மின்னல் தாக்குதலிலிருந்து காக்கும் மரம்! அதிசயம் அல்ல; உண்மை!

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் பூரிகுடிசையில் நடத்தப்பட்ட பனை கனவுத் திருவிழா 2025
விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் பூரிகுடிசையில் நடத்தப்பட்ட பனை கனவுத் திருவிழா 2025
Published on

சத்தமில்லாமல் நடப்பதாக பல சம்பவங்களைச் சொல்வார்கள். ஆனால் பெருஞ் சத்தத்துடன் சட்டென நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்துவிடுகிறது, பாழாய்ப்போன மின்னல். இத்துடன் பனைமரங்கள் அழிக்கப்படுவதையும் சேர்த்துப் பார்க்கவேண்டியிருக்கிறது என்கிறது நடைமுறை அறிவியல்.

உலக அளவில் மின்னலால் மனிதர்கள் அதிகமாக உயிரிழக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் மாறிவிட்டது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நிலவரப்படி வெப்பநிலை 1 டிகிரி அதிகரித்த நிலையில், மின்னலின் அளவு 12% அதிகரித்துள்ளது. இதுவே, இந்தியாவில் ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கு 7- 18 % வரை மின்னல் தாக்கம் கூடியுள்ளது. 2024-இல் மட்டும் இந்தியாவில் 1374 மரணங்கள் மின்னல்தாக்குதலால் நடந்துள்ளன.

இந்திய அளவில் மேகத்திலிருந்து நேரடியாக தரையில் மின்னல் தாக்கும் சம்பவங்கள், கிழக்கு, மத்திய இந்தியப் பகுதிகளில்தான் அதிகம். சேதாரமும் உயிரிழப்பும் கூடுதல்தான். இதே சமயம், இராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் பாலைவன- அரைப் பாலைவன வெப்பநிலை கொண்ட பகுதிகள் மின்னல்களின் புதிய ஹாட்ஸ்பாட்களாக உருவாகியுள்ளன. பொதுவாகவே நாடளவில் மின்னலின் தாக்கம் அதிகமுள்ள மத்தியப்பிரதேசத்தில் கங்கை- சோனி ஆறுகளுக்கு இடைப்பட்ட கைமூர்- சத்புரா பகுதி, பீகார், உத்தரப்பிரதேசம் ஆகியவையும் மின்னல் ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.

இதில், பீகாரில் குறிப்பாக அதிகரித்திருப்பதற்குக் காரணம், அங்கு பனை மரங்கள் வெட்டப்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2014இல் அங்கு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டதுதான் என்கிறார்கள். தமிழ்நாட்டைப் போல அல்லாமல், அதிகமாக பனங்கள்ளுதான் அங்கு மதுவில் முன்னிலை வகித்துவந்தது. அதற்குத் தடை விதிக்கப்பட்டதால், கள் இறக்குவோரும் விவசாயிகளும் பனையை நடவுசெய்வதைக் கைவிட்டுவிட்டனர் என்கிறார் அங்குள்ள தேசிய பாசி மக்கள் சேனையின் தலைவர் சுஜீத் குமார் சௌத்ரி.

கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு பனை மரங்களால் எந்தப் பயனும் இல்லையென அதை வெட்டிச் சாய்க்கத் தொடங்கினார்கள்; மொத்த மரங்களில் கடந்த 9 ஆண்டுகளில் 40 சதவீத மரங்கள்தான் மிஞ்சியுள்ளன என்கிறார் அவர்.

2016இல் 282ஆகப் பதிவான மின்னல் உயிரிழப்புகள், படிப்படியாக அதிகரித்து, 2022இல் 329ஆகப் பதிவானது. இடையில் 2019இல் 400 பேர் மின்னல் தாக்கி அங்கு உயிரிழந்துள்ளனர்.

பனை வளம்
பனை வளம்

இந்தப் பின்னணியில் பீகார் மாநில அரசு இப்போது, ஏராளமாக பனை மரங்களை நடவும், பனை நீரா பானத்தை விற்பனைசெய்யவும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பனை மரங்களை நடுவது, சீசன் காலத்தில் 3.9 கோடி லிட்டர் நீரா பானத்தை உருவாக்குவது என்றும் இதன்மூலம் சுமார் 20 ஆயிரம் பனையேறிகள் பயனடைவார்கள் என்றும் அந்த மாநில அரசு கூறியுள்ளது.

இந்தியாவின் மின்னல் பாதிப்புப் பகுதிக்கு அருகில் உள்ள வங்கதேசத்தில் ஆண்டுக்கு 300 முதல் 400 பேர் வரை மின்னல் தாக்கி இறந்துபோகின்றனர்; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் அங்கு 10 இலட்சம் பனை மரங்களை நடும் திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்தினார் என்கிறார், டாக்காவில் உள்ள ஆசியவியல் பெண்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் பால்ராஜ் மோசே செல்வகுமார்.

