இந்திய வர்த்தகத் துறையில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்வத் ஆண்டு 2081 நேற்று திங்களன்று முடிவடைந்து, இன்று 2082ஆம் சம்வத் ஆண்டு பிறந்திருக்கிறது.
கடந்த சம்வத் ஆண்டைப் பொறுத்தவரை, நாடளவில் வர்த்தகமானது புவிசார் அரசியல் பிரச்சினைகளாலும் வட்டிவீதக் குறைப்புகளாலும் ஒருமாதிரியான நிலைமைக்கு வந்தது. இதன் காரணமாக, அதிக ஏற்ற இறக்கத்தைக் கண்ட ஆண்டாக சம்வத் 2081 பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஒருவகைப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், சேமிப்பில் ஈடுபடுபவர்களும் முதலீட்டாளர்களும் தங்கம், வெள்ளி முதலிய அணிகலன் உலோகங்களின் மீது தங்கள் கவனத்தைக் குவித்தனர். இதனால் உயர்ந்த இரக உலோகங்கள் இரண்டின் விலையும் உயரத்துக்குச் சென்றன... சாதாரண உயரம் இல்லை, வழக்கம்போல சந்தையில் சொல்லப்படும், வரலாறு காணாத உயரத்தைத் தொட்டன.
கடந்த சம்வத் ஆண்டில் மட்டும் இரண்டின் விலையும் சுமார் 60 சதவீதம் அளவுக்கு இலாபத்தை ஈட்டியுள்ளன.
உள்நாட்டைப் பொறுத்தவரை, சென்செக்சும் நிப்டியும் ஓரளவுக்கு சீராக உயர்ந்து காணப்பட்டன. பங்குச்சந்தைக்குப் பேர்போன மும்பை தலால் தெருவின் முதலீட்டாளர்கள், அதற்குப் பக்கத்தில் உள்ள மிண்ட் சாலையில் அமைந்திருக்கும் ரிசர்வ் வங்கி மீதே கண்வைத்தபடி இருந்தனர்.
காரணம், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் வந்தபிறகு வரிசையாக வட்டிவீதத்தில் குறைப்பு தொடர்ந்தவண்ணம் இருந்தது. இதன் காரணமாக பணப்புழக்கத்தில் அதிகரிப்பு ஏற்பட்டது.
இதே நேரத்தில், ரூபாய் மதிப்பில் பலவீனம் ஏற்பட்ட நிலையில், கணிசமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் பணத்தைத் திருப்பிக்கொண்டனர்.
பங்குச் சந்தை சென்செக்ஸில் 5.8% இலாபத்துடனும் நிப்டியில் 6.3% இலாபத்துடனும் நிறைவடைந்தது என்கிற பிஎஸ்இ சந்தை புள்ளிவிவரம். கடந்த ஓராண்டில் சராசரியாக 6 சதவீதம் அளவுக்கு பங்குச்சந்தை இலாபம் ஏற்பட்டது.
கடந்த திங்களன்று நிறைவடைந்த கணக்குப்படி, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து ஏழு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்வைக் கண்டது.
இந்த ஓராண்டில் 400 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் ஐபிஓகள் வெளியிடப்பட்டன. அதாவது இந்த அளவுக்கு தனியார் நிறுவனப் பங்குகள் பொதுப்பங்குகளாக ஆக்கப்பட்டன.
முக்கியமாக, ஸ்விக்கி, எச்டிபி நிதி நிறுவனம், டாட்டா கேப்பிட்டல், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தொடர்பாக, குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பெரும் பிரச்னைகளும் பதிவாகின.
புவி அரசியல் பிரச்னைகள் காரணமாகவும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் காரணமாகவும் உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கம் உண்டானது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரிவிதிப்புகள் உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்தது. இதனால் உலக அளவில் முதலீட்டாளர்களின் மனநிலையில் அமைதியின்மையை சீரற்ற தன்மையை உருவாக்கியது எனலாம்.
இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக பின்வாங்கத் தொடங்கினார்கள். அவர்கள் இந்தக் காலகட்டத்தில் விற்ற பங்குகளின் மதிப்பு 1.5 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது என்எஸ்டிஎல்.
ஒப்பிட்டுப் பார்ப்போமானால், பரஸ்பர நிதி மூலம் விற்பனையான பங்குகளே கணிசமானவை. கடந்த ஆண்டு நவம்பர் முதல் மாதாந்திர வரத்தை ரூ.25ஆயிரம் கோடி அளவுக்கு எஸ்ஐபிகள் மூலம் கிடைத்தது. இந்த மாதம் 17ஆம் தேதிவரை பரஸ்பர நிதி மூலம் வாங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.4.7 இலட்சம் கோடி ஆகும். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனையை மட்டுப்படுத்தியது.
இந்திய முதலீட்டைப் பொறுத்தவரை, உயர் இரக உலோகச் சந்தையில், தங்கமும் வெள்ளியும் ஆதிக்கம் செலுத்துவது, ரூபாய் மதிப்பின் பலவீனம், உள்நாட்டு விலையை உயர்த்திவிட்டது.
பத்து கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.3 இலட்சம் ரூபாய்க்கும் வெள்ளியின் விலை அதன் உச்சத்தை எட்டி ஒரு கிலோவுக்கு 1.9 இலட்சம் ரூபாயாகி, பின்னர் 1.6 இலட்சம் ரூபாயாகக் குறைந்து தொடர்ந்து அதேநிலையில் நீடிக்கிறது.
இது மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்பது இப்போதைய சந்தை நிலவரம்.