ஆண் – பெண் உறவுச் சிக்கல் இன்று நேற்று தொடங்கியதில்லை. ஆனாலும் ’கள்ளக்காதலால் மனைவி வெட்டிக் கொலை; கணவன் வெறிச்செயல்’, ‘கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி’ என்ற தலைப்புடன் நாள்தோறும் வெளியாகும் செய்திகள் பீதியூட்டுகின்றன!
கடந்த மாதத்தில் ஒருவாரத்தில் மட்டும் வெளியான செய்திகளை ஆராய்ந்ததில், திண்டுக்கல் மாரியப்பன் (45), கள்ளக்குறிச்சி லட்சுமி (40), மேடவாக்கம் மீனா (40), தூத்துக்குடி மகேஸ்வரி (38) ஆகிய நான்கு பேர் திருமணம் தாண்டிய உறவு (Extra marital affair) காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், தூத்துக்குடி மகேஸ்வரி தவிர்த்து மற்ற மூவரின் முடிவும், அவர்களின் இணையராலேயே நிகழந்துள்ளது.
மேலே சொன்ன நான்கு கொலைகளும் அதிர்ச்சி தருபவை என்றாலும் கள்ளக்குறிச்சி லட்சுமி கொலையான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவது. லட்சுமியை அவரது கள்ளக்காதலருடன் இருந்தபோது கணவர் கொளஞ்சி கண்டார். அரிவாளால் இருவரையும் தாக்கி தலைகளைத் துண்டித்தார். இரண்டையும் பையில் வைத்து எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
குடும்பம், சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்க விதிகளில் இருந்து மனிதர்கள் தொடர்ந்து மீற முயன்றுகொண்டேதான் இருக்கிறார்கள். அதன் விளைவுகள் சில சமயம் படுபயங்கரமாக அமைந்துவிடுகின்றன.
இதில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், 2018ஆம் ஆண்டுக்கு முன்புவரை, ”திருமணமான பெண்ணுடன் கணவரைத் தவிர வேறோர் ஆண், கணவரின் அனுமதியின்றியோ, தெரியாமலோ உறவு கொண்டால், அந்த ஆணுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். பெண்ணுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது." என இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497 கூறுகிறது.
ஆனால், இந்த சட்டப்பிரிவு திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடும் ஆணை மட்டுமே தண்டிக்கும் வகையில் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பில், 497ஐ நீக்கி உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அன்றிலிருந்து திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றம் ஆகாது.
அன்புக்கா... காமத்துக்கா…?
திருமணம் தாண்டிய உறவின் மூலம் தன் இணையரிடம் கிடைக்காத அன்பைப் பெறுகின்றனர். இந்த உறவே அன்புக்காக நிகழ்வது என்கிற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் பழைமைவாத சிந்தனை, அவரவர் உடல் அவரவர் உரிமை. ஒருவர் தான் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் உறவுகொள்ளலாம் என்று கூறுபவர்களும் உண்டு.
கலாசார மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் தாண்டிய உறவை எப்படிப் பார்க்கலாம், இதில் நிகழும் கொலைகள் தடுக்க என்ன வழி என்ற கேள்வியை எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன், மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் ஆகியோர் முன்வைத்தோம்,
எழுத்தாளர் கீதா இளங்கோவன்:
கற்பு என்ற கருத்தாக்கம் பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இது இல்லை. இது மிகமோசமானது என்கிறார் பெரியார்.
ஏற்பாட்டுத் திருமணங்கள் அல்லது காதல் திருமணங்களில் கூட விவாகரத்து கோரும் உரிமை பெண்களுக்கு இல்லை. பிடித்திருக்கிறதோ, இல்லையோ, குழந்தைகள், பொருளாதாரம் உட்பட பல காரணங்களால் அவர்கள் கணவனை சார்ந்திருக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.
திருமண உறவில் பெண்களுக்கு விருப்பம் இருக்கிறதா… இல்லையா…? அவள் எப்படியான பிரச்னைகளை எதிர்கொள்கிறாள் என்பது குறித்தெல்லாம் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ’என்னவாக இருந்தாலும் நீ குடும்ப உறவுக்குள் இருக்க வேண்டும்.’ என நிர்ப்பந்திக்கின்றனர். விருப்பமில்லாத உறவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை தருவதில்லை. இப்படிப்பட்ட பெண்கள் தற்காலிக விடுதலையாக திருமணம் தாண்டிய உறவுக்கு செல்கிறார்கள். ஏதோ ஒருவகையில் இந்த உறவில் சமத்துவம் இருக்கக்கூடும். மனைவி என்ற நிர்ப்பந்தம் இல்லை. இப்படியான உறவில் பெண்களுக்கு ஆறுதலோ, பாலியல் சார்ந்த இன்பங்களோ கிடைக்கிறது. இதை ஒரு தற்காலிக விடுதலையாகத்தான் பெண் பார்க்கிறாள்.
திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண்கள் பற்றிய செய்திகள் வெளிவரும் போது, அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை எல்லாம் வசதியாகத் தவிர்த்து விட்டு, அவர்களை இழிவுபடுத்தி தீர்ப்பெழுதும் மனநிலைதான் பொதுச்சமூகத்திடம் உள்ளது. அதனால் தான் கொலை செய்யவும் துணிகிறார்கள். ஆனால், ஆணுக்கு இப்படி நிகழ்வதில்லை.
திருமணம் தாண்டிய உறவில் பெண்கள் கொலை செய்யப்பட காரணம், ஆணுக்கு, அவன் 'ஆண்மைக்கு' இழுக்கு ஏற்படுவதாகக் கருதுகின்றனர்.
ஒருவேளை பெண் தற்சார்புடன் இருந்து, அவளுக்கு விவாகரத்து கோருவதற்கான உரிமை இருந்தால், அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் நடக்கும்.
திருமணம் தான் பெண்களுக்கு எல்லாம் என்பதை மாற்றி, தற்சார்புடன் பெண் வளர்க்கப்பட வேண்டும். தன்னுடைய வாழ்க்கைக்கு அவள் பொறுப்பேற்பவளாக இருக்க வேண்டும். திருமண உறவிலிருந்து பிரிந்து போவதற்கான உரிமையை சட்டம் கொடுத்தாலும் சமூகம் கொடுக்க மறுக்கிறது. அது கொடுக்கப்பட வேண்டும். அதற்கான பொதுக் கருத்து உருவாக்கப்பட வேண்டும்.
பொத்தாம் பொதுவாக இந்த உறவு சரி தப்பு என்ற பேச முடியாது.
மனநல மருத்துவர் சிவபாலன்:
“உறவுச் சிக்கல்களில் கொலை என்பது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்று. மீடியாக்கள் இந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இப்படியான கொலைகள் அதிகரித்திருப்பதாக நினைக்கிறோம்.
திருமணம் தாண்டிய உறவு என்பது இந்திய சமூகத்தில் காலங்காலமாக நடந்து வந்தாலும், இப்போது இந்த உறவுகள் அதிகரித்திருக்கிறது. சமூக ஊடக வருகைக்குப் பின்னர், இந்த உறவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருமணம் தாண்டிய உறவில், நேரடி உறவை விட விர்ச்சுவல் உறவு இப்போது அதிகரித்துள்ளது. நேரில் கூட சந்தித்திருக்கமாட்டார்கள். ஆனால் இணக்கமாக பேசிக் கொள்வார்கள்.
திருமண உறவை பிடிக்காத கணவனோ மனைவியோ தான் இப்படியான உறவில் ஈடுபடுகிறார்கள் என நினைக்கிறோம். ஆனால், அப்படி இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. சந்தோஷமான, நிம்மதியான திருமண வாழ்வில் இருப்பவர்களும் இந்த மாதிரியான உறவுகளில் இருக்கின்றனர். அதற்குக் காரணம், மனிதனின் பிறழ்வான மனநிலைதான். மனிதர்களுக்குள் எப்போதும் செக்ஸ் சார்ந்த பிறழ்வு மனநிலை இருந்து கொண்டே தான் இருக்கும்.
விர்ச்சுவல் உறவுகளுக்கு ஒருவன் ஆபாசம் படம் பார்ப்பதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமோ, அதே அளவுக்கான முக்கியத்துவத்தைத்தான் கொடுக்க வேண்டும். அதை திருமண உறவின் தோல்வியாக கருத தேவையில்லை
இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்றால்..?
திருமண வாழ்வில் நேர்மை முக்கியம். அதுதான் இப்படியான உறவு மீறல்களைத் தடுக்கும். வெளிநாடுகளில் இருப்பது போல், திருமண உறவில் இருந்து பிரிவது எளிதாக்கப்படவும் இயல்பாக்கப் படவும் வேண்டும். இறுக்கமான சமூக கட்டமைப்பே இதுபோன்ற மீறல் உறவுகள் அதிகரிக்கக் காரணம்.
திருமண உறவு என்பது நெகிழ்வுத்தன்மையோடு இருக்க வேண்டும். அதிகப்படியான நேர்மை பொறுப்பு, கடமை இருக்க வேண்டும். இது இருந்தால் மட்டுமே திருமணம் தாண்டிய உறவுகள் என்பது குறையும்.”
உறவுகளால் பின்னப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசித்து, மதித்து கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர அரிவாள் தூக்குவது அழகல்ல!