதிவாசி கிரட்சர்

கொலோசஸ் அமைந்துள்ள தெற்கு மெம்பிஸ் பகுதிவாசியான கிரட்சர் என்பவர் நியூஸ் 5 ஊடகத்துக்குப் பேசுகையில்,” எங்களால் மூச்சுவிட முடிகிறதா? அவ்வளவு கடினமாக இருக்கிறது. எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களால் இந்த இடத்தைவிட்டு வேறு எங்கும் போகமுடியாது. இங்கேதான் இருக்கமுடியும்.” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, அதிதிறன் கணினிக்கான மின் உற்பத்தி ஆலையை உள்நாட்டில் தயாரிக்க, அனுமதி பெற காலம் ஆகும் என்பதால், வெளிநாடு ஒன்றில் அதற்கான ஆர்டரைக் கொடுத்து இறக்குமதி செய்யப்போகிறாராம், மஸ்க்.

இவ்வளவுக்கும் பிறகும் எலான் மஸ்க் எதையும் பொருட்படுத்தாமல் தன்பாட்டுக்குச் செயல்பட எப்படி முடிகிறது?

இதென்ன உலக இரகசியமா, டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு வருவதற்காக மஸ்க் 20 கோடி டாலரைச் செலவழித்தார். நாடளவிலான ஒப்பந்தங்கள், அவருடைய தொழிற்சாலைகளின் விதிமீறல்கள், பங்குச்சந்தையில் சிக்கலிலிருந்து விடுவிப்பது ஆகியவற்றோடும் சேர்ந்ததுதான் என்கிறார்கள், அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள்.

இதற்கு வசதியாகத்தான், எலான் மஸ்க்கை டிரம்ப் தன் நிர்வாகத்தில் ஆலோசகராகப் போட, தன்னுடைய தரப்பின் மீது நடவடிக்கை எடுக்கவிருந்த அதிகாரிகளை எல்லாம் குறிவைத்து பதவியை காலிசெய்தார் எலான் மஸ்க். டீல் முடிந்தபின்னர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எலான் மஸ்க் தன்னுடைய தொழில், வர்த்தகப் பயணத்தில் தொடர்ந்து பறக்கிறார் என்பது ஆய்வாளர்கள் கூறும் அழுத்தமான கருத்து.

logo
Andhimazhai
www.andhimazhai.com