தமிழ்நாட்டின் 11.3% வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா? ஜெயரஞ்சன் பேட்டி!

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் இருப்பதென்ன?
ஜெயரஞ்சன்
ஜெயரஞ்சன்
Published on

தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்கடந்த 16.02.2025 அன்று 'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-2026 (Tamil Nadu Economic Survey 2025-2026)' தொடர்பாக செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். அறிக்கையின் சாராம்சமாகவும் அதற்கு அப்பாலும் உள்ள விசயங்களையும் பற்றி அவர் கூறியதிலிருந்து:

” முதல் முறையாக தமிழ்நாட்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சென்ற ஆண்டு வெளியிட்டோம். இந்த ஆண்டும் ஓர் அறிக்கையை அளித்திருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், அதனுடைய பல்வேறு துறைகள், அதில் ஏற்படக்கூடிய வளர்ச்சிகள், மாற்றங்கள் குறித்தெல்லாம் மிக விரிவாகப் பேசுகிறது, இந்த அறிக்கை.

இந்த ஆய்வறிக்கையில் 10 பிரிவுகள் இருக்கின்றன. அந்தந்தத் துறையில் உள்ள நிறைய ஆய்வு அனுபவம் உள்ள ஒருவரை அணுகி, அந்தத் துறையைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வழங்கியிருக்கிறார்கள். அதை எடுத்துதான், இந்த ஆய்வறிக்கையாக நாம் தயாரித்திருக்கோம். எனவே, ஒருவர் தயாரித்த ஆய்வறிக்கை அல்ல - 10 பேர் தயாரித்த தொகுப்பு.

முதலாவதாக, தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தைப் பற்றி ஒரு பருந்துப் பார்வை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பருந்துப் பார்வை.

இரண்டாவதாக, விலைவாசி நிலை - ஐந்து ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் விலைவாசி எப்படி வந்திருக்கிறது? அதை எப்படி எல்லாம் அது சமாளித்திருக்கிறோம். உணவுப்பொருள் விலை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்துக்கு மாநிலம் விலைவாசி ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. மற்ற மாநிலங்களில் உணவுப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலை தாக்கம் அளவுக்கு இங்கு உக்கிரமாக இருக்காது. காரணம் என்னவென்றால், பொது விநியோகம் -அனைவருக்குமானது என்பது ஒன்று. மற்றொன்று ஸ்பெஷல் பிடிஎஸ். இதில் கூடுதலாக நமக்கு என்ன கிடைக்கிறது? இதில் என்ன நடந்திருக்கிறது என்பது குறித்து இரண்டாவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, வேலைவாய்ப்பு (Employment) - தமிழ்நாட்டில் மக்கள்தொகை ரீப்ளேஸ்மென்ட் லெவலுக்குக் கீழே போயிருக்கிறது. அதாவது, இளைஞருடைய எண்ணிக்கை குறைவாகிக்கொண்டே வரும். அடுத்து, உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அந்த வயதில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், 50 பேர் உயர்கல்வி பெறுகிறார்கள்; அதன் விளைவாக ஞாயிற்றுக் கிழமைகளில், வேலை செய்வதற்கு, சாதாரண வேலைகள் செய்வதற்கு ஆட்கள் குறைவு, தட்டுப்பாடு ஏற்படும். அதன் விளைவாக வட மாநிலத்தவர்கள் வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது கூலி மட்டம் என்ன ஆயிருக்கிறது? மூன்றாவதாக, பெரும்பாலும் வெளி மாநிலங்களில், வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லாமல், தேவையில்லாமல் ஏதாவது செய்துகொண்டிருப்பது. வேலையின்மைதான் அது. அப்படி இல்லாமல், தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மட்டும், கூலி வேலை (wage labour) அதாவது வேலைக்குச் சேரும்போது அதன் வழியாக கூலி பெறுவது அதிக அளவில் இருக்கிறது. இதுதான் மற்ற மாநிலங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

தொழில் துறை மிக வேகமாக வளர்வதால், வேளாண் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதில் ஒன்று பொருளாதாரத்துக்கு அதனுடைய பங்களிப்பு. அதாவது, எவ்வளவு மதிப்பு அங்கே உற்பத்தி செய்யப்படுகிறது, மொத்தமாக பொருளாதாரத்தில் எவ்வளவு பங்களிப்பு இருக்கிறது, வருடா வருடம் வரிசையாக குறைந்துகொண்டே வரும். இரண்டாவது, எவ்வளவு பேர் அதைச் சார்ந்து இருக்கிறார்கள்? பொதுவாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், வேளாண் துறைக்கு 25 விழுக்காடு மக்கள்தான் நிலவுடைமையாளர்கள் அல்லது வேலை செய்பவர்களாகவோ இருப்பார்கள். 75 விழுக்காட்டில் வேளாண் அல்லாத பிற தொழில்கள் செய்வோர் இருக்கிறார்கள். தொடர்ந்து அதன் பங்களிப்பு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.