பேராசிரியர் பால்ராஜ் மோசே செல்வகுமார்
பேராசிரியர் பால்ராஜ் மோசே செல்வகுமார்

”பனையின் உயரம் காரணமாக, மின்னல் தாக்குதல்களை அவை உள்வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு; எனவே, மின்னல் தாக்கப் பகுதிகளில் இந்த மரங்களை நடுவது அவசியம்; வங்கதேசத்தைப் பொறுத்தவரை மரக்கன்றுகளாக நடுகிறார்கள்; காட்டுப்பன்றிகள், கரடிகள் போன்றவை பனை விதைகளைப் போட்டால், தரையைத் தோண்டி அவற்றை தின்று அழித்துவிடுகின்றன; ஆனால் மரக்கன்றுகளாக வளர்த்து நடுகையில் அவை அவற்றின் பக்கமே போவதில்லை; ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ளதைப் போல பனை விதையைப் போடுவதுதான் சிறந்தது; தாங்குதிறன் விதைக்குக் கூடுதல்; பாறையான பகுதியில்கூட நன்றாக வளரும்.” என விவரித்த பேராசிரியர் பால் மோசே, தமிழக அரசின் முயற்சி குறித்து விமர்சிக்கவும் செய்கிறார்.

மாநிலத்தில் தி.மு.க. அரசு வந்த பிறகு, 2021-22 நிதிநிலை அறிக்கையில், பனை மேம்பாட்டு இயக்கம் என புதிதாக அறிவிக்கப்பட்டது. அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டன. 2022-23 வேளாண் பட்ஜெட்டின்படி, ரூ.2.02 கோடியில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ரூ.30 லட்சத்தில்10 லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டன. 

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் 430 இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன என்கிறது அரசின் தரவு.

“அரசின் சார்பில் பெயரளவுக்காவது இதைச் செய்திருப்பது நல்லது. ஆனால் இது அடிப்படையில் மக்கள் பயன்படும்படியாக செயலூக்கமானதாக இல்லை. பனையை விதைத்துவிட்டதோடு வேலை முடிந்தது என இருந்துவிடக்கூடாது. தொடர்ந்து அதன் வளர்ச்சியைக் கண்காணித்து கவனிக்கவேண்டும். உயிரிழப்புகள் நிகழக்கூடிய விளையாட்டுத் திடல், வயல் வெளிகள், பூங்காக்கள், கல்லறைத் தோட்டங்கள், கால்வாய்ப் பகுதிகள் என இடம்பார்த்து பனையை நடவுசெய்வதில் அரசு கவனம் எடுக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால், பனை வளர்கையில் அதன் இலை மட்டைகளில் பறவைகள் எச்சமிடும். அதில் மற்ற மரங்கள் வளருவதைப் பார்க்கமுடியும். வெறும் பனை மட்டுமல்ல, இதன் மூலம் பனைச் சூழல்தொகுதியே உருவாக்கவும் முடியும்.” என பனையாண்மை, பனைப் பொருளாதாரம் குறித்த திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்.

பனையேறி பாண்டியன்
பனையேறி பாண்டியன்

”பனை நடவை அரசும் பனைத் தொழிலாளர் வாரியமும் கிரீன்நீடா அமைப்புடன் சேர்ந்துசெய்கின்றன; இந்த வேலையைச் செய்வது அரசின் வேலை அல்ல; நடப்படும் பனைகளைப் பாதுகாக்கவும் பனைசார் தொழில்களை மேற்கொள்ளவும் வருவாய் ஈட்டவுமான வழிகளையே அரசு செய்துதர வேண்டும்.” என்கிறார், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன்.

பால் மோசே உட்பட பல சூழலியல் ஆசிரியர்களும், வல்லுநர்களும் முக்கியமாகக் குறிப்பிடுவது, பனை மரத்தின் கூடுதலான ஈரத்தன்மையை! மிக உயரமான மரம் என்பதுடன், பனை மரத்துக்குள் இருக்கும் நீர்ப்புத்தன்மை மின்னலின் அளவுகடந்த மின்சாரத்தை உள்வாங்கிக் கொண்டு அதைத் தரைக்குக்கடத்தி விடுவதால், அதைச் சுற்றியுள்ள மனிதருக்கோ மற்ற விலங்குகளுக்கோ பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதுதான்!

இயற்கையின் பாதகம் ஒரு பக்கம் அதிகரித்தாலும், அதை முறியடிக்க அதே இயற்கையே நமக்கு வழியையும் காட்டுகிறது.

அதைக் கடைப்பிடிக்கப் போகிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி!

logo
Andhimazhai
www.andhimazhai.com