அயன் பீம்- இஸ்ரேலின் புதிய நாசகர ஆயுதம் !

அயன் பீம்
அயன் பீம்
Published on

காசா பகுதி பாலஸ்தீனத்து மக்களைக் கொன்றுகுவித்து வரும் இஸ்ரேல் இராணுவத்துக்கு இன்னுமொரு நாசகார ஆயுதம் வரவிருக்கிறது. அதற்கான ஆராய்ச்சியில் அந்நாட்டு தொழில்நுட்பவாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

புதி்தாகக் கண்டுபிடித்துள்ள ஆயுதம், தாக்காது. தாக்கும் ஆயுதங்களைத் தாக்கும். அதாவது இனக்கொலை செய்யும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது சில கிளர்ச்சிக் குழுக்கள் அனுப்பும் டிரோன்களை புதிய படைக்கலன் தாக்கும்.

இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பு ஐந்தாவது சுற்றுக்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐயன் டோம், டேவிட்ஸ்லிங், ஏரோ2, ஏரோ3 என நான்கு வகை பாதுகாப்பு அமைப்புகள் அதன் வான்படைக் கட்டமைப்பை வலுவாக வைத்திருக்கின்றன. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இடைமறிப்பு படைக்கலனுக்கு ஐயன் பீம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது, அதிதிறன்வாய்ந்த லேசர் வான்படைப் பாதுகாப்புக் கலன் ஆகும்.

எறிகணைகள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஏவப்படும் தாக்குதல்களை இடைமறித்து முறியடிக்கும் தற்போதைய இஸ்ரேல் படைக்கலன்களில் இந்த மாத இறுதிக்குள் அயன் பீமும் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயன் பீம் இடைமறிப்புக் கலன் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததை அடுத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வரும்போது உலகின் லேசர் மூலமான முதல் போர் இடைமறிப்பானாக இருக்கும்.

நூறு கிலோவாட் மின்சாரத் திறன் கொண்ட இந்த இடைமறிப்பான் சில நொடிகளில் தாக்குதல் இலக்கை அழித்துவிடும். ஆனால், அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்காது; மாறாக, நடப்பில் பயன்படுத்தப்படும் மரபான ஏவுகணைகளின் விலையில் எத்தனையோ பங்குகளில் ஒன்றாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலை குறைவாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மரபான ராக்கெட்டுகள், பாலிஸ்ட்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதில் தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்புகள், 90- 95 சதவீதம் அளவுக்குதான் வெற்றி கிடைக்கிறது. இவற்றால் மிகவும் தாழப் பறக்கும் ஆளில்லா விமானத்தையோ டிரோன்களையோ வீழ்த்துவதில் திறம்படச் செயலாற்ற முடியவில்லை. சில சமயங்களில் 50 சதவீதம் அளவுக்குதான் பலன் கிடைக்கிறது என்கிறது இஸ்ரேலியத் தரப்பு.

ஆனால் புதிய லேசர் கருவி, சிறிய இலக்குகளையும் தரைக்குப் பக்கத்தில் கீழாகப் பறந்து மெதுவாகச் சென்று தாக்கும் கணைகளையும் எதிர்கொள்ளத் திறன் படைத்தது; இதே வேலையை மரபான ரேடார் நுட்பத்தின் மூலமான இடைமறிப்பான்கள் செய்யும்போது திணறுகின்றன.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவிவிடும் ஈரானியத் தயாரிப்பான சாகேத் டிரோன்கள் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளன. அதிலும், சாகேத்-136 என்க்ற கார்பன் - பைபர் மூடல் அடுக்கையும் மின்சார மோட்டாரையும் கொண்ட்வை; ரேடாரின் கண்களுக்கு சிக்குவதே இல்லை. சாகேத்-149 என்கிற டிரோன் ஒரே நேரத்தில் 13 குண்டுகளை வீசக்கூடியது. சாகேத்-191 வகையோ தலா 50கிலோ எடை கொண்ட இரட்டைப் பிணைப்பு கொண்ட துல்லியமான வழிகாட்டல் ஏவுகணை ஆகும்.

இப்படி சாகேத் டிரோன்களை ஏவி வடக்கு இஸ்ரேலில் உள்ள பல முறை எலியாட், கோர்டான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஒரு முறை லெபனானிலிருந்து ஏவப்பட்ட டிரோன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் வீட்டை அடைந்துவிட்டது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு முடியாமல் வடக்கு இஸ்ரேல் போர்முனையில் உள்ள அந்நாட்டுப் படையினர் தவறிவிட்டார்கள்.

இந்தப் பின்னணியில், புதிய அயன் பீம் இடைமறிப்பானை கடந்த ஆண்டு அக்டோபரில் சோதனையோட்டமாகப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் 40வரையிலான டிரோன்களை இடைமறித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

அயன் பீமின் முக்கியமான இன்னுமொரு சாதகம், அதன் குறைந்த விலை என்பது. பிரிட்டன் நாணயத்தில் சில செண்ட் அளவுக்கான மின்சாரமே இதை ஒரு முறை இயக்குவதற்குப் போதுமானது. இத்துடன் ஒப்பிட்டால், அயன் டோம் இடைமறிப்பானுக்கு ஒரு முறை ஏவுதலுக்கு 10,000 முதல் ஒரு இலட்சம் டாலர்வரை செலவாகும்.

புதிய லேசர் மறிப்பானுக்கோ வெடிமருந்து தேவையில்லை; எடுத்துக்கொண்டுபோகும் போக்குவரத்து, இருப்புவைப்பது, சப்ளை செய்வது என்பனவற்றில் எதுவும் தேவையில்லை. தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது தீர்ந்துபோகும் பிரச்னையும் இல்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com