வளர்ந்த நாடுகளை எடுத்துக்கொண்டால், இது இன்னும் அதிகமாக ஒற்றை இலக்கத்தைவிடக் குறைவாகப் போய்விடும். பெரிய வளர்ந்த நாடுகளில் 4 விழுக்காடு, 3 விழுக்காடு ஆட்கள்தான் வேளாண் தொழிலில் இருப்பார்கள். அவர்களே வேளாண் தொழிலை விட்டுவிட்டு போய்விடுவார்கள். தமிழ்நாட்டில் , ஒரு காலத்தில், நம்முடைய முக்கியமான தொழில் வேளாண் தொழில் என்பது போய், அதன் மொத்த மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதைவிட மற்ற துறைகள் மிக வேகமாக வளர்வதாகவும், பெரியதாகவும், அதன் பங்களிப்பு சுருங்கிப் போய்விடும்.

மற்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அதனுடைய பங்களிப்பு சுருங்கிப்போகும் – ஆனால், மக்கள் அதில் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அதுபோன்று இருந்தால், வறுமை மிக அதிகமாகிவிடும். ஆனால், இங்கே அதன் பங்களிப்பும் குறைந்துவிட்டது; அதை நம்பியிருக்கின்ற மக்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். ஆனால், ஆரோக்கியமான போக்கு. நிறைய துறையில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் சுருங்கி போய், ஆட்கள் அதை விட்டு வெளியேறாமல் இருப்பது பெரிய அவலத்தில் கொண்டுபோய் விடும். இங்கே என்ன நடக்கிறது? நிறைய பேர் வேறு தொழில்களுக்கு வருவது, என்பது பெருமளவிலே நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் வேலைவாய்ப்பில் முக்கியமான ஒரு காரணம்.

அடுத்து தொழில்துறைக் கொள்கையும் மேம்பாடும் (Industrial Policy and Development)

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது இரட்டை இலக்கில் வளர்ந்து 11.3 விழுக்காட்டில் வளர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமான ஒரு வளர்ச்சி. உலகமெல்லாம் மூன்று விழுக்காடு வளர்ந்திருக்கிறது. இந்தியா ஏழு விழுக்காடு வளர்ந்தபோது, தமிழ்நாடு கிட்டத்தட்ட 11.3 விழுக்காடு. இந்த 11.3% வளர்ச்சிக்கு முக்கியமாக இடைநிலைத் துறையின் பங்களிப்பு அதிகம். (Secondary Sector). பொருளாதாரத்தில் - ஒன்று முதன்மைத் துறை பிரைமரி செக்டார். அதாவது வேளாண் துறை சார்ந்தவை. இரண்டாவது, இடைநிலைத் துறை செகண்டரி செக்டார் என்பது உற்பத்தி (Manufacturing), கட்டுமானம் (Construction) ஆகியவை எல்லாம். மூன்றாவது சேவைத் துறை. குறிப்பாக, உற்பத்தித் துறையில், வரலாறு காணாத அளவில் 14% அளவில் வளர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி என்பது பங்களிப்பு செய்திருப்பது உற்பத்தி.

கட்டுமானமும் பங்களித்திருக்கிறது. ஆனால் அதைவிட பெரிய அளவில் உற்பத்தி பங்களித்திருக்கிறது. நம் தொழில் துறை மிக வலுவான ஒரு அடித்தளக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், மூன்று நான்கு துறைகளில், தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கும். வாகன உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, ஜவுளித்துறை, தோல் தொழில், கால்நடையாக இருக்கட்டும். இப்போது புதிதாக மின்னணுத் துறை சேர்ந்திருக்கிறது. நான்கு, ஐந்து ஆண்டுகளில் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அதில் என்ன மாதிரியான வளர்ச்சி என்றால், ஒரு பக்கம் மதிப்பு கூடுதல் என்பது மட்டுமல்ல, மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், என்ன மாதிரி பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் ஆரம்பிக்கும்போது உதிரி பாகங்கள் எல்லாம் வரும், அவற்றை ஒன்றுசேர்ப்பது என்றுதான் ஆரம்பித்தோம். அதன் பல பாகங்களை உற்பத்தி செய்கின்ற வேலைகள் தொடங்கியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்னணுப் பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில், தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் ஏற்றுமதியில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

