ஸ்டாலின் ஆட்சியின் 4 ஆண்டுகள்: சாதனையா, சறுக்கலா?

ஸ்டாலின் ஆட்சியின் 4 ஆண்டுகள்: சாதனையா, சறுக்கலா?
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராகிவிட்டது, ஆளும் தி.மு.க.! அதன் வேகத்தைப் பார்த்தால், தேர்தல் பிரச்சாரத்துக்கான உத்தியையும் வகுத்துவிட்டதாகவே தெரிகிறது. இந்த ஆட்சியின் 4 ஆண்டுச் சாதனைகளை முன்வைத்தாலே போதும், வாக்குகளை அள்ளிவிட முடியும் எனும் நினைப்பில் களமிறங்கியிருக்கிறது, அந்தக் கட்சி!

திராவிட மாடல் எனத் தொடங்கப்பட்ட இந்த ஆட்சியில், ’நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு’ என்பதுதான் ஆளும் கட்சி வைத்திருக்கும் நம்பிக்கை முழக்கம்!

எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் முழக்கத்தில், பத்து திட்டங்களை முத்தானவையாக தன் சாதனைப் பட்டியலில் முன்னிறுத்துகிறது, மு.க.ஸ்டாலின் அரசாங்கம்.

அதில், முதல் இடத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த ஆண்டுவரை சுமார் ஒரு கோடியே 15 இலட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துவருகின்றனர்.

சாதனைப் பட்டியலில் அடுத்த இடம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். அரசின் விவரப்படி, மொத்தம் 34,987 அரசு, அரசின் உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 17.53 இலட்சம் மாணவர்கள் காலையில் வயிறார உண்டு தங்கள் கல்வியைப் பெறுகின்றனர். இதை உண்மையில் மாநிலத்தின் புதியவொரு மைல் கல் எனச் சொல்லமுடியும்.

வழக்கமாக, இலவச செண்டிமெண்ட்டில் கைவைக்க யோசிக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் போல அல்லாமல், மு.க.ஸ்டாலின் ஒரு புதிய முடிவை எடுத்தது, அவரின் தனித்துவத்தைக் காட்டியது. தாலிக்குத் தங்கம் என இதுவரை வழங்கப்பட்டுவந்த திட்டத்தை மாற்றி, பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைக் கொண்டுவந்தார். அடுத்து ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை, அறிவியல், பொறியியல், பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றே பரவலாகக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தரப்பட்டுவந்த இந்த உதவி, பின்னர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம், இதுவரை 4,83,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்கிறது அரசின் தரவு.

ஆனால், இதிலும்கூட முழுமையாக உதவிபெறும் கல்லூரி, பகுதியாக உதவிபெறும் கல்லூரி எனும் பாகுபாட்டை நீக்கவேண்டிய நிலையே இருக்கிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்குத்தான் இந்தத் திட்டம் எனக் கூறப்படும் நிலையில், உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் வழங்கவேண்டும் என மாணவர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எல்லாம் குரல்கொடுக்க வேண்டி இருந்தது.

ஸ்டாலின் 4 ஆண்டு ஆட்சி - அரசின் விளம்பரம்
ஸ்டாலின் 4 ஆண்டு ஆட்சி - அரசின் விளம்பரம்

அருகில் அரசுப் பள்ளிகள், போகவர பாதுகாப்பு முதலிய பல விசயங்களை யோசித்துதான் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாலான பெற்றோரின் இயல்பாக உள்ளது. இந்த நிலையில், உரிய பள்ளியில் சேர்ப்பது என முடிவெடுக்கும்போது முழுமையாக உதவிபெறும் பள்ளியா, பகுதியளவு உதவிபெறுவதா என்பதையெல்லாம் பெற்றோர் யோசிக்கமுடியுமா எனக் கேட்கிறார்கள், உதவிகிடைக்காதவர்கள் தரப்பில்.

இந்தக் குறையைச் சரிசெய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது ஒருபுறம் இருக்க, இத்திட்டம் நீடிக்கப்பட்டு மாணவர்களுக்கும் 3,80,467 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து -விடியல் பயணமும் மக்களை ஈர்த்துள்ள ஒரு திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை 662 கோடி நடைகளுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதலாக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது, நெசவாளர்களுக்கு ஓர் அளவுவரை இலவச மின்சாரம் தருவதால் 2.42 இலட்சம் பேருக்குப் பயன், ரூ.10.28 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து 32 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 41.83 மாணவர்களுக்கு திறன் பயிற்சி என சாதனைப் பட்டியல் விரிகிறது.

