நேபாள பிரளயப் பின்னணி- அடுத்த பிரதமர் கர்நாடகப் பட்டதாரி?

நேபாள இளைஞர்கள் போராட்டம்
நேபாள இளைஞர்கள் போராட்டம்
Published on

பனிமலையான இமயமலையில் எரிமலையாக வெடித்த இளைஞர் எழுச்சி, அந்த நாட்டின் ஆட்சியாளர்களை தாங்களாகவே பதவிவிலக வைத்ததுடன், தப்பித்தோம் பிழைத்தோம் என தப்பியோடச் செய்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் ஆறு அன்று காலை காட்மண்டுவில் சாலையைக் கடக்கிறாள் ஒரு 11 வயது மாணவி. அவளை இடித்து விட்டு நிற்காமல் செல்கிறது ஒரு கார். அதில் பயணம் செய்தவர் ஆளும் கட்சியின் மாநில அமைச்சர் ஒருவர். அந்த காருக்கு பின்னால் பைக்கில் வந்த பெண் ஒருவர், அந்த மாணவிக்கு உதவி செய்து காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகத்தில் பரவ, ஆளும்கட்சி பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நேபாள பிரதமர், சம்பந்தப்பட்டவர் தனக்கு வேண்டிய அமைச்சர் என்பதால் இது ஒரு சாதாரண விஷயம்தான். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிவிடலாம் என்கிறார். கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் ஒரே நாளில் வெளியே வந்துவிடுகிறார். இவ்வளவும் சமூக ஊடக கொந்தளிப்புகளின் நடுவே நடக்கிறது. இதைத் தொடர்ந்தே சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட, அதில் செயல்பட்டு வந்த வந்த இளைஞர்கள் கொந்தளித்து தெருவுக்கு வந்தனர்.

இவ்வளவு பெரிய விவகாரம், கடந்த ஓரிரு நாள்களில் அதிரடியாக நடைபெற்றுள்ளது என்றே பரவலாக ஓர் எண்ணம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக, மேலே சொன்ன இந்த சம்பவம் இதற்கு உடனடித் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த அதிருப்திக்கு பலமான பின்னணி அங்கே இருக்கிறது.

பல மாதங்களாகவே நேபாளத்தில் அரசுக்கு எதிரான அதிருப்திக் குரல்கள் தொடர்ந்து ஒலித்தபடி உள்ளன. சமூக ஊடகங்கள் மூலமாக இந்தக் குரல்கள் நேபாளத்திலும் அந்நாட்டிலிருந்து பிழைப்புக்காக இடம்பெயர்ந்து வாழும் நேபாளிகள் மத்தியிலும் உடனுக்குடன் பரவிவிடுகின்றன. அந்த அளவுக்கு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்பதுதான்!

கடந்த 2008ஆம் ஆண்டில் மன்னராட்சி அகற்றப்பட்டு, மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரச்சந்தா தலைமையில் மக்களாட்சி அரசு அமைக்கப்பட்டது. ஏராளமான நேபாளிகள் எதிர்கால நம்பிக்கையில் நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை விரைவிலேயே பொய்த்துப்போனது.

தற்போதைய நிலவரப்படி, 2024ஆம் ஆண்டில் நேபாளத்தின் ஜிடிபியில் 33 சதவீதம் வெளிநாடுகளில் பணியாற்றும் குடிமக்கள் அனுப்பும் பணம்தான். உலக அளவில் இந்த அளவுக்கு, நாட்டின் மொத்தப் பொருளாதாரமே வெளிநாடுகளில் வசிக்கும் நேபாளிகளின் பணத்தைச் சார்ந்திருக்கிறது என்கிறது உலக வங்கியின் புள்ளிவிவரம்.

மூன்று கோடி பேரைக் கொண்ட இந்த நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் 8 இலட்சத்து 39 ஆயிரத்து 266 பேருக்கு, வெளிநாட்டு வேலைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைக்காக நாட்டைவிட்டு வெளியே செல்கின்றனர். காரணம், உள்நாட்டில் வேலைவாய்ப்பு போதுமானதாக இல்லை என்பதைவிட, படித்தவர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இருக்கும் பொருளாதாரத்தை வைத்து படித்த, தகுதிபெற்ற இளைஞர்களுக்கு ஏற்ப உள்நாட்டில் நம்பகமான, ஓரளவுக்கு நீடிக்கக்கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசுத் தரப்பில் சுணக்கமாகவே இருந்துவருகின்றனர்.