தோல் காலணி உற்பத்தி முன்னணியில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணி பெருமளவில் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஒரு பெரிய தேவை இருக்கிறது. அதை உருவாக்குவதற்கு, பெருமளவில் முதலீடுகள் செய்யப்பட்டு, இங்கே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் அதிகமான நபர்களுக்கு வேலை அளிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது. மின்னணுத் தொழிற்சாலையில் 90% பெண்கள் தான் இருக்கிறார்கள். அப்போது புதிதாக வரக்கூடிய தொழில்கள் எல்லாவற்றிலும் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தொழிற்சாலையைப் பொறுத்தவரை, புதிது புதிதாக சன்ரைஸ் இண்டஸ்ட்ரிஸ் எனப்படும், மின்னணு வாகனம், மின்சார வாகனம் என்று புதிதாக வருகிறது என்றால், ஏற்கனவே இருந்த வாகனத்தைத் தாண்டி, சூழ்நிலையை ஏதுவாக்கி நாம் செய்ததால், அது இரு சக்கர வாகனமாகவோ, நான்கு சக்கர வாகனமாகவோ இருக்கட்டும், அதில் முன்னணியில் நிற்கிறோம். இப்போது அடுத்த கட்டத்திற்குப் போகிறோம். இந்தியாவில், நெடிய கடற்கரைப் பகுதி இருக்கிறது. ஆனால், நம்மிடம் கப்பல் கட்டும் தொழில் என்பது வளரவே இல்லை. அதற்காக தமிழ்நாடு, குஜராத் எனத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சென்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து, தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், தூத்துக்குடியில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் ஒன்றை உருவாக்குவதற்கு முன் வந்திருக்கிறார்கள். மும்பை நிறுவனம் மற்றுமொரு கப்பல் கட்டும் நிறுவனம் - மூன்று தரப்புமே தூத்துக்குடியில் இலட்சக்கணக்கான கோடிகள் முதலீடு செய்து, மற்ற எல்லா தொழில்களையும்விட மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய ஒரு தொழிலாக கப்பல் கட்டும் தொழில் கருதப்படுகிறது. நம்முடைய தொழில் துறை பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும். அதற்கு மூன்று அல்லது நான்கு வருடம் ஆகலாம். ஒன்றிய அரசு அதற்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

வேளாண்மை - காலநிலை மாற்றம் பெரும் அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மழை பெய்யாத நேரத்தில் பெய்கிறது - வெயில் அடிக்காத நேரத்தில் அடிக்கின்றது. ஒரு பக்கம் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தாலும்கூட, கிட்டத்தட்ட 11 மாசம் தண்ணி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், என்ன பிரச்னை என்றால், கதிர் அறுக்கும்போது மழை பெய்கிறது. அது போன்று ஆகின்றபடியால், பயிர் இழப்பு ஆகிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்படி வேளாண் துறையில் உற்பத்தி எல்லாம் நடந்தாலும்கூட, உற்பத்தித் திறன் எல்லாம் அதிகமாக இருந்தாலும்கூட அதனுடைய வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது

துணைத் தொழில்களும் குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், தோட்டக்கலைத்துறை, பழங்கள் விளைவிப்பது, அதில் எல்லாம் நல்ல ஒரு பெரிய மாற்றமும், முன்னேற்றமும் நிலவிக்கொண்டிருக்கிறது. இதை எப்படி கையாளப் போகிறோம் என்பது நம் முன் இருக்ககும் மிகப்பெரிய சவால். அது நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கக்கூடிய நாடுகளுக்கு பெரிய சவால், காலநிலை மாற்றம். வேளாண்மையில் இது மிக முக்கியமான ஒரு ஹைலைட்.

