யூட்டியூப் வலைக்காட்சியில் காண்பிக்கப்படும் காணொலித் துணுக்குகளில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவை தரம்குறைந்த ஏஐ உள்ளடக்கங்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களை கண்டமேனிக்கு நிரப்பிவரும் இப்படியான காணொலிகள் மூலம் பயனாளிகள் ஆண்டுக்கு 11.7 கோடி டாலர் வருமானம் ஈட்டியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தரம்குறைந்த இந்த ஏஐ உள்ளடக்கங்கள், அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது.
பிரபல காணொலி தொகுப்பு நிறுவனமான கப்விங் உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் 15 ஆயிரம் யூட்டியூப் வலைக்காட்சி சேனல்கள் தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டது. இதில், ஒவ்வொரு நாட்டிலும் முன்னிலையில் உள்ள 100 சேனல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
முற்று முழுவதுமே தரம்குறைந்த ஏஐ செய்யறிவு நுட்பத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள 278 சேனல்களையும் ஆய்வு வெளிக்கொண்டுவந்துள்ளது.
இதை ஆங்கிலத்தில் ஏஐ ஸ்லாப்- AI slop உள்ளடக்கம் என்கிறார்கள்.
இந்த ஏஐ ஸ்லாப் உள்ளடக்கங்கள் 6,300 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இவற்றின் சந்தாதாரர்கள் 22.1 கோடி பேர்!
இந்த ஏஐ ஸ்லாப் உள்ளடக்கம் மூலம் யூட்டியூபில் ஆண்டுக்குக் கிடைக்கும் வருமானம் 11.7 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1,053 கோடி ரூபாய்.
அப்பாடி என்கிறீர்களா... இருக்கத்தானே செய்யும்!
இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் புதிதாக ஒரு யூட்டியூப் கணக்கைத் தொடங்கினார்கள். அதில் காட்டப்பட்ட குறிப்பாகப் பரிந்துரைக்கப்பட்டு காட்டப்பட்ட 500 வீடியோகளில் 104 காணொலித் துணுக்குகள் ஏஐ ஸ்லாப் வகையறாவாக இருந்துள்ளன.
மூன்றில் ஒரு பங்கு இந்த வகையுடன் அதிகப் பணம் பெறும் நோக்கத்துடன் தரம்குறைந்த உள்ளடக்கமாக இருந்துள்ளன.
இந்த ஆய்வு முடிவுகள் எக்ஸ் தளம் முதல் மெட்டா, யூட்டியூப்வரை பெரும் சமூக ஊடகத் தளங்களை தரக்குறைவான உள்ளடக்கம் நிரப்பிவருவதன் பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல என்கின்றனர், சமூக ஊடக வல்லுநர்கள். இவற்றின் உள்ளடக்கம் ஒருவகையான சர்வதேசத் தன்மையுடனும் போதைக்கு அடிமையாக்குவதைப் போலவும் உள்ளீடற்ற தன்மையுடனுமே இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
கார்டியனின் ஒரு ஆய்வில், 10 சதவீதமான விரைந்துவளரும் யூட்டியூப் சேனல்கள் இந்த ஏஐ ஸ்லாப் வகையறாதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அதிகாரபூர்வமற்ற தகவல்களை நீக்குவதற்கு முயல்வதாக யூட்டியூப் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படியான உள்ளடக்கங்கள் பல பத்து இலட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிவிடுகின்றன என்பது வியப்பாக உள்ளது.
இப்படியான சேனல்கள் உள்நாட்டிலோ சில நாடுகளிலோ மட்டுமல்ல உலக அளவில் பரவலாகியுள்ளவை. அதற்கேற்ப பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அள்ளுகிறது. இவற்றுக்கு நாடளவில் பல பத்து இலட்சம் பேர் பார்வையாளர்கள். ஸ்பெயினில் அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் அதாவது 2 கோடி பேர் இந்த ஏஐ சேனல்களைத் தொடர்ந்து பார்க்கிறார்கள். எகிப்தில் 1.8 கோடி பேர், அமெரிக்காவில் 1.45 கோடி பேர், பிரேசிலில் 1.35 கோடி பேர்.
இந்த மொத்த ஆய்விலும் அதிகமான பார்வைகளைக் கொண்ட சேனல் பந்தர் அப்னா டோஸ்ட். இதன் பார்வைகள் எவ்வளவு என்பதைக் கேட்டால் மயக்கம் அடைந்துவிடவும் வாய்ப்பு உண்டு... 240 கோடி பார்வைகள்!
இது எந்த நாட்டைச் சேர்ந்தது என்கிற கேள்விக்கே இடம் வேண்டாம்.
எல்லாம் நம்ம இந்தியாக்காரவுக...தேன்!
ஆனால் என்ன, கார்டியன் ஆய்வுக் குழுவினர் கருத்துக்கேட்கத் தொடர்புகொண்டபோது மட்டும் மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள்!
எதிர்முனையில் சத்தமே காணோம் எனச் சொல்கிறார்கள்!