எலான் மஸ்க்குடன் டைம் ஏஐ 100 பட்டியலில் சென்னை பேராசிரியர் இடம்பிடித்தது எப்படி?

எலான் மஸ்க்குடன் டைம் ஏஐ 100 பட்டியலில் சென்னை பேராசிரியர் இடம்பிடித்தது எப்படி?
Published on

உலகப் பிரபல டைம் பத்திரிகை அவ்வப்போது வெளியிடும் 100 புள்ளிகள் பட்டியல் இந்தியாவிலும் சில சமயம் பேசப்படுவதாக அமைவதுண்டு. இந்த முறை அந்தப் பத்திரிகையின் ஏஐ- நுட்பத்தில் தலைசிறந்து விளங்கும் நூறு பேரின் பட்டியலில், எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் இருப்பார்கள் என்கிறபடி பொதுவாக யோசித்திருப்பார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தொழிலிலும் ஆராய்ச்சியிலும் பெயரெடுத்த இந்தியர் ஒருவரின் பெயரும் அதில் வந்திருப்பது, நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

அந்தச் சாதனையாளரின் பெயர், மிதேஷ் காப்ரா. சென்னை, ஐஐடியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் என்பது பிரபலத்துக்கோ வர்த்தகத்துக்கோ கிடைக்கும் வெற்றியைப் போன்றது அல்ல. இவ்வளவுக்கும் காப்ரா இலட்சம் கோடி பணம் முதலீடு செய்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியவரும் அல்ல. அவருக்கென தனி தொழில் சாம்ராஜ்யம் இருக்கும் சூழலும் இல்லை. மாறாக, அவருடைய குறிக்கோள் பயணம்தான் இந்த செல்வாக்கைப் பெற்றுத் தந்துள்ளது.

அவருடைய ஒரே நோக்கம், இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அவரவர் மொழியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டுசேர்ப்பதுதான்.

காப்ரா தான் பணியாற்றும் ஐஐடி கணினிப் பொறியியல் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிப்பதில் பெரிய வினையூக்கியாகச் செயல்பட்டு வருகிறார். கற்பித்தலுடன் ஆராய்ச்சி, பயன்பாட்டுத் துறைகளிலும் அவரின் பணி பாராட்டுக்கு உரியதாக உள்ளது. செய்யறிவுத் துறையின் பகுதியான இயந்திரக் கற்றல், இயற்கைமொழிச் செயல்முறை ஆகியவற்றில் இவர் பல தலைமுறை மாணவர்களுக்கும் பயிற்சி அளித்துவருகிறார். இவர்களில் கணிசமானவர்கள் உலக அளவிலான ஏஐ நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இவருடைய முக்கியமான பங்களிப்பு என்றால், ஏஐ பாரத்தைக் குறிப்பிடுகிறார்கள். 2019இல் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் காப்ரா இணை நிறுவனர். ஏஐ பாரத்தின் குறிக்கோள், இந்திய மொழிகளைப் புரிந்துகொண்டு, அவற்றைக் கையாள்வதற்கான ஏஐ அமைப்புகளை அனுமதிக்கும் மென்பொருள் கருவிகளையும் தரவுத்தொகுப்புகளையும் திறவூற்று அதாவது ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்குவதே ஆகும்.

எளிமையாக இப்படிச் சொன்னாலும் இது ஒருவகை அருமுயற்சியாகும். நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மக்களின் பேச்சுத் தரவுகளைச் சேகரித்து, அவற்றைத் தரப்படுத்தி, ஆராய்ச்சியாளர்களும் நிறுவனங்களும் இலவசமாகப் பயன்படுத்த வழிசெய்வதுதான் காப்ராவின் நோக்கம்.

அவரின் இந்த வேலையானது ஆங்கில ஏஐ மாதிரிகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. அத்துடன் நாட்டின் பலமொழிச் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மாணவர்கள், பொறியாளர்கள், ஸ்டார்ட் அப்புகளுக்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது.

ஏஐ பாரத் திட்டத்தின் தாக்கம் ஐஐடியைத் தாண்டி பரவியுள்ளது. இந்திய அரசின் பாசினி மிசன் திட்டத்தின் ஒரு மைல் கல்லாக ஆகியிருக்கிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் மூலம் ஏஐ மூலம் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வசதிகள் கிடைக்கச்செய்வதுதான் நோக்கம். பாசினி திட்டத்தின் பெரும்பாலான தரவுகள் நேரடியாகவே ஏஐபாரத் மூலம்தான் கிடைக்கின்றன.

இந்தத் தரவுகளை உலகளாவிய நிறுவனங்கள் இந்தி, மராத்தி, தமிழ் முதலிய மொழிகளில் உள்ள அவர்களின் ஏஐ மாதிரிகளில் பயன்படுத்தினால் இந்தியாவுக்குப் பெருமளவுக்குப் பயன் ஏற்படும். காப்ராவைப் பொறுத்தவரை படைப்புக்கான உரிமை என்பது முக்கியம் இல்லை; மக்களுக்குக் கிடைக்கச்செய்வதுதான் அவருக்கு இலக்கு. ஏஐ காலகட்டத்து மென்பொருள் கருவிகள் ஆங்கிலம் பேசும் மக்களுடன் நின்றுவிடக்கூடாது என்பதுதான் அவரின் தீவிர அக்கறை.

சொந்த நாட்டில் ஏஐ துறையில் கல்விசார் ஆராய்ச்சியை புதுவார்ப்பு செய்துள்ளார் காப்ரா என டைம் பத்திரிகை ஆசிரியர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். மென்பொருள் ஏற்றுமதிக்காகப் பாராட்டப்படும் இந்தியாவில் இதுகுறித்த ஆராய்ச்சி குறைவாக இருக்கிறது எனும் விமர்சனமும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியமானது.

டைம் பத்திரிகையின் இந்த மதிப்பளிப்பு காப்ரா எனும் தனி மனிதருக்காக மட்டுமல்ல, உலகளாவிய ஏஐ துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்புக்கும் சேர்த்தே ஆகும். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இந்தியர்களின் பங்களிப்புக்காக அல்ல, சொந்த நாட்டு மக்களுக்கான பிரச்னைகளில் கவனம் செலுத்தியதற்கே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கோடிக்கணக்கான டாலர் முதலீடோ அருமையான ஒரு ஸ்டார்ட்டப்பாக இருந்தால்தான் பெயர் கிடைக்கும் என்பது அல்ல, மாவட்டத்துக்கு மாவட்டம் தரவுகளைத் திரட்டுவதற்கான திறவூற்று கோடிங்காகவும் இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் ஏஐ கட்டாயம் பேசியாகவேண்டும் என்பதாகவும் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது, காப்ராவின் நிஜக் கதை.

logo
Andhimazhai
www.andhimazhai.com