அடுத்தது, சமூகத் துறை. தமிழ்நாடு எப்பொழுதுமே தன்னுடைய வளர்ச்சியில் சமூகத் துறைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. மக்களின் திறனை எவ்வளவுக்கெவ்வளவு வளர்க்கிறீர்களோ, அவ்வளவு நம் பொருளாதாரம், நம்முடைய சமுதாயமும் பெரிய அளவில் வளரக்கூடும். அது தமிழ்நாட்டின் சிறப்பு அம்சம். அந்த வகையில் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சமூகத் துறைக்கு மற்ற மாநிலங்கள் எல்லாம் முதலீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கும் பொழுது, வேளாண்மையிலோ தொழில்துறையிலோ சமூகத் துறை முதலீட்டைக் குறைத்துவிடுவார்கள். நம்முடைய மாநிலத்தில் மட்டும்தான் தொடர்ந்து அதற்கான முக்கியத்துவத்தை அளித்துக்கொண்டே இருக்கிறோம். புதிய திட்டங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறோம். கூடுதலான பணத்தை ஒதுக்கிக்கொண்டே இருக்கிறோம். அதனால், தொடர்ந்து பெரிய அளவில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்தது கட்டமைப்பும் ஆற்றலும் (Infrastructure and Energy)

பெரிய ஒரு விஷயம் தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. சூரிய ஆற்றலோ காற்றாலையோ இரண்டிலுமே பெரிய அளவில் நாம் முதலீடு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், உற்பத்தித் திறன் அளவுக்கு நம்மால் அதை எடுத்துக்கொண்டு பொய்ச் சேர்ப்பது என்பது ஒரு சிக்கலாக இருக்கிறது. மற்றொன்று, இதுவே மிகப் பெரிய சிக்கல். எந்த சமயத்தில் உங்களுக்கு வேண்டுமோ, அப்போது கண்டிப்பாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் மிகப்பெரிய அளவில் மின் பயன்பாடு உச்சத்தைத் தொடும் நேரம் என்பது தெரியும். அந்த நேரத்தில் என்ன ஆகும் என்றால், சூரியன் இருக்காது. காற்று எல்லா நாளும் அடிப்பது இல்லை. எனவே, நாம் அதை நம்பி இருக்க முடியாது. இன்னும் நிலக்கரி அல்லது ஹைட்ரோவைச் சார்ந்து இருக்கிறோம்.

நீர்மின்சாரத்தில் நமக்கு குறைவான திறன்தான் இருக்கிறது. எனவே, நிறைய அனல் மின்சாரத்தைத்தான் திரும்பத் திரும்ப பயன்படுத்த வேண்டி இருக்கிறது. மாற்று வழி ரெண்டு வழி, மூணு வழி சொல்றாங்க. ஒரு வழி என்னன்னா, பேட்டரி - பேட்டரியில் ஸ்டோர் செய்வது. ஆனால், ஒரு ஸ்டேட் முழுக்க தேவையான எனர்ஜியான மூன்று, நான்கு மணி நேரத்துக்கு தேவையான எனர்ஜியை ஸ்டோர் செய்வது, ரொம்ப எக்ஸ்பென்சிவான விஷயம். அந்த பேட்டரி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி அவ்வளவு பெரிதாக உருவாக்க வேண்டும். இதெல்லாம் நாம் உருவாக்குவதற்கு உண்டான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது முழுவதுமாக நம்முடைய கெப்பாசிட்டியை மீட் செய்யுமா என்றால், இன்னும் யாருக்கும் எந்த சொல்யூஷனும் தெரியவில்லை.

மொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே தீர்வு இன்னும் ஒன்றும் இல்லை. இன்னொரு தீர்வு, பம்ப் ஸ்டோரேஜ். இப்போது நன்றாக வெயில் அடிக்குது 10 மணிக்கு. எக்கச்சக்கமான சூரிய மின்சாரம் உற்பத்தி ஆகும். அவ்வளவு பயன்பாடு இருக்காது. அப்போது உபரியாக மின்சாரம் இருக்கும் இல்லையா, கீழே தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரை பம்ப் வைத்து இறைத்து மேலே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள். 6 மணி ஆனபிறகு, பவர் எப்போது ஜெனரேஷன் அதிகமாக தேவைப்படுகிறதோ, அப்போது அந்த தண்ணீரை மேலே இருந்து கீழே இறக்குவார்கள். இறக்கி மறுபடியும் அந்த ஹைட்ரோல எப்படி பவர் ஜெனரேட் செய்வார்களோ, அந்த ஜெனரேட்செய்வார்கள். அப்போது இந்த பேலன்ஸ் இருக்கிறதே, அதை பகல் முழுவதும் இருக்கக்கூடிய எனர்ஜியை கொண்டு போய் ஸ்டோர் செய்து, அதை திரும்ப ரீஜெனரேட் செய்வது - அதற்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்றால், அதற்கு இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு மூன்று, நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு உண்டான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குண்டான இன்வெஸ்ட்மென்ட் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று என்னவென்றால், ஹைட்ரஜன். ஹைட்ரஜனுக்கு உண்டான ஒப்பந்தங்கள் எல்லாம் போடப்பட்டு உள்ளன. ஆனால், அதுவும் மறுபடியும் தூத்துக்குடியில்தான் வரப்போகிறது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, இரண்டு, மூன்று நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதுவும் சேர்ந்தது என்று சொன்னால், இது எல்லாமே மெட்டீரியலைஸ் ஆகும்போது , நம்முடைய மின்சாரப் பயன்பாடு பெருமளவில் மாற்றம் பெறும். அப்படி வந்தது என்றால், அனல் மின்சாரத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் குறையும்.

அடுத்தது சேவையும் சுற்றுலாவும் (Services and Tourism) இப்போது புதிதாக பல சேவைத் துறைகள்... குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸ் என்று சொல்லக்கூடிய உலக அளவில் இருக்கக்கூடிய திறன் மையங்கள்.., ஒரு பெரிய நிறுவனம் இருக்கிறது என்று சொன்னால், அந்த நிறுவனத்திற்குத் தேவையான ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட். அது உலகம் முழுவதுமாக இருக்கக்கூடிய அவர்களுடைய தேவை. அதுக்குள்ள ஒரு (டெக்னோக்ராட்ஸ்) தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்களோ, சயின்டிஸ்ட், அவர்களை வைத்து அதற்கு உண்டான ஆய்வுகளை மேற்கொள்ளும் இடமாக அதை மாற்றுவது. மேற்கத்திய நாடுகளில்தான் வைத்திருப்பார்கள். இப்போது அங்கே அதற்குண்டான ஆட்கள் குறைவாக குறைந்து கொண்டே இருப்பதால், இந்தியா போன்ற நாடுகளில் பெரிய கல்வி நிறுவனங்கள் நிறைய... நிறைய பேர் படித்துக்கொண்டு வருகிறார்கள். எல்லாம் இங்கே இருப்பவர்கள், அங்கே சென்று படித்துவிட்டு வருகிறார்கள். நாம் இங்கே இருந்து அங்கே வேலை செய்து நமக்கு அந்த சம்பளத்தைக் கொடுப்பதைவிட, அவர்களே இங்கு வந்து அதில் பாதி சம்பளம் கொடுத்தால்போதும் என்று, வந்திருக்கிறார்கள். பெங்களூர் ஓர் இடமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜிசிசி சென்டர்ஸ் பெங்களூர்ல இருக்கிறது.

நாங்கள் மூன்று வருடங்கள் இருந்து, ஒவ்வொரு வருஷத்துக்கும் இவ்வளவு ரூபாய் மானியமாக கொடுக்கிறோம்னு சொல்லி, அதன் வழியாக பெருமளவில் கொண்டு வந்திருக்கிறோம். நம் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் சாதாரண என்ட்ரி லெவலில் கிடைக்கும் வேலையைவிட ஜிசிசிக்கு போகிறார்கள் என்றால், ஐந்து பங்கு, ஆறு பங்கு சம்பளத்துடன் கூடிய வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஓர் இடம் அது. அதற்காகத்தான் நாம் பெரிய அளவில் கவனம் செலுத்தவேண்டிய சூழலில் இருக்கிறோம்.

ஜிசிசியைப் போலவே ஃபின் டெக் என்று ஒரு பெரிய அளவில் புது சேவை வந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வர்த்தக மையத்தில் ஃபின்டெக் பார்க் ஒன்று இப்போது கட்டிமுடியப்போகிறது. அது முடிந்து வேலையைத் தொடங்கியது என்று சொன்னால், பெருமளவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வந்து தமிழ்நாட்டில் தொழிலைத் தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

மூன்றாவதாக, பொழுதுபோக்கு - குழந்தைகள் ஃபோனில் கேம்ஸ் விளையாடுவது - அதெல்லாம் செய்வது எல்லாம் மிகப்பெரிய பில்லியன்ஸ் ஆஃப் டாலர்ஸ் இருக்கக்கூடிய ஒரு தொழில். அதில் பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அதற்குண்டான தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கக்கூடிய இடங்கள் வேண்டும். தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பது என்பது அதற்கு உண்டான மையங்கள், ஸ்டுடியோகள், கருவிகள் வேண்டும். பூந்தமல்லியில் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடியும்பொழுது, அந்தத் தொழிலும் பெருமளவில் வளர்த்தெடுக்கப்படும்.