பதினெட்டு ஆண்டுகள் மக்களாட்சியில் அடுத்தடுத்து வரும் அரசுகள் கூட்டணி பிரச்னையால், கலைவதும் திரும்பத் திரும்ப மறுதேர்தலும் என அரசு நிர்வாகம் உறுதியற்ற தன்மையிலேயே தொடர்ந்துவருகிறது. இதனால் உறுதியான திட்டங்களை உருவாக்கவோ செயல்படுத்தவோ முடியாத நிலை!

அரசியலாக இதற்கு ஆயிரம் கொள்கை நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைக் கேட்க இளைஞர்கள் தயாராக இல்லை. ஏனென்றால், மன்னராட்சி ஒழிந்தாலும் தனிமனிதத் துதி, வழிபாட்டுத் தன்மை மக்களாட்சியிலும் தொடர சமூக ஊடகங்கள் வழிவகுத்துவிட்டன.

ஆயுதப் புரட்சி நடைபெற்ற நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் அமைந்ததும் மக்களுக்கு பெரிய ஜனநாயக வெளி கிடைத்தது. சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் புழக்கத்துக்கு வந்தன. தொலைபேசிக் கட்டணம் மிகவும் கூடுதலாக இருந்த காலகட்டத்தில், இந்தச் சமூக ஊடகங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நேபாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகக் குறைந்த செலவிலான முக்கிய தகவல் தொடர்புக் கருவியாக மாறிப்போனது.

ஆயுதப் புரட்சி நடத்திய கட்சிகள் இன்னும் உயிர்ப்பாக இருந்தாலும்கூட, அரசு நிர்வாகத்தைச் செயல்படுத்துவதில் அவர்கள் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தும், ஆதரவை இழந்து ஆட்சியையும் இழந்தும் வலுவிழந்த சூழலில், சமூக ஊடகங்களில் தாறுமாறாக பொத்தாம் பொதுவாக அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியாக கருத்துகள் வெளியிடப்பட்டன. இதில் பிரபலம் அடைந்து செல்வாக்கு பெற்றவர்கள், அரசியலில் நுழைந்தனர்.

இவர்கள் குறிவைத்துப் பேசியவை, நாட்டின் அரசு நிர்வாக பலவீனம், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகளின் கொட்டமடிக்கும் வாழ்க்கை- அதற்கு நேர்மாறாக மக்களின் வறுமை, குறிப்பாக, கொல்கத்தாவில் விபச்சாரம் செய்தும் பெண்கள் குடும்பத்துக்குப் பணம் அனுப்பும் அவல வாழ்வு, தலைவிரித்தாடும் ஊழல் முறைகேடு ஆகியவை!

காரணம், பெரும்பாலான மக்கள் இவற்றால் துயரமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதுதான்!

சமூக ஊடகங்களில் இளைஞர்களிடம் இவற்றைக் கொண்டுசென்று புதுவித அரசியல் முகங்களாக உருவானவர்களில் ஒருவரே, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவின் மேயர் பாலேந்திர ஷா.

பாலேன் ஷா
பாலேன் ஷா

பொறியாளரான இவர், அதே தொழிலில் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். சொந்தமாகவும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் நடத்துகிறார். ராப் பாடல் பாடுவதில் ஈடுபாடு கொண்ட இவர், சமூக ஊடகத்தின் மூலம் நாடறிய ராப் பாடகராக புகழ் முகம் ஆனார். அதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களையும் தோற்கடித்து பதவியில் அமர்ந்தார்.

பாலேன் ஷா என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு, 35 வயதுதான் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும். 1990 ஏப்ரல் 27ஆம் தேதிதான் இவர் பிறந்தார்.

இப்போது, நாட்டின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் இடத்துக்கு வந்திருக்கிறார். இவர், கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் படித்தவர்.

இப்படி சமூக ஊடகத்துக்கும் நேபாளிகளுக்குமான உள்ளுறவைப் புரிந்துகொள்ளாத அரசாங்கம், போகிற போக்கில் ஒரே நாளில் 26 சமூக ஊடகங்களுக்குத் தடைவிதித்தது, நிலவரத்தைக் கலவரமாக ஆக்கிவிட்டது.

இந்த சூழலில், இன்று காலையில் போராட்டம் ஓரளவுக்குக் கட்டுக்கு வந்துவிட்ட சூழலில், இராணுவம் ஆட்சி நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளது.

அடுத்த பிரதமர் யார் எனும் வரிசையில், பாலேன்ஷாவும் வரிசையில் இடம்பிடித்துள்ளார் என்பது ஒரு வரிச் செய்தி அல்ல, பல பாடங்களை அளிக்கக்கூடிய சேதி என்பதே நிதர்சனம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com