பிடி கொடுப்பாரா எடப்பாடி... மீண்டும் ஒரு முயற்சி?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி உறுதி ஆனபோதிலும் இன்னும் இரு கட்சிகளுக்கு இடையில் ஏதோ இடறல் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க.வின் கரங்கள் இன்னும் இயங்குகிறதா என்கிற கேள்வி, எம்.ஜி.ஆர். தொண்டர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

இன்றைய காலை அரசியல் நடப்பைக் கவனித்தவர்களுக்கு இதை விவரிக்க வேண்டியதில்லை. இருந்தாலும் கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவங்களை நினைவூட்டலாம்.

இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு இடையே, பா.ஜ.க. மூத்த அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க. தலைவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி புதுடெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போதே கூட்டணி மறு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஆனாலும், அடுத்த நான்கு நாள்களுக்குள் செங்கோட்டையன் திடீரென 28ஆம் தேதியன்று மதுரையிலிருந்து டெல்லிக்கு நேரடியாகச் சென்று திரும்பினார். அங்கு அமித்ஷா, இன்னொரு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

எடப்பாடி சொன்னதைப் போல, தமிழக நலன்களைப் பற்றி பேசினோம் என்று செங்கோட்டையன் சொல்லவில்லை. கட்சி நலனுக்காகச் சந்தித்தேன் எனப் போட்டுடைத்தார்.

அதன்பிறகு, அ.தி.மு.க.வில் சலசலப்பு உண்டானது. எடப்பாடிக்குப் பதிலாக செங்கோட்டையன் தலைமையில் அக்கட்சியை பா.ஜ.க.வுடன் கூட்டணியில் சேரத் திட்டம் எனப் பேச்சு கிளம்பியது.

அதற்கு ஏற்ப, செங்கோட்டையனையும் எடப்பாடி தரப்பில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். இந்த விவகாரத்துக்கு இடையே சட்டமன்றக் கூட்டமும் நடைபெற்றது. அதில் இரண்டு நாள்கள் கேள்விக்கு இடமான வகையிலேயே செங்கோட்டையன் நடந்துகொண்டார்.

சட்டமன்ற லாபியில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சமாதானப் பேச்சு நடத்தினார்கள். பிறகுதான், அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தால் அவரும் அதைக் கடைப்பிடித்தார். அதையடுத்து அப்போதைக்கு உட்கட்சி உரசல் தீர்ந்தது.

மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிசெய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமியும் ஜூலை 7ஆம் தேதி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சேர்ந்து பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த மாதம் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் கூட்டணி ஆட்சி என்கிறபடி பேசினார். அது மீண்டும் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கியது.

ஆனாலும் அதைப் பொருட்படுத்தாதவராக எடப்பாடி பழனிசாமி தன் போக்கில், அ.தி.மு.க.வில் தன்னுடைய தலைமையில்தான் ஆட்சி என உறுதிப்படுத்திக் கூறினார்.

இந்த சூழலில், எப்படியாவது அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட நினைத்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அ.ம.மு.க. தினகரனும் விலகினார்.

அவர்கள் இருவரும் கூட்டணியிலிருந்து விலகுவது குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் வாக்குகளை இழந்துவிடுவதற்கான காரணம் ஆகிவிடும் என பா.ஜ.க. யோசிக்கத் தொடங்கியது.

பிரச்சாரத்தின்போது நயினார் வீட்டில் உணவருந்திய பழனிசாமியிடம் பா.ஜ.க. தரப்பில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. பற்றி நாசூக்காகச் சொன்னபோதும், அவர் தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில், ஏற்கெனவே கட்சி நலனுக்காக பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்த செங்கோட்டையன், மீண்டும் கலக அவதாரம் எடுத்துள்ளார். கட்சியிலிருந்து வெளியே உள்ளவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், காலக்கெடுவையும் விதித்துள்ளார்.

இதற்கு பழனிசாமி பதில்கூறுவார் என காலையில் தொடங்கிய காத்திருப்பு மாலைவரையிலும் அப்படியே நீடித்தது.

இந்த முறையும் பா.ஜ.க. பழனிசாமியை நெருக்கித் தள்ளுகிறது; அவர் பிடிகொடுப்பாரா என்பதுதான் தொடரும் கேள்வியாக இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com