சுற்றுலா என்பது இந்தியாவில் தமிழ்நாடுதான் மிகப்பெரிய அளவில் இழுக்கிறது. ஆனால், அவர்கள் மிகவும் குறைவான செலவுதான் இங்கே வந்து செய்வார்கள். ஏனென்றால், அதற்கு உண்டான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு எதெல்லாம் ரொம்ப அட்ராக்டிவா இருக்குமோ, பேக்கேஜஸ் எல்லாம் சரியான முறையில் உருவாக்கி, அதற்கு தகுந்த வசதி, போக்குவரத்து வசதி அதெல்லாம் உருவாக்க வேண்டும் என்று சொன்னால், மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய சிறிய வேலைக்கே பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று சொன்னால், அதைப் பெரிய அளவில் அதை முயற்சிசெய்தோம்னால், இன்னும் பெரிய அளவில் அது வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பெருமளவில் உலகத்தின் பல நாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஊருக்கு வருவது, நம்முடைய ஊரைப் பார்ப்பது, கோயிலுக்கு போவது, மொட்டை அடிப்பது, காது குத்துவது, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்தோம் என்று சொன்னால், அது ஒரு விஷயம்.

அடுத்தது சுற்றுச்சூழல்

இந்த நான்கைந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிதாக என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் - அதெல்லாம் பெருமளவிலே செய்திருக்கிறோம். அதே சமயத்தில், பெரிய சவால்கள் எல்லாம் இருக்கிறது. நான் ஏற்கனவே அக்ரிகல்ச்சர் பற்றி பேசும்போது சொன்ன மாதிரி, இப்போது நமக்கு கிளைமேட் சேஞ்ச் என்பது பெரிய சேலஞ்ச். கிளைமேட் சேஞ்ச் வரும்பொழுது வெறும் மழை பெய்வது, காற்று அடிப்பதைத் தாண்டி, வெயில் அடிப்பது. அதாவது அந்த ஹீட் வந்து எந்த இடத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அதற்கு உண்டான தடுப்பு உத்திகள், ஒரு கவனத்துடன் முயற்சி எடுக்கவேண்டும். அதற்கு உண்டான பாலிசிஸ். நம்முடைய முன்னெற்பாடு வேண்டும். அது ஒரு டிசாஸ்டர்.

ஹீட் அஸ் எ டிசாஸ்டர் என்று நாம் தான் முதலில் செய்திருக்கிறோம். மெகா டிசாஸ்டர் மேனேஜ்மென்டில் என்ன மாதிரியான எஃபர்ட் எடுக்கிறோமோ அதெல்லாம் அதற்கு செய்யலாம். இது ஒருபுறம் அது நடந்து கொண்டிருந்தாலும் கூட, இன்னொரு பெரிய சேலஞ்ச் என்னவென்றால், ரைசிங் சீ லெவல்ஸ். கடலினுடைய நீர்மட்டம் இருக்குல்ல, அது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அது வரும்பொழுது என்ன ஆகும் என்றால், கடல் நீர் எங்கெல்லாம் தாழ்வான பகுதிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் உள்ளே வருவதற்கு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த பகுதியில் எல்லாம் கண்டறிந்து அதற்கு என்ன வேலைகள் எல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பதற்குண்டான முன்னெடுப்புகளில் இருந்து ஒரு சில வேலைகளைச் செய்திருந்தாலும், இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், காவிரி டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள் வந்து கடலில் சென்று கலக்கின்ற இடத்தில், கடல் தண்ணீர் உள்ளே வந்து ஆற்றுக்குள்ளே வந்திடாமல் இருப்பதற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்றால், எல்லா முகத்துவார பகுதியிலும் என்ன செய்யப்படுகிறது என்றால், இந்த கடல் நீர் எவ்வளவு உயரத்துக்கு உயரும் என்று, அந்த உயரத்தை தாண்டி அதற்கு உண்டான மதகுகள், கதவணைகள் எல்லாம் போடப்பட்டிருக்கின்றன. அது மாதிரி போடும்போது என்ன ஆகும் என்றால், கடல் நீர் உள்ளே வராமலும் தடுக்கலாம்.. அது போன்று, அந்த ஷட்டர்ஸ் நீங்கள் போட்டு வைத்துவிட்டோம் என்றால், ஏற்கனவே வந்து புகுந்த கடல் நீரெல்லாம், அந்த நன்நீர் வந்து மேல மேல சேரும்போது என்ன ஆகும் என்றால், அந்த ஏற்கனவே இருந்த பிராக்கிஷ் வாட்டர்னுடைய குவாலிட்டி சேஞ்ச் ஆகி நல்ல நீராக மாறுவது என்பது நமக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய அனுபவம். அந்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் செய்த வேலையும் நமக்கு தெரிய வருகிறது. அது போன்ற ஒரு திட்டம் பல இடங்களுக்கும் அது விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

மற்றொன்று என்னவென்றால், அந்த இன்வேசிவ் ஸ்பீசிஸ். தாவரங்களாக இருக்கலாம் அல்லது அது மீனாக இருக்கலாம். அது போன்று நம்முடைய எக்காலஜி இன்வைட் செய்வது பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது மேற்கு தொடர்ச்சி மலை. நம்முடைய ஊரில் ஓடக்கூடிய ஆறுகள் அனைத்திற்கும் உண்டான நீராதாரமாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைதான். அந்த மேற்குத் தொடர்ச்சி மலையில், வேறு எந்தச் செடியும் வளர விடாத அளவுக்கு இந்த தாவரம் இருக்கும். பச்சேல்பசேல் என்று இருக்கும். கலர் கலராக இருக்கும். வேறு எந்த மரத்தையும் வளர விடாது, எந்த செடியையும் வளர விடாது. அது மாதிரி ஆகும்போது என்ன ஆகும் என்றால், அங்கு இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உண்டான சாப்பாடே கிடைக்காது. அந்த விலங்குகளை நம்பி இருக்கக்கூடிய மற்ற விலங்குகளுக்கு அதனால் ஒன்றும் இல்லாமல் போகும். அங்கு இருக்கக்கூடிய புல்வெளிகள் நம்முடைய எல்லா இரிகேஷனுக்கும் உண்டான ஆரம்பப் புள்ளி, சோர்ஸ் அங்குதான் இருக்கிறது. இப்போது இது எல்லாமே நிறைய பாதிக்கப்படுகிறது என்று சொன்னால், இந்த இன்வெசிவ் ஸ்பேசிஸ் நாம் கண்ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு உண்டான முன்னெடுப்புகள் அதெல்லாம் நாம் என்ன செய்திருக்கிறோம்? அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநிலமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? இந்த மாதிரி ஒரு கிளைமேட் கம்பெனி ஒன்று ஆரம்பித்திருக்கிறோம். அதன் வழியாக எப்படி பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன என்பதை எல்லாம் டாக்குமெண்ட்டாக செய்திருக்கிறோம்.

கடைசியாக, பெண்களுடைய பங்கு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்தியாவில் தொழில் துறையில் வேலை செய்யக்கூடிய பெண்களில் மிகப்பெரும்பாலான கிட்டத்தட்ட 45 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அப்போது வெறும் தொழிற்சாலையில் மட்டும் வேலை செய்வது என்பது ஒரு புறம். நகர்ப்புறங்களில் வேலைக்கு செய்யக்கூடிய பெண்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவான அளவில் இருக்கிறது என்பது ஒரு புறம். மேலும் அதற்குண்டான infrastructure ஏன் வரவில்லை என்பது ஆதரவான அமைப்புகள் எதும் பெரிய அளவில் செய்யவில்லை என்பதை எல்லாம் சுட்டிகாட்டி, அதையெல்லாம் நாம் இன்னும் செய்தோம் என்று சொன்னால், இன்னும் பெண்களுடைய பங்களிப்பு என்பது பெருமளவில் இருக்கும்.

இதுதான் நாம் இந்த 10 பிரிவுகளில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய விஷயங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படி வளர்ந்திருக்கிறது, என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் பெறப்பட்டிருக்கிறது – அதேவேளையில், அரசு எதையெல்லாம் குறித்து கவனம் செலுத்தவேண்டும் – எங்கெல்லாம் அவர்களுடைய பார்வை இன்னும் கூறாக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com