மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து - கலாநிதி, தயாநிதி சமாதானம்!

மு.க.ஸ்டாலின் - கலாநிதி, தயாநிதி மாறன்கள்
மு.க.ஸ்டாலின் - கலாநிதி, தயாநிதி மாறன்கள்
Published on

பிரபல சன் ஊடகக் குழும பங்குப் பிரச்சினையில் முரசொலி மாறன் மகன்களுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் செய்துவைத்த சமாதானத்தை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

முரசொலி மாறனின் மகன்களான கலாநிதி, தயாநிதி இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிக்கல் நீடித்துள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி இரண்டாவது முறையாக தயாநிதி தரப்பில் கலாநிதிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அதை பகிரங்கமாக ஊடகங்களுக்கும் தயாநிதி வெளியிட்டார்.

கலாநிதி, அவரின் மனைவி காவேரி உட்பட சன் குழுமத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய நோட்டீசில், உரிய பதில் அளிக்காதபட்சத்தில், செபி, அமலாக்கத் துறை முதலிய மத்திய அமைப்புகளிடம் புகார் அளித்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தி.மு.க. தலைமைக் குடும்பத்தில் இப்படியொரு சிக்கல் வந்தது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் எந்த சிறு பிரச்னையும் கட்சிக்கு எதிராக அரசியல் ஆக்கப்படுவதாக ஆளும் கட்சியினர் கலக்கமாக இருக்கின்றனர். இதில் நாமே வலியப் போய் பிரச்னையை உருவாக்கிக்கொள்வதா என்பது கட்சியினரிடையே எழுந்த அதிருப்தியும் கவலையும்!

தி.மு.க.வுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இப்படியான பஞ்சாயத்துகள் புதியன அல்ல. 22 ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரிக்கும் மாறன் மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. அதில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். காரணம், அழகிரியைப் பற்றி தினகரன் ஏட்டில் வெளியிடப்பட்ட அடிப்படையற்ற ஒரு புள்ளிவிவரம்.

இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான பிரச்னையாக மாறி, கலைஞர் தொலைக்காட்சி என புதியதாகத் தொடங்கப்பட்டது. அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற சன் குழும ஊடகத்தினருக்கு தி.மு.க. நிர்வாகிகள் நேரடியாக நெருக்கடியும் மிரட்டலும் விடுத்தனர்.

பிறகு, அந்தப் பிரச்னையில் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தலையிட்டு குடும்பத்தில் மீண்டும் உறவுகளை ஒட்டவைத்தார். கருணாநிதியும் அப்போது சொன்ன, இதயம் இனித்தது, கண்கள் பனித்தன எனும் வாசகம் பிரபலமானது.

முரசொலி மாறன் இருந்தபோதும் மறைந்தபின்னரும் கருணாநிதியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் நிதி சகோதரர்கள் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர்.

இந்த குடும்பங்களை அறிந்த மூத்த பத்திரிகையாளர்கள் அடிக்கடி சொல்லும் தகவல் இது: முரசொலி மாறன் மறைந்த சமயம்... பங்கு பிரிப்பதில் நான் ஏதும் செய்யவேண்டுமா என கருணாநிதி கேட்க, அண்ணன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என இதே தயாநிதிதான் சொன்னார் என்பதுதான்!

இத்தனைக்கும், கடந்த மக்களவைத் தேர்தல்வரை அண்ணனும் தம்பியும் இணைபிரியா ஜோடியாகத்தான் இருந்துவந்தார்கள். சன் குழுமத்தில் கலாநிதியின் மகள் தலைமைப்பொறுப்புக்கு வந்தபிறகு அதன் நிறுவனங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. கலாநிதியின் கவனம் குழுமத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கூடுதலானது.

அடுத்த தலைமுறை இரு குடும்பங்களிலும் தலையெடுத்த வேளையில், அவரவர் வளர்ச்சி குறித்த ஆவலும் திட்டங்களும் வருவது இயல்பு. அப்படி கணக்கு பார்க்கத் தொடங்கியபின்னர்தான் பிரச்னை வெளிவருகிறது.

தயாநிதி மாறனின் கூற்றுப்படி, ’5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கலாநிதி தரப்பு மோசடி செய்துவிட்டது’ என்பது அரசியல், தொழில் துறைகளில் அதிர்வலைகளை உண்டாக்கியது.

சன் குழுமத்தின் பங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை... தானாக வந்து ஒழுங்குபடுத்தல் செய்ய விரும்பாத கருணாநிதியை வேண்டாம் என மறுத்த நிதி சகோதரர்களுக்கு, அந்தக் கருணாநிதியின் மகனின் சமரச முயற்சியை ஏற்கும்நிலை உருவானது காலத்தின் கோலம்.

அண்ணன் தம்பி இருவரிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பேசி சமாதானம் செய்துவைத்துள்ளார்; அதன்படி, தயாநிதி தன்னுடைய புகாரை கடந்த ஞாயிறன்று திரும்பப் பெற்றுவிட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com