கூட்டணிக் கட்சிகள் பாராட்டவும், எதிர்க்கட்சிகள் ஒன்றுமே இல்லை என்பதுமான அரசியல் காட்சிகளே இங்கே இயல்பாகிவிட்டது. இந்த சூழலில் பல பத்தாண்டுகளாக முன்னணி பத்திரிகைகளில் அரசியலின் குறை, நிறைகளை அலசிவரும் மூத்த பத்திரிகையாளர்கள்- அரசியல் விமர்சகர்களின் கருத்துகளைக் கேட்டோம்.

அவர்கள் சொல்வது என்ன?

வ. ரங்காச்சாரி, மூத்த பத்திரிகையாளர்
வ. ரங்காச்சாரி, மூத்த பத்திரிகையாளர்

சாதனைகள் போதாது!

- வ.ரங்காச்சாரி

” நான்காண்டு சாதனைகளாக அரசே விளம்பரப்படுத்தும் அம்சங்கள் தமிழ்நாட்டில் எல்லாக் காலத்திலும் இருப்பதுதான். காங்கிரஸ் ஆண்ட முதல் இருபதாண்டுக் கால (1947-1967) வலுவான அடித்தளத்தின் மீதே இவை எழுந்தன. மத்திய அரசின் தாராளமயப் பொருளாதார திட்டங்களாலேயே தகவல் தொழில்நுட்பம் மின்னணுவியல், மோட்டார் வாகன உற்பத்தி திட்டங்கள் பெருகின. எனவே இந்த சாதனைகள் நிச்சயம் தமிழக அரசுடையதோ திராவிட மாடலின் விளைவோ மட்டும் அல்ல.

மாநில அரசு நிர்வாகம் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்கூட முழுமையான வெற்றி அடையவில்லை. போக்குவரத்து, மின்னுற்பத்தி ஆகிய இரண்டு துறைகளிலும் ஊழல், நிர்வாகச் சீர்கேடு தொடர்கிறது. சொத்துவரி, மின் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், பத்திரப்பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய பிறகும் கூட மக்களுக்கு அவற்றுக்குரிய பலன்கள் கிட்டவில்லை. மாநகராட்சிகளின் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு மாநகரங்களில் குப்பை அகற்றுவது, கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது, சாலைகளை குண்டும் குழியுமில்லாமல் தரப்படுத்துவது, தெரு விளக்குகளை அதிகரித்து இருளை நீக்குவது ஆகியவற்றில் முன்னேற்றமில்லை.

பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் எல்லைகளிலிருந்தே குப்பைகள் குவிவதும் துர்நாற்றமடிப்பதும் தொடர்கிறது.

தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் கடிபடுவதிலிருந்து மீட்க வழி காணப்படாததாலும் மக்கள் வேதனைப்படுவது அதிகரித்தே வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோருக்குத் தேர்தலுக்கு முன்னால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேசப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களை ஆலோசகர்களாக நியமித்த பிறகும் புரட்சிகரமான, நம்பிக்கையூட்டும் புதிய பொருளாதார உத்திகளோ திட்டங்களோ இல்லை.

விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட் அறிவித்த பிறகு விவசாயிகள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுவருகிறதா என்று ஆய்வு செய்வது அவசியம்.

மெட்ரோ ரயில்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தாலும் அதில் சில ஆயிரம் பேர்தான் அன்றாடம் பயணிக்க முடியும். அந்தத் தொகையை பேருந்துகளை வாங்கவும் அரசு போக்குவரத்தை சீர்படுத்தவும் பயன்படுத்தியிருந்தால் மாநிலம் முழுவதுமே பயன் அடைந்திருக்கும், அரசுக்கும் வருவாய் பெருகியிருக்கும்.

வீட்டுக் கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு உற்சாகமாக ஒத்துழைக்கவில்லை.

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தென்னிந்திய மாநிலங்கள் வரி செலுத்தும் மாநிலங்களாகவும் இந்தி பேசும் மாநிலங்கள் வசதிகளைப் பெறும் மாநிலங்களாகவும் தொடர்கின்றன என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதே நிலை தமிழ்நாட்டு மாவட்டங்களுக்குள்ளும் நிலவுகிறது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, வேலூர் போன்ற சில மாவட்டங்களில்தான் அதிக தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு நிலவுகிறது. பெரும்பாலான மத்திய, கிழக்கு, தென் மாவட்டங்கள் தமிழகத்துக்கு வரி செலுத்தும் மாவட்டங்களாக மட்டும் தொடர்கின்றன. மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படவில்லை. அடுத்து மாவட்ட சுயாட்சிக்கும் குரல்கள் வரலாம்."

sigamani
சிகாமணி, மூத்த பத்திரிகையாளர்

இன்னும் திறமையாகக் கையாள வேண்டும்!

- தி.சிகாமணி

”தி.மு.க.வின் நான்காண்டு கால ஆட்சியில் பல முன்மாதிரித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் போன்றவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் உயர்த்தச் செய்யும்.

அறிஞர் அண்ணா தீர்க்கதரிசனமாக மாநில சுயாட்சி உரிமைக் குரலை எழுப்பினார். அது மீண்டும் எழுந்துள்ளது. பாரபட்சமற்ற நிதிப் பகிர்வுதான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்க்கும். ஆனால் மாநிலங்களை அடிமை நிலைக்குத் தள்ளும் ஆபத்தான பாதையில் ஒன்றிய அரசு செல்கிறது. தமிழ்நாட்டு மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்த விஷயத்தில் மூன்று மாத கால நிர்ணயத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. சட்டப் போராட்டம் மூலம் இந்த உரிமையைப் பெற்ற மு. க. ஸ்டாலின் அரசைப் பாராட்டலாம்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற ஒரே பிரச்சனையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியை விமர்சித்து வருகின்றன. இந்த விஷயத்திலும் தமிழ்நாடு அரசு பிரச்னையை மேலும் திறமையாகக் கையாள முன்வர வேண்டும்.”

சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர்
சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர்

போர் பாதித்ததைப் போல...!

- சாவித்திரி கண்ணன்

”எந்த மதத் தீவிரத்தையும் ஆதரிக்காத ஆட்சியாக இது உள்ளது. சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. பா.ஜ.க. ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுங்கட்சி மீது விமர்சனமே வைக்க முடியாது. இந்த ஆட்சி மீது நம்மால் விமர்சனங்களை வைக்க முடிகிறது.

ஊழல் முறைகேடுகள் குறிப்பாக இயற்கை வளச்சுரண்டல் மிக அதிகம். அதனால்தான், கனிமவளத்துறை துரைமுருகனிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்ததுதான்.

மலைகளைத் தரைமட்டமாக்கி, ஆற்றோரங்களைப் பள்ளத்தாக்காகிவிட்டார்கள். அமலாக்கத் துறையும் வழக்குப் போடும் நிலைமைக்கு வந்துள்ளது.

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பாட்டில்களைக் கணக்கு காட்டாமல் விற்பனை செய்கிறார்கள் என்றது. அதாவது நூறு ரூபாய்க்கு ஒரு பாட்டிலை விற்றால், அதில் அரசுக்கு 82 ரூபாய் வருமான வரியாக வரும். மக்கள்நலத் திட்டங்களுக்காத்தான் மதுவை விற்பனை செய்கிறோம் என்கிறார்கள். ஆனால், இதில் வரும் பெரும் வருவாயைக்கூட அரசு கஜானாவுக்கு வரவிடாமல் ஊழல் செய்கிறார்கள். இது மோசமானது.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடில்லாமல் அரசே மது விற்பனையை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் இல்லையென்றால் தொழிலே நடக்காது என்ற நிலை உள்ளது. இப்படியொரு அவலநிலை கடந்து இருபது வருடத்தில் நடந்துள்ளது. தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குப் போனது மாறி, இப்போது வெளி மாநிலத்தவரை நம்பிக் கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி 9.21 சதவீதம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவதில் உண்மை இல்லை. தமிழ்நாட்டில் விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. நீர் மேலாண்மைக்கு சட்டம் கொண்டுவந்துள்ளார்கள். அதாவது, உள்ளாட்சியிடம் கேட்காமேலே நிலத்தை எடுத்துக்கொள்ளும் சட்டம்தான் அது. இப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்து வைத்துள்ளனர். கொஞ்ச காலம் கழித்து இவற்றை அரசியல்வாதிகளே விற்பனை செய்துவிடுவார்கள்.

இந்த ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு நகரமயமாக்கலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது கிராமங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. உணவு உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கத்திலிருந்து அரிசி வாங்குகிறோம். எனக்கு விவரம் தெரிய நாம்தான் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தோம். இன்று அது குறைந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் மூலமாக பிரமாண்டமான வருமானம் பார்த்து செழிப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்வது அது நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வது. இயற்கைவள ஆதாரங்களை வெளிநாட்டில் விற்று பணக்காரனாகிவிட்டோம் எனப் பெருமைபேசுவது அவலம். இயற்கை வளம்தான் உண்மையான செல்வம்.” என்கிறார் கண்ணன்.

அரசியல் விமர்சகர்களின் கருத்துகள் முக்கியமானவை என்றாலும், தீர்ப்பு சொல்லப்போகும் மக்களின் கருத்து வாக்குகளில் என்னவாக வெளிப்படப்போகிறது என்பதுதான் எல்லாருடைய ஆவலான கேள்வி!

logo
Andhimazhai
www.andhimazhai.com