
தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபெறும் 1.31 கோடி மகளிருக்கு வங்கிக் கணக்கில் 5000 ரூ வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தேர்தல் சமயத்தில் செய்யப்பட்டிருக்கும் இச்செயல் திமுகவினரால் சர்ஜிகல் ஸ்ட்ரைக், மாஸ்டர்ஸ்ட்ரோக் என்று புகழப்பட்டது.
“இனிமேல் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் கேட்கமாட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு அந்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது” என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
ஆட்சியில் பங்கு கேட்டு முறுக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்பிகள் இந்நடவடிக்கையை வரவேற்றனர். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ‘இப்போதுதான் கோடைகாலம் வரப்போகிறது எனத்தெரிகிறதா? இது தேர்தலுக்காக செய்யப்பட்ட ஸ்டண்ட்” என்று விமர்சித்தனர்.
இந்த பணம் வழங்கும் நடவடிக்கையை அறிவித்தபோது முதலமைச்சர் முக ஸ்டாலின்,” தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது அரசு!’ என்று கூறினார். அத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் போகிற போக்கில் அளித்துவிட்டார்!
மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிடப்பட்ட இந்த உதவித் தொகை மகளிருக்கு செப்டம்பர் 2023 முதல் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த தேர்தலுக்கு முன்பாக திமுகவால் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் எனச் சொல்லப்பட்டு பின்னர் தகுதியுடைய மகளிருக்கு என மாற்றப்பட்டது. இந்த கோணத்தில் மட்டுமே இதை எதிர்க்கட்சியினரால் விமர்சிக்க முடிந்தது. அதிமுக தற்போது தங்கள் தேர்தல் வாக்குறுதியாக 2000 ரூ மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மகளிரை முன்வைத்து பல நலத்திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. அதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவது இந்த உரிமைத் தொகை ஆகும். இதைப் பெறுகிற மகளிரில் 32 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது இதை மேலும் கவனத்துக்கு உரியதாக ஆக்குகிறது. நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடுதான் இதைச் செயல்படுத்தியது. பிற மாநிலங்கள் இதைப் பின்பற்றின. செயலாக்கம் செய்தன என்பது திமுக அரசுக்கு உண்மையில் பெருமைதான்!
மத்தியபிரதேசத்தில் பாஜக அரசு 2023-இல் இந்த உரிமைத்தொகைத் திட்டத்தின் மூலம் 1000 ரூ வழங்கியது. பின்னர் அதை 1250 ஆக உயர்த்தியது. பின்னர் தேர்தல் வந்தபோது 3000 ரூபாயாகத் தருவோம் என்றனர். 2023 டிசம்பரில் சட்டமன்றத் தேர்தலில் வென்றபிறகு 2025-இல் 1500 ரூபாயாக உயர்த்தி வ்ழங்குகின்றனர்.
பீஹாரில் தேஜகூ அரசு கடந்த ஆண்டு 1.56 கோடி மகளிருக்கு 10,000 ரூபாய் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் வழங்கியது. அமோக வெற்றி அடைந்தது.
மகாராஷ்டிர மாநிலத்திலும் 2024 –இல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணி முதல்வரான ஏக்நாத் ஷிண்டேயால் 1500 ரூ மாதம் தோறும் வழங்குவதாக தொடங்கப்பட்டது. தேர்தலின்போது 2100 ஆக உயர்த்தித்தருவோம் என வாக்களித்தனர். கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக சார்பில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆனார். ஆனாலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
டெல்லி மாநில அரசாலும் மாதம்தோறும் 2500 ரூபாய் தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலமும் இதுபோல் 2100 ரூபாய் வழங்குகிறது. ஆனால் இவை குறைவான எண்ணிக்கையில்தான் வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே பாஜக ஆளும் மாநிலங்கள்.
”மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன,” என்று இது பற்றி விமர்சனம் செய்தார் காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி.
பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களான பீகார், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா ஆகியவற்றில் மகளிருக்கான பணம் நேரடியாகப் போய்ச் சேர்ந்தது, ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான ஒரு வழியாக அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை!
இதை மனதில் வைத்துத்தான் இந்த ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை’ மிக ரகசியமாக வைத்திருந்து நிறைவேற்றி இருக்கிறது நிதித்துறை அரசு வட்டாரம். கடந்த பொங்கலை ஒட்டி ரேஷன் கார்டுக்கு 5000 ரூ வீதம் வழங்க இருப்பதாக செய்தி கசிந்தது. ஆனால் 2000 குறைவாக 3000 ரூ வழங்கப்பட்டது. அப்போதே அரசு அந்த 2000 ரூ வழங்க நிதியைத் தயாராக வைத்திருந்ததும் இன்னும் சில நாட்கள் சென்றபின்னர் தேர்தல் நெருக்கத்தில் வழங்கலாம் எனத் திட்டமிட்டு அதை கோடைக்கால செலவுக்கு என மகளிருக்கு வழங்கி இருப்பதாக கோட்டை வட்டார பத்திரிகையாளர் ஒருவ்ர் தெரிவித்தார்.
“இடைக்கால பட்ஜெட்டில்தான் இதுபோன்ற அறிவிப்பு வரும் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்து திட்டமிட்டிருக்கையில் இப்படி யாரும் தடுக்க முடியாத நிலையில் முன்கூட்டியே நிதி உதவியை எங்கள் முதலமைச்சர் அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திமுக ஆட்சியில் வண்ணத்தொகைக்காட்சி வழங்குவதை தடை செய்ததை நாங்கள் மறந்திருக்க வில்லை. இந்த மகளிர் உரிமைத் தொகையைக் கூட தடை செய்ய முகாந்திரம் இருக்கிறதே?” என்று கூறினார் திமுக பிரமுகர் ஒருவர் உற்சாகத்துடன்.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்ற நிலை இருக்கும்போது முதல் கட்ட காய்நகர்த்தலை அசத்தலாக நகர்த்தி இருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர். கோடைக்கால செலவுக்கு என்று 2000 ரூபாய் வழங்கி இருப்பது ஸாரி கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் திமுகவினர் முகத்தில் இப்போது